பண்டோரா எனும் கிரகத்தில் வித்தியாசமான உருவத்தையும், நிறத்தையும் கொண்ட நவி இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் வாழும் பகுதியில் உள்ள இயற்கை கனிமவளங்களை சூறையாட நினைக்கும் ராணுவத்தினர், அந்த மக்கள் மீது போர் தொடுப்பதுடன் முதல் பாகம் முடிவடையும். அதன் நீட்சியாக தொடங்கும் தற்போதைய இரண்டாம் பாகமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ (Avatar: The Way of Water) படத்தில் ராணுவத்தால் பண்டோராவுக்கு அனுப்பப்பட்ட ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்) தனது மனைவி நெய்த்ரி (ஜோய் சால்டனா) மற்றும் தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். துரோகம் இழைத்த ஜேக் சல்லியை பழிவாங்க மிகப்பெரிய படையைத் திரட்டி வரும் கர்னல் குவாரிச் (ஸ்டீபன் லேங்) பழிதீர்த்தாரா? இல்லையா? பண்டோரா கிரகம் என்னவானது? - இதுதான் திரைக்கதை.
‘அவதார்’ எனும் மாய கனவுலகில் மிதக்கச் செய்து பிரமிப்பூட்டிய ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 13 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது. வெண்திரை வழியே நீலவண்ணம் செறிந்த அந்த மாய உலகிற்குள் இம்முறை வனத்தைக் கடந்து கடல் வழிப் பயணத்தில் நம்மை அழைத்துச் செல்கிறார் இயக்குநர். நவி இன மக்களின் நிறமும், கடலின் நீரின் நீல வண்ணமும் சங்கமிக்கும் இடத்தில் ஊடாக செல்லும் கடல்வாழ் உயிரினங்கள், வண்ணத்துப்பூச்சியின் அழகை விஞ்சும் மிதக்கும் பஞ்சு பூச்சிகள், கடல்நீருக்குள்ளியிருந்து ஒளி உமிழும் சின்ன சின்ன அழகிய உயிரினங்கள், விரிந்து குலுங்கும் பூக்கள், ஆச்சரியமூட்டும் டிராகன்கள், கருணையுள்ளம்கொண்ட ராட்சத மிருகம் என அட்டகாசமான காட்சி அனுபவத்தை கிராஃபிக்ஸின் வழியே கூட்டி தான் முன்பு படைத்த உலகை இன்னும் மெருகேற்றி அழகூட்டியிருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன்.
மிருகங்களோடும், மரம் செடி கொடிகளோடும் தங்கள் கூந்தலை ஒட்டவைத்து, அவற்றோடு உறவாடும் காட்சிகள், ராட்சத மிருகத்துடனான சிறுவனின் பாசம், கோபம் கொள்ளும்போது நவி மக்கள் வெளிப்படுத்தும் அந்த முகபாவனைகள் என ரசித்துப் பார்க்க திரை முழுக்க நீலத்துடன் புதுமையும் கலந்திருக்கிறது.
அந்த ஒட்டுமொத்த மாய உலகமுமே 3டி கண்ணாடியின் வழியே நம் கண்முன் விரிந்து, அந்த உலகில் நாமே சஞ்சரிப்பது போன்ற உணர்வை கொடுப்பதுதான் மொத்தப் படத்தின் க்ராஃபிக்ஸுக்கான வெற்றி. குறிப்பாக, எதிரிகளுடன் நவி இன மக்கள் நடத்தும் இறுதிக்காட்சி யுத்தம் அட்டகாசம்!
ஒளி - ஒலிக் கலவை, தொழில்நுட்பம், ஒளிப்பதிவு, பின்னணி இசை என நல்ல திரையரங்குகளில் காணும் பார்வையாளர்களுக்கு சிறந்த காட்சி அனுபவம் உறுதி. சாம் வொர்திங்டன், ஜோய் சால்டனா, ஸ்டீபன் லேங், கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நேர்த்தியான நடிப்பின் வழி யதார்த்தமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நம்முடன் உரையாடுவதன் உணர்வால் படம் உயிர்கொள்கிறது.
‘அவதார்’ படத்தின் முதல் பாகம் ஒரு புதிய உலகை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி விறுவிறுப்பையும், சுவாரஸ்யத்தையும் கூட்டியிருந்தது. அதன் நீட்சியாக நீளும் இந்த இரண்டாம் பாகத்தில் எந்தவித புதுமையையும் நுழைக்கப்படாமல் திரைக்கதையில் ஆங்காங்கே கற்பனை வறட்சி மேலிடுகிறது. காட்சிகளாக பிரமாண்டமாக விரியும் இப்படம் கதைக்குள்ளியிருந்து வெளிப்படும் சுவாரஸ்யம் சொற்பமே.
கனிம சுரண்டலுக்கு எதிராக நிற்கும் வேற்று கிரகவாசிகளின் அந்தப் போராட்டம், உறுதி என முதல் பாகத்திலிருந்த கதையின் அடர்த்தி, இரண்டாம் பாகத்தில் வெறும் குடும்பக் கதையாக சுருண்டு வறண்டிருப்பது ஏமாற்றம். வெறுமனே நாயகன் ஜேக் சல்லி தனது குடும்பத்தை எதிரிகளிலிருந்து காப்பாற்ற போராடிக்கொண்டும், சென்டிமென்ட் காட்சிகள் வழியே உரையாடிக் கொண்டுமிருப்பது சோர்வு.
மொத்தத்தில் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ அட்டகாசமான காட்சி அனுபவத்தை வழங்கி, குடும்பக்கதையாக வழிமாறி திரைக்கதையில் போதிய சுவாரஸ்யமின்றி வறண்டிருக்கும் நீ......ளம் தோய்ந்த ‘குடும்பங்கள் கொண்டாடும்’ ஹாலிவுட் படம்!
வீடியோ வடிவில் விமர்சனத்தை காண:
முக்கிய செய்திகள்
சினிமா
55 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago