“மதுரை எனக்கு ராசியான இடம்” - தியேட்டரில் ரசிகர்கள் மத்தியில் விஷால் நெகிழ்ச்சி

By என். சன்னாசி

மதுரை: “மதுரை எனக்கு ராசியான” இடம் என மதுரையில் லத்தி படம் திரையிடப்படவுள்ள தியேட்டரில் ரசிகர்கள் மத்தியில் தோன்றிய நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் நடித்த ‘லத்தி’ திரைப்படம் வெகு விரைவில் வெள்ளித்திரையில் வெளியாக உள்ளது. படத்தின் புரோமோஷனுக்காக மதுரை தங்க ரீகல் தியேட்டரில் ரசிகர்கள் மத்தியில் விஷால் தோன்றினார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது, அவர் பேசியதாவது:

“ஒவ்வொரு முறையும் மதுரைக்கு வரும்போதும் ‘நீங்கள் உறவினர் மாதிரி இருக்கிறீர்கள்’ என என்னை அழகு பார்க்கின்றனர் மதுரை மக்கள். மேடை என்றால் யாருக்கும் பொற்கையோ, சால்வையோ போர்த்த மாட்டேன். அதற்கான பணத்தில் இரு பிள்ளைகளை படிக்கவைக்கிறேன். நான் மட்டுமின்றி நாம் எல்லோரும் சேர்ந்து கஷ்டப்படுவோருக்கு உதவி செய்ய வேண்டும். லத்தி படத்திற்கென 4-வது மாடியில் இருந்து குதித்த போது, அடிப்பட்டு காயம் ஏற்பட்டது. கேரளாவில் சிகிச்சை பெற்றேன்.

மதுரை தங்க ரீகல் தியேட்டர் உரிமையாளர் நல்ல நண்பர். அவரது தியேட்டரில் பாண்டிநாட்டு தங்கம் படம் நன்றாக ஓடியது. மதுரையும், இத்தியேட்டரும் எனக்கு ராசியான இடம். இங்கு எனது படம் ஓடினால் தமிழகம் முழுவதும் கேட்கவே வேண்டாம்.

நாடக நடிகர் உள்ளிட்ட நலிந்த நடிகர்களின் வாழ்வாதாரத்திற்காக நடிகர் சங்கத்தினர் பாடுபடுகிறோம். ஆக்‌ஷன் எல்லோருக்கும் பிடிக்கும். அது உங்களிடம் இருந்தே கற்றுக்கொண்டேன். நானும் ‘மதுரைக்காரன் தான்டா’ என்ற வசனம் எனக்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த வசனத்தை எல்லா இடங்களிலும் பேச வைக்கிறார்கள். உங்களுக்கு நேரில் வந்து நன்றி சொல்ல ஆசைப்பட்டேன். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு தொகையிலும் நல்லது நடக்கிறது. அரசுக்கு வரி செல்கிறது” என்று அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து ரசிகர்கள் கேட்ட மதுரை உணவு உட்பட பல்வேறு கேள்விகளுக்கு நடிகர் விஷால் பதிலளித்தார்.

திருமணம் பற்றி ஒருவர் கேட்டபோது, பதலளித்த விஷால், ‘‘மதுரைக்கார பெண்ணை திருமணம் செய்ய ஆசைதான். அதுவும் உங்களது (ரசிகர்கள்) முன்னிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடக்க வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE