கட்டா குஸ்தி Review: பாதி ஆட்டம் விறுவிறுப்பு... மீதி ஆட்டம்?

By கலிலுல்லா

கேரள மாநிலம் பாலகாட்டைச் சேர்ந்த கீர்த்தி (ஐஸ்வர்யா லக்ஷ்மி) குஸ்தி போட்டிகளில் அதீத ஆர்வம் கொண்டவர். சிறு வயது முதல் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு கோப்பையை வெல்லும் கீர்த்திக்கு நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருக்கிறது. குஸ்தி வீரராக இருப்பதாலேயே அவருக்கான வரன்கள் கைகூடாமல் விலகி செல்கின்றன. ஒரு கட்டத்திற்கு பிறகு சில பொய்களைச் சொல்லி கீர்த்திக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராவுக்கும் (விஷ்ணு விஷால்) திருமணம் நடத்தப்படுகிறது. சுமூகமாக செல்லும் திருமண வாழ்க்கையில் பொய்கள் வெளிச்சத்திற்கு வந்து பூகம்பமாய் கிளம்ப, தம்பதிகளின் வாழ்கையில் இடையில் புகுந்து குஸ்தி போடும் சண்டைதான் ‘கட்டா குஸ்தி’.

தனக்கான முக்கியத்துவம் கொண்ட கதைகளை கிளறி தேர்ந்தெடுக்கும் ஐஸ்வர்யா லக்ஷ்மி சமரசமின்றி அதேமாதிரியான கதையில் இம்முறை குஸ்தி வீராங்கனையாக களமிறங்கியிருக்கிறார். கிராஃப் வெட்டி, சேலையை ஏற்றிக்கட்டி எதிரிகளை பந்தாடுவதாகட்டும், குஸ்தி போட்டிகளிலும், ஆக்ரோஷமான கண்பார்வையிலும், விளையாட்டு வீராங்கனைக்கான லுக்கிலும், அதேசமயம் கிராமத்து பெண்ணாகவும் இருவேறு எல்லைகளில் நடிப்பில் உச்சம் தொடுகிறார்.

‘படிச்சவ அதிகாரம் பண்ணுவா... படிக்காதவதான் அடங்கி போவா’, ‘நீளமான முடியில்லன்னா அவ பொண்ணுல்ல; பையன்’ போன்ற பழமைவாத வசனங்களை பேசும் கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால். தனக்கு கிடைத்த இடங்களில் நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்கிறார். ஆணாதிக்கத்தின் மொத்த உருவமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் கருணாஸ் கதாபாத்திரத்தில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். தவிர முனிஸ்காந்த், காளிவெங்கட், ஹரீஷ் பேரடி துணை கதாபாத்திரங்கள் கதைக்கு பலம். ரெடின் கிங்க்ஸ் லீ தனக்கான ஸ்டைலில் சிரிக்கவைத்து தடம் பதிக்கிறார்.

‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தை இயக்கிய செல்லா அய்யாவு இந்தப் படத்தின் மூலம் மீண்டும் விஷ்ணு விஷாலுடன் கைகோத்திருக்கிறார். நாயகன் அறிமுகத்திற்கு ஒரு பாடல், திருமணத்திற்காக ஒரு பாடல், உள்ளூருக்கு ஒரு வில்லன், வெளியூருக்கு ஒரு வில்லன், கை நீட்டியதும் வந்த வேகத்தில் பவுன்சாகும் எதிரிகள் என தெலுங்கில் படம் வெளியாவதை கவனத்தில் வைத்து மசாலாவை தூக்கலாக்கியிருக்கிறார்கள்.

கணவன் - மனைவி உறவு முறையை மையமாக கொண்டுள்ள படத்தின் முதல் பாதி பரவலான பார்வையாளர்களை கவரும் வகையில் வேகமெடுக்கிறது. திருமணத்திற்காக கூறிய பொய்யை சமாளிக்க போராடும் நாயகி, மனைவியிடம் கெத்து காட்ட நாயகன் செய்யும் செயல்கள், ஆர்ப்பரிக்க வைக்கும் இடைவேளை என ‘கட்டா குஸ்தி’ முதல் ரவுண்டில் ஸ்கோர் செய்கிறது.

இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்திற்கு பிறகு எளிதாக கணிக்கக் கூடிய, க்ளிஷேவான காட்சிகள் துருத்திகொண்டு நிற்கின்றன. தர்க்கப் பிழைகளுடன் கூடிய காட்சிகளும், ஒட்டாத சென்டிமென்டும் திரையிலிருந்து நம்மை விலக்கிவிடுகின்றன.

மேலும், பெண்கள் குறித்து படம் முழுவதும் பேசும் வசனம் அபத்தத்தின் உச்சம். படத்தின் மையக் காரணமே பிற்போக்கதனத்தையொட்டி இருப்பதும், திரும்ப திரும்ப பெண்கள் குறித்து ஆண்கள் வகுப்பெடுப்பது, பெண்ணிடம் அடிவாங்கினால் அவமானம், கல்யாணத்துக்கு அப்றம் ஆண்கள் அடங்கி போக்கக்கூடாது என முழுக்க முழுக்க ஆணாதிக்க நெடி உச்சம்.

அதை இரண்டு மூன்று வசனங்கள் வழியாக பெண்களுக்காக பேசுகிறேன் என்ற பெயரில் க்ளைமாக்ஸில் க்ளாஸ் எடுப்பது, நடுநடுவே சம்பிரதாயத்திற்காக சமன் செய்ய வைக்கப்பட்ட வசனங்களால் பலனில்லை. படத்தின் பெரும்பாலான காட்சிகளும், வசனங்களும் 90 கால கட்ட சினிமாவுக்குள் பின்னோக்கி கொண்டு செல்கிறதா என்ற உணர்வு எழாமலில்லை.

அதேபோல படத்தின் தலைப்பான ‘கட்டா குஸ்தி’க்கு எந்த வகையிலும் நியாயம் சேர்க்காமல் அதை பெயரளவில் மட்டுமே தாங்கி நிற்கிறது படம்.

ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசையின் தேவை கூடுதலாக தேவைப்பட்டதை சில காட்சிகளில் உணர முடிந்தது. ஜனரஞ்சக சினிமாவுக்குத் தேவையான காட்சியமைப்பில் கச்சிதம் சேர்ந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன்.

மொத்தத்தில் வெகுஜன சினிமா பிரியர்களுக்கான அம்சங்களை கொண்ட பிற்போக்குவாத கருத்துகளை உள்ளடக்கியிருக்கிறது இந்த ‘கட்டா குஸ்தி’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE