Rewind 2022 | ‘விக்ரம்’ முதல் ‘லவ் டுடே’ வரை - வசூல் மழை பொழிந்த தமிழ்ப் படங்கள்

By கலிலுல்லா

வசூல் ரீதியாக தமிழ் சினிமாவுக்கு இது முக்கியமான ஆண்டாக கருதப்படுகிறது. காரணம் ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ திரைப்படம் இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் ரூ.200 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் மற்ற படங்களையும் பார்ப்போம்.

தமிழ் சினிமாவின் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிக முக்கியமான ஓப்பனிங்காக பார்க்கப்பட்ட இரண்டு படங்கள் அஜித்தின் ‘வலிமை’, விஜய்யின் ‘பீஸ்ட்’. அந்த வகையில் அஜித்தின் ‘வலிமை’ படத்தை எடுத்துக்கொண்டால் முதல் நாள் வசூலில் ரூ.36.17 கோடியுடன் முதலிடத்தை பிடித்தது. ரூ.150 கோடியில் படமாக்கப்பட்ட இந்தப் படம் ரூ.234 கோடி வரை வசூலித்து 2022-ம் ஆண்டை அமர்க்களமாக தொடங்கி வைத்தது. அடுத்து, விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படம் முதல் நாள் ரூ.27.40 கோடியை வசூல் செய்தது. படம் கிட்டத்தட்ட ரூ.237.60 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்து சூர்யா நடிப்பில் மார்ச் மாதம் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படம் முதல் நாள் ரூ.15.21 கோடியை வசூலித்தது. படம் கிட்டத்தட்ட ரூ.120 கோடி அளவில் வசூலித்ததாக தகவல் வெளியானது. ஆண்டின் முதல் பாதியில் இந்தப் படங்கள் வசூலை குவித்தாலும், இரண்டாம் பாதியில் வெளியான படங்களே வரலாற்று வெற்றிகளை நிகழ்த்தின.

கமலின் ‘விக்ரம்’ முதல் நாள் மட்டும் ரூ. 20.61 கோடியை வசூலித்தது. உலக அளவில் ரூ.432.50 கோடியை வசூலித்த இந்தப் படம் தமிழகத்தில் ரூ.180 கோடிக்கும் மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்தது. இந்தப் படத்தின் தமிழ்நாடு வசூல் புதிய மைல்கல் என கருதப்பட்ட நிலையில், ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ படம் களமிறங்கி தமிழ்நாட்டில் மட்டும் ரூ.200 கோடியை வசூலித்து புதிய சாதனையை படைத்தது. உலக அளவில் இந்தப் படம் ரூ.500 கோடியை எட்டியதாக தகவல் வெளியானது. இந்த கணக்கின் அடிப்படையில் பார்க்கும்போது, வணிக ரீதியாக தமிழ் சினிமாவுக்கு இது வரலாற்று சிறப்பு மிக்க முக்கியமான ஆண்டாக கருதப்படுகிறது.

சரி... இந்த பெரிய படங்களையெல்லாம் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் எதிர்பாராமல் சில ரூ.100 கோடி க்ளப் படங்களும் ஆச்சரியத்தை கொடுத்திருப்பது 2022-ம் ஆண்டின் ஸ்பெஷல் வரவுகள். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே-மாதம் வெளியான ‘டான்’ திரைப்படம் உலக அளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்தது.

தனுஷின் திருச்சிற்றம்பலம் முதல் நாள் ரூ.9.52 கோடி என மந்தமாக தொடங்கி 11 நாட்களில் ரூ.70 கோடி வரை வசூலித்தது. அதன் ஒட்டுமொத்த கலெக்‌ஷன் ரூ.100 கோடியை எட்டியிருக்கும் என கூறப்படுகிறது. தீபாவளி அன்று வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரூ.100 கோடியை எட்டி மாஸ் காட்டியது. சொல்லப்போனால், கார்த்திக்கு இந்த ஆண்டு மிக முக்கியமான ஆண்டு. காரணம் அவரது ‘விருமன்’ திரைப்படம் ரூ.50 கோடி வசூலை வாரிக் குவித்தது. அவர் இந்த ஆண்டு நடித்த மூன்று படங்களுமே மெகா ஹிட் என்பது கவனிக்கத்தக்கது.

அதேபோல ரூ.10 கோடி பட்ஜெட்டில் உருவான ‘லவ் டுடே’ ரூ.90 கோடி அளவில் வசூலித்து சிறிய பட்ஜெட் படங்களில் வருகையில் தனித்த இடத்தை பிடித்து சிறு படங்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது. இதையொட்டி செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் உருவான ‘கட்டா குஸ்தி’ இந்தாண்டின் குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூலை ஈட்டிய படங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது. ஃபேமிலி ஆடியன்ஸ்களிடையே வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலில் ரூ.50 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தாண்டின் எதிர்பாராத வெற்றி இது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ‘வலிமை’, ‘பீஸ்ட்’, ‘விக்ரம்’, ‘பொன்னியின் செல்வன்’ படங்கள் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து ஒருபுறம் நின்றாலும், மறுபுறம், ‘எதற்கும் துணிந்தவன்’ ‘டான்’, ‘விருமன்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘சர்தார்’, ‘லவ் டுடே’ படங்களும் வசூல் ரீதியாக குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்துள்ளன. ஆகவே, தமிழ் சினிமாவுக்கு 2022-ம் ஆண்டு வசூல் ரீதியாக மறக்க முடியாத ஆண்டு என்பதில் மாற்றமில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE