த்ரில்லர் வகைக்குள் உழன்று கொண்டிருக்கிற வெப் தொடர்களுக்கு மத்தியில் அசலான ஓர் வாழ்க்கையை அலங்காரமின்றி பேசிய தொடராகக் கவனிக்கப்பட்டிருக்கிறது, 'பேட்டைக்காளி'. ஆஹா ஓடிடி தளத்தில் இந்தத் தொடருக்காகவே 'சப்ஸ்கிரைபர்'களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது என்கிறார்கள். ‘அது 4 வருட உழைப்புக்கான
பலன்' என்கிறார், இயக்குநர் ல.ராஜ்குமார். ஏற்கனவே ‘அண்ணனுக்கு ஜே’ படத்தை இயக்கியவர்.
"ஜல்லிக்கட்டு பற்றி ஒரு டாக்குமெண்டரி பண்ணலாம்னு நினைச்சு, அதுக்கான வேலையில இறங்கினேன். திருச்சியில மாடுபிடி வீரர்களோட பழக்கம் கிடைச்சுது. கிடைச்ச தகவல்கள் பெரிய வாழ்க்கையை சொல்லுச்சு. சாதாரணமா ‘ஜல்லிக் கட்டுத்தானே’ன்னு கடந்து போயிடுற விஷயமில்ல அது. அதுக்குள்ள பெரும் வாழ்க்கையும் வேட்கையும் இருக்குங்கறது புரிஞ்சுது. இதை படமா பண்ணினா 2 மணி நேரத்துக்குள்ள முடிக்க வேண்டியிருக்கும். அதனால வெப் தொடரா பண்ணலாம்னு நினைச்சு ஆரம்பிச்சேன்" என்று தொடங்குகிறார் ராஜ்குமார்.
உண்மைச் சம்பவங்களை பின்னணியா வச்சு உருவாக்குனீங்களா..?
இது கற்பனை கதைதான். சில சின்ன சின்ன தகவல்களை, உண்மையா நடந்ததா சொல்லப்பட்ட விஷயங்களைச் சேர்த்திருக்கேன். திருச்சியில ராஜ் என்கிற ஒரு மாடு பிடிவீரர் கேரக்டரை, கலையரசனுக்கு வச்சேன். வாடிவாசலுக்கு மாட்டைக் கொண்டு போகும்போது, சர்ப்பம் எதிர்ல வந்தா மோசமான சகுனம்னு நம்பிக்கை இருக்கு. இதை போல பல விஷயங்களைச் சேர்த்திருக்கேன்.
நடிச்சிருக்கிற எல்லாருமே ஒரு கிராமத்துல வாழ்ந்த வாழ்க்கையை, கண்முன்னால காட்டியிருக்காங்க...?
இந்தக் கதையை எழுதும்போதே இவங்கள்லாம் நடிச்சா நல்லாயிருக்கும்னு நினைச்சு எழுதினேன். கிஷோர், கலையரசன், வேல ராமமூர்த்தி, ஆண்டனி, ஷீலா ராஜ்குமார்ன்னு எல்லாருமே வேணும்னு நினைச்சு எழுதினேன். அவங்க கதைக்குள்ள வந்ததும் தொடர் சிறப்பா மாறுச்சு. ஒவ்வொருத்தரும் அந்தந்த கேரக்டராகவே வாழ்ந்ததும் இந்த வெற்றிக்கு காரணம்னு நினைக்கிறேன்.
ஜல்லிக்கட்டு மாதிரியான கதையை ‘சீட்’ பண்ணி எடுக்க முடியாது. தத்ரூபமா எடுத்திருக்கீங்களே...?
உண்மைதான். படப்பிடிப்புக்குப் போறதுக்கு முன்னால ‘வொர்க்ஷாப்’ நடத்தினோம். புதுமுகங்களுக்கு கேமரா பயம் போறதுக்கான பயிற்சி கொடுத்தோம். மாடுகளை
பிடிக்க ‘ரிகர்சல்’ எடுத்தோம். இதுக் குன்னே, படத்துல ஹீரோ மாதிரி வர்ற காரி காளைய, சொந்தமா வாங்கி 2 வருஷமா வளர்த்தேன். திருச்சியில ஆபிஸ் போட்டு, புதுக்கோட்டை, சிவகங்கைன்னு எங்கெல்லாம் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடக்குதோ, அங்க இருந்து கிளம்பி போய் எடுத்தோம். அது பெரிய உழைப்பை வாங்கியிருக்கு.
மலையில அவ்வளவு மாடுகள் கூடுற காட்சி பிரம்மாண்டமா இருக்கு. எப்படி எடுத்தீங்க...?
அதை வத்திராயிருப்புல எடுத்தோம். பட்டியில இருந்து மாடுகளை அவிழ்த்து விட்டாங்கன்னா, மலைக்கு மேயப் போற மாடுகள், சுமார் 10 கி.மீ சுத்திட்டு, சாயந்தரமா, தானாவே பட்டிக்கு வந்திரும். அத்தனை மாடுகளும் அதை மேய்க்கிற ஒரு அஞ்சு பேரோட சத்தத்துக்கு மட்டும்தான் கட்டுப்படும். காலைல மொத்தமா போகும்போது, 2 நிமிஷத்துல அதை ஷூட் பண்ணிடணும். இல்லைன்னா, தனித்தனியா போயிரும். அதுக்காகக் காத்திருந்து ஷூட் பண்ணிய அனுபவம், இப்ப நினைச்சாலும் சிலிர்ப்பா இருக்கு.
கதையில சாதி பிரச்னை வருதே...ஜல்லிக்கட்டுல அது இருக்குதா என்ன...?
கதையில எந்த சாதியையும் பேசலை. பணக்காரன், ஏழைங்கறது எப்பவும் இருக்கறதுதானே. அதைதான் சொல்லியிருக்கேன். எந்த காலத்துலயும் ஜல்லிக்கட்டுக்குள்ள சாதி வந்ததில்லை. மாட்டோட திமிலை தழுவப்போற ஆக்ரோஷமான மாடுபிடி வீரனுக்கும், அவன்கிட்ட பிடிபட்டுடக் கூடாதுன்னு தன் ஆங்காரத்தைக் காண்பிக்கிற ஆவேசமான
மாடுகளுக்குமான சுகமான மோதல்தான் ஜல்லிக்கட்டுல நடக்கிற விஷயம். மற்றபடி எந்த பிரச்னையும் இல்லை.
வேல்ராஜோட ஒளிப்பதிவும் பிரம்மாண்டமா வந்திருக்கே...?
கண்டிப்பா. வாடியில மாடுகளுக்கு மத்தியில ஷூட் பண்றது சாதாரண விஷயமில்லை. 8 கேமரா வச்சு ரிஸ்க் எடுத்து பண்ணினார். அதனாலதான் அந்தக் காட்சிகள் மிரட்டலா வந்திருக்கு. சந்தோஷ் நாராயணன் இசையும் கதைக்கு பலம்னு நினைக்கிறேன்.
முக்கிய செய்திகள்
சினிமா
20 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago