“எந்த நடிகரையும் தாழ்த்திப் பேசவில்லை” - சர்ச்சைக்கு தில் ராஜு விளக்கம்

By செய்திப்பிரிவு

‘‘எந்த நடிகரையும் தாழ்த்தியோ, உயர்த்தியோ பேசவில்லை. நல்ல படங்களை எப்போதும் ஆதரிப்பேன்” என ‘வாரிசு’ பட தயாரிப்பாளர் தில் ராஜு விளக்கமளித்துள்ளார்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார். அவர் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் அவர், “தமிழகத்தில் விஜய் நம்பர் ஒன் ஸ்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் உதயநிதி ஸ்டாலின் அஜித்தின் ‘துணிவு’ படத்தை வெளியிடுகிறார். விரைவில் சென்னைக்கு சென்று அவரிடம் எனக்கு கூடுதல் திரைகளை ஒதுக்குமாறு கேட்கப் போகிறேன். நடிகர் விஜய், அஜித்தை விட பெரிய ஸ்டார்” என தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், அதற்கு விளக்கமளித்துள்ள தில் ராஜு, “மீடியா முன்னால் எது பேசுவதாக இருந்தாலும் பயமாக இருக்கிறது. எது பேசினாலும் இப்போது சர்ச்சையாகி விடுகிறது. சமீபத்தில் ஒரு சேனலுக்கு 45 நிமிடங்கள் பேட்டி கொடுத்திருந்தேன். ஆனால், அதில் இருந்து ஒரு 20 செகண்ட் மட்டும் எடுத்து முன் பின் என்ன பேசி இருக்கிறேன் என்பதை முழுதாகப் பார்க்காமல் வைரல் ஆக்கிவிட்டார்கள்.

அந்த வீடியோவை முழுதாகப் பார்த்திருந்தால் நான் என்ன பேசியிருக்கிறேன் என்பது புரிந்திருக்கும். நான் மீடியாவுக்கு வைக்கும் வேண்டுகோள் இதுதான்... அந்த 20 செகண்ட் வீடியோவை வைத்து மட்டும் ஒருவரை ஜட்ஜ் செய்யாதீர்கள். ஒருவரை நக்கல் செய்வதிலோ, கிண்டல் செய்வதிலோ எனக்கு உடன்பாடில்லை. எந்த நடிகரையும் தாழ்த்தியோ, உயர்த்தியோ பேசவில்லை. நல்ல படங்களை எப்போதும் ஆதரிப்பேன். சினிமாவில் இன்னும் நான் சாதிக்க நிறைய இருக்கிறது” என பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE