டிஎஸ்பி Review: நாயகன் பழிவாங்கியது வில்லனை மட்டுமல்ல..!

By கலிலுல்லா

ரவுடி ஒருவரை காவல் துறை அதிகாரி பழிவாங்கும் ‘புதிய’ கதைதான் படத்தின் ஒன்லைன். திண்டுக்கல்லில் பூ வியாபாரம் செய்யும் முருகபாண்டி (இளவரசு) தனது மகன் வாஸ்கோடகாமாவை (விஜய் சேதுபதி) எப்படியாவது அரசாங்க வேலையில் பணியமர்த்திட வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறார். இதனிடையே, அந்த ஊரின் பெரிய ரவுடியான ‘முட்டை’ ரவிக்கும், வாஸ்கோடகாமாவுக்கும் மோதல் வெடிக்க, ரவுடி ரவியை பழிதீர்க்க டிஎஸ்பி அவதாரம் எடுக்கும் வாஸ்கோடகாமா, இறுதியில் அவரை பழிவாங்கினாரா? இல்லையா? - இதுதான் படத்தின் திரைக்கதை.

தமிழ் சினிமாவில் பார்த்து, பழகி சலித்துப்போன கதையை மீண்டும் எடுத்து சலவை செய்து திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குநர் பொன்ராம். ஒருவித எதிர்பார்ப்புடன் தொடங்கும் படம் அதன் ஃப்ளாஷ்பேக் காட்சிகளுக்குள் நுழைந்து திண்டுக்கல்லில் திரைக்கதையாக விரிகிறது. நாயகனுக்கான அறிமுக பாடல், நாயகியின் மீதான காதல், அதையொட்டி ஒரு பாடல், காதலுக்காக சில காட்சிகள் இப்படியாக முதல் ஒரு மணி நேரம் கதையிலிருந்து விலகி சுவாரஸ்யமற்ற காதல் காட்சிகளால் நகர்கிறது படம். புதுமையில்லாத, சுரமற்ற அந்தக் காட்சிகள் நம்மை எந்த வகையிலும் ஆச்சரியப்படுத்தாமல் கடக்க, நாயகன் - வில்லன் மோதல் காட்சியும் அழுத்தமில்லாமல் முந்தைய படங்களை நினைவூட்டுகிறது.

மொத்தப் படத்தையும் சரிவிலிருந்து மீட்க ஒற்றை ஆளாக போராடும் விஜய் சேதுபதி ‘சேதுபதி’ படத்திற்கு பிறகு காவல் துறை கதாபாத்திரத்தில் கச்சிதம் காட்டுகிறார். தேர்ந்த நடிப்பில் சில இடங்களில் ஈர்க்கிறார். அறிமுக நாயகியாக அனுகீர்த்தி வாஸ் நடிப்பில் சில இடங்களில் போதாமை உணரமுடிகிறது. அவரது கதாபாத்திர எழுத்தின் பலவீனத்தால் அவருக்கான காட்சிகள் எதுவும் ஈர்க்கவில்லை.

இளவரசு, ஞானசம்மந்தம், ‘குக் வித் கோமாளி’ புகழ், தீபா சங்கர், சிங்கம் புலி, கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பை வெளிப்படுத்துகின்றனர். ஷிவானி போலீஸ் கதாபாத்திரத்தில் பொருத்தம். இரண்டாம் பாதியில் சொற்ப காட்சிகள் வந்தாலும் கவனம் பெறுகிறார். சிறப்புத் தோற்றத்தில் நடிகர் விமலின் இன்ட்ரோ காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

கதைக்களத்திற்கு ஏற்ற பின்னணி இசையில் தன்னுடைய வழக்கமான பெஸ்டை கொடுத்திருக்கிறார் டி.இமான். பாடல்களில் பேச்சுவழக்கான வரிகள் மெட்டிலிருந்து விலகி நிற்பதை உணர முடிகிறது. வெங்கடேஷ், எஸ் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் திண்டுக்கல் அழுகு கூடியிருக்கிறது.

கதைக்கு எந்த வகையிலும் பயன்படாத காட்சிகளும், திணிக்கப்பட்ட பாடல்களும், தர்க்கப் பிழைகளும், க்ளைமாக்ஸில் தீவிரமான சண்டைக்காட்சியின் இடையே வரும் சீக்வன்ஸ்கள் டிஎஸ்பி படத்தை வெகுஜன பார்வையாளர்களிடமிருந்து விலக்கிவிடுகிறது. இறுதியில் நமக்குத் தெரியவருவது ஒன்றுதான்: நாயகன், ரவுடி ‘முட்ட’ரவியை மட்டும் பழிவாங்கவில்லை...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE