“இனி அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்” - உருவக் கேலிக்கு வருத்தம் தெரிவித்த மம்முட்டி

By செய்திப்பிரிவு

இயக்குநர் ஜூட் அந்தனியை உருவக் கேலி செய்த நடிகர் மம்முட்டி, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, ‘இனி இப்படி நடக்காது’ என உறுதியளித்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த படம் ‘ஓம் சாந்தி ஓசானா’. இந்தப் படத்தின் இயக்குநர் ஜூட் ஆண்டனி, ‘ஒரு முத்தாஸி கதா’, ‘சாராஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படங்களைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் அடுத்தாக உருவாகும் படம் ‘2018’. கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 483 பேர் உயிரிழந்தனர். இதை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், குஞ்சகோ போபன், ஆசிப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, கலையரசன், நரேன், லால், இந்திரன்ஸ், அஜு வர்கீஸ், தன்வி ராம், ஷிவதா, கௌதமி நாயர் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இந்தப் படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் பேசிய நடிகர் மம்முட்டி, “இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப் தலையில் முடி இல்லாவிட்டாலும், அவருக்கு அதிகமான மூளை இருக்கிறது. டீசரைப் பார்த்தேன். சிறப்பாக வந்துள்ளது” என தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

‘ஒரு மூத்த நடிகர் இப்படிப் பேசுவதா?’ என பல விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனங்கள் குறித்து இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப் தனது ஃபேஸ்புக் பதிவில், மம்முட்டியின் கருத்து குறித்து தனக்கு எந்தக் கவலையும் அளிக்கவில்லை என்றும், இந்தப் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்குவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், தான் பேசியதற்கு நடிகர் மம்முட்டி வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ’ “அன்பர்களே, '2018' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் 'ஜூட் ஆண்டனியை' பாராட்டி உற்சாகத்தில் பயன்படுத்திய வார்த்தைகள் சிலரை காயமடையச் செய்ததற்கு வருந்துகிறேன். அத்துடன் இனி வருங்காலத்தில் இதுபோன்று நடக்காமல் பார்த்துகொள்வதில் கவனமாக இருப்பேன் என உறுதியளிக்கிறேன். நினைவூட்டிய அனைவருக்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE