இளையராஜாவுடன் இசையிரவு 17 | ‘பூமாலையே தோள் சேரவா...’ - அனுதினமும் கலை பழகும் காதல்!

By குமார் துரைக்கண்ணு

கீபோர்ட், கிடார், வயலின், வயோலா , செல்லோ, டபுள் பேஸ், பேஸ் கிடார், புல்லாங்குழல், வீணை, சிதார், மாண்டலின், செனாய், கிளாரிநெட், சாக்ஸோபோன், தபேலா, மிருதங்கம், ரிதம் பேட் உள்பட இவைகளின் வடிவங்கள் வேறு வேறாக இருந்தாலும், பெயர் ஒன்றுதான், இசைஞானி இளையராஜா என்பதுதான் அந்தப் பெயர். அதிலும் அவரது வயலின்கள் மட்டும் ஏன் மனங்களை இப்படி பாடாய்படுத்துகிறது? என்ற கேள்விக்கு இன்றுவரை விடை காணப்படவே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

கடந்த 1985-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘பகல் நிலவு’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'பூமாலையே தோள் சேரவா' பாடல்தான் அந்தப் பாடல். வயலின்களும் இசைஞானி இளையராஜாவும் என்று ஓர் ஆராய்ச்சியே செய்யலாம் என்றளவுக்கு அவரது இசையில் வெளிவந்த பல திரைப்படப் பாடல்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். இந்தப் பாடலை இளையராஜாவின் சகோதரரும், பாடலாசிரியருமான கங்கை அமரன் எழுதியிருப்பார். ராஜாவுடன் சேர்ந்து ஜானகி அம்மா இணைந்து பாடியிருப்பார். ஒரே நேரத்தில் வெவ்வேறு வரிகளை பாடகர்கள் பாடுவது போல அமைக்கப்பட்டிருப்பது இந்தப் பாடலின் இன்னொரு சிறப்பு. இசைஞானி ஒரு வரியை பாடும்போது, ஜானகி அம்மா வேறொரு வரியை பாடிக்கொண்டிருப்பார்.

அவனுக்கான அவளது காத்திருப்புகள் எப்போதும் அலாதியானவை. சந்திக்கும் இடமும், நேரமும் இருவருக்கும் நன்றாக தெரிந்திருந்தாலும், காலதாமதம் காதலில் தண்டனைக்குரிய குற்றமாகிறது. அவனோ, அவளோ தொடுவானத்தின் தூரத்தில் இருந்தால்கூட, சந்திப்பை தவறவிடுவதே இல்லை. தனக்காக அங்கு அவள் காத்திருப்பாள்
என்ற ஒற்றை உணர்வு அவனது மனசுக்குள் இறகு முளைக்க செய்கிறது.

சமவெளியற்ற செங்குத்து மலைச்சரிவு முழுவதும் நாயகனின் வருகைக்கு காத்திருக்கும் நாயகியைப் போலவே தனிமையில் காத்து நிற்கின்றன மரங்கள். மரங்களின் மேற்பார்வையில் மலைப்பரப்பு முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்து செழித்து சிரித்திருக்கின்றன செடிகொடிகள். சறுக்குப் பாதையில் வழுக்கி வரும் நாயகனின் மூச்சுக்காற்றிலும், வியர்வைத் துளிகளிலும் கலந்து மணக்கிறது காதல். ஓரிடத்தில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அசட்டை சிரிப்புடன் அவள்முன் வந்து நிற்கிறான். அவனது கலைந்து கிடக்கும் தலைமுடியை சரிசெய்தும், கழுத்தில் இறுக்கிய கைக்குட்டையை வீசியெறிந்தும் அவனை நேர்நிறுத்தி பார்வையால் சீர் செய்கிறாள்.

பாடல் தொடங்கிய முதல் 25 விநாடிகள் மேற்கூறிய தகவல்கள் அனைத்தையும் மிச்சம் வைக்காமல், வரிவரியாக விவரித்திருக்கும் இந்தப் பாடலின் தொடக்க இசை. அதுவும் வயலின்களின் சீறிப்பாயும் சீற்றத்தை, கீபோர்டும், புல்லாங்குழலும் சேர்ந்து தணிக்கும் தருணத்தில், வீணையும் சிதாரும் சேரும் அந்த அழகான இடத்திலிருந்து மீண்டும் ஒலிக்கத் தொடங்கும் புல்லாங்குழல் இசை அளவில்லா பேரன்பை கொட்டியிருக்கும். பாடலின் பல்லவியை,

"பூமாலையே தோள் சேரவா
பூமாலையே
ஏங்கும் இரு தோள்
தோள் சேரவா

ஏங்கும் இரு இளைய மனது
இளைய மனது
இணையும் பொழுது …
இணையும் பொழுது

இளைய மனது.
தீம்தனதீம்தன
இணையும் பொழுது …
தீம்தன…தீம்தன
ஓஓஓ..
பூஜை மணியோசை
பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே" என்று எளிமையான வார்த்தைகளில் இலக்கியத் தேன் பூசியிருப்பார் கங்கை அமரன்.

அவளும் அவனும் தனித்துக்கிடக்க பச்சைப் புல்வெளியில் நீல உடை தரித்து வெட்கத்தில் வானம் நோக்கும் காதலை பூ தூவி வாழ்த்துகிறது பக்கத்தில் இருந்த மரம். காதலால் சுற்றிச் சுழலும் அவளைப் போலவே அவனோடு சேர்ந்து சுற்றியது பூமி. அவளால் உண்டான காதல் நோய்க்கு அவளே மருந்தென உணர்ந்த காதலன் அவளது கழுத்தில் பதித்த முத்தங்களால் பூத்து கிறங்குகிறது மரங்கள். காதலர்களின் கரங்களுக்குள் இறுக்கமாய் மறைந்திருக்கும் காதலை கிளை பரப்பி நின்ற மரம் அவர்களது வழிதோறும் தேடுகிறதாய் காட்சிகள் அமைந்திருக்கும்.

இங்கு தொடங்கும் பாடலின் முதல் சரணத்திற்கு முன் வரும் இடையிசை, ஏன் இவ்வளவு லேட்? நான் எப்போது லேட்டாக வந்தேன்? அப்ப நான் பொய் சொல்றேனா? இல்லை நான் பொய் சொல்றேனா? என்பது போல் சண்டையிட்டுக் கொள்ளும் வயலின்களின் மேல் வானத்திலிருந்து பூமழைத்தூவி குளிர்விக்கின்றன புல்லாங்குழலும், கிடாரும். அதன்பின் வரும் வீணையின் நாதத்தில் சுகமான கீதமாகிறது இசைக்கருவிகளின் இந்த செல்லச்சண்டை என்பது போல் இசை போர் நிகழ்த்தியிருப்பார் இசைஞானி இளையராஜா.

அவள் வருவதற்குள் செய்து முடித்துவிடும் எந்த தவறையும் எளிதில் ஒப்புக் கொள்ளச் செய்துவிடும் அவளது கண்கள்.
தண்டனைகள் பார்ப்பதற்கு கடினமாக இருந்தாலும், பூக்களின் தாக்குதல் சுகமாகிறது. இருவரது காதலால் பூப்பெய்திய வானம் மழைத் தூவி வாழ்த்துகிறது. குடைபிடித்து நகரும் அவர்களின் பாதையில் படிகளாய் நீண்டு, துள்ளி குதித்து மகிழ்ச்சி கொள்கிறது மழை. அவனுடன் கழிக்கும் காதல் பொழுதுகளை மறக்காமல் நினைந்திருக்க வானத்தின் சாட்சியாக படம் பிடித்து மாட்டிக்கொள்கிறது மனது என்பதைப் போலத்தான் இந்த இடையிசையை காட்சிகள் நிரப்பியிருக்கும். பாடலின் முதல் சரணம்,

"நான் உனை
நினைக்காத நாளில்லையே
தேனினைத் தீண்டாத பூ இல்லையே
லலலா.

நான் உனை
நினைக்காத நாளில்லையே……
என்னை உனகென்று கொடுத்தேன்
தேனினைத் தீண்டாத பூ இல்லையே…
ஏங்கும் இளம் காதல் மயில் நான்

தேன் துளி பூவாயில்
லலலா.
பூவிழி மான் சாயல்
லலலா.
தேன் துளி பூவாயில்
லலலா.
பூவிழி மான் சாயல்

கன்னி எழுதும்
வண்ணம் முழுதும்
வண்டு தழுவும்
ஜென்மம் முழுதும் (2)

நாளும் பிரியாமல்
காலம் தெரியாமல்
கலையெல்லாம் பழகுவோம்
அனுதினம்.." என்று பாடலின் முதல் சரணம் எழுதப்பட்டிருக்கும்.

தூரத்து வானுயர்ந்த மலைகள், மரங்கள், பாறைகள், காய்ந்த சறுகுகளின் மேல் அவனோடு நீட்டிப்படுத்து காத்திருக்கிறது அவளுக்கான காதல். அவளைக் கண்ட அடுத்த கணமே அந்த தனிமையின் ஏக்கம் முழுவதும் பறந்து போகிறது. காதலனின் தோள் தொற்றி, முகம் பார்த்து ரசித்து சிரிக்கும் பொழுதுகளில் கடினமான பாறைகள் மெத்தைப் போல இலகுவாகி மிதக்கின்றன. யாருமற்ற சமவெளிகளின் தனித்து நிற்கும் மரங்களில் சாய்ந்து பரிமாறிக் கொண்ட காதலின் சுகத்தில் அவன் நெஞ்சணைத்து இளைப்பாறுகிறது காதல். புடவைக் கட்டிய பட்டாம்பூச்சியான அவளை அவன் தூக்கிச் சுமக்கும் தருணங்களை தவறவிட விரும்பாத தாவரங்கள் பச்சையாய் தழைத்து தலை நீட்டுவது போல் ராகதேவனின் இசை காட்சிகளாய் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

அவனோடு கைப்பிடித்துக் கடக்கும் போதெல்லாம் அவளுக்கு கடல், ஓடை போல் சுருங்கி விடுகிறது . அவர்கள் ஓடி விளையாடி காதல் கொள்வதை மீண்டும் மீண்டும் பார்க்க வருகின்றன அலைகள். தூர வானத்தின் நீல மேகமும், சிவப்பு சூரியனும், கடலோரத்தில் காதல் கொள்ளும் அவர்களின் பேச்சுக்களைக் கேட்டு ரசிக்கின்றன. முறிந்த கிளைகளின் மேலமர்ந்து காதல் கொண்ட நாட்களில் மஞ்சள் சூரியனும் இவர்களை ரசிக்க தவறியதில்லை என்பது போல் அமைந்திருக்கும் இரண்டாவது சரணத்திற்கு முன்வரும் இடையிசையை ராகதேவன் தொடக்கத்தில், கிடார், கீபோர்ட் கொண்டு இதமாக மீட்டியிருப்பார். சிறிய இடைவெளிக்குப் பின், மீண்டும் வயலின்கள் சிறகு விரித்து பறக்கத் தொடங்கும். அதன்பின் மீண்டும் வீணை மீட்ட சுகமாக செதுக்கி இசை மொழியை வார்த்திருப்பார் இளையராஜா. பாடலின் இரண்டாது சரணத்தை,

"கோடையில் வாடாத
கோவில் புறா…
ராவில் தூங்காது ஏங்க..
காமனை காணாமல்
காணும் கனா …
நாளும் மனம்
போகும் எங்கோ

விழிகளும் மூடாது
லலலா
விடிந்திட கூடாது
லலலா
விழிகளும் மூடாது……
லலலா
விடிந்திட கூடாது

கன்னி இதயம்
என்றும் உதயம்
இன்று தெரியும் இன்பம் புரியும்

காற்று சுதி மீட்ட
தாளம் நதி கூட்ட
கனவுகள் எதிர்வரும்
அனுபவம்" என்று சிக்கனமான சொற்களால் பரந்து விரிந்த காதல் வெளியை கட்டுப்படுத்தி கையாண்டிருப்பார் கங்கை அமரன்.

ஆடை உடுத்திய ஐம்புலன்களின் அறுஞ்சுவை அவளென்று அவனுக்கு தெரியும். இதை எப்படியோ தெரிந்து கொண்ட நீரோடை அவர்களை இன்னும் இணக்கமாக்குகிறது. சற்று நேரத்தில் காதல் தீயின் வெப்பம் தாங்காத நீரோடை முழுவதும் கொதித்து தகிக்கிறது. விலகிச் சென்றால் தீயாய் சுடும், அருகில் சென்றால் உறைந்துருகும் அதிசய தீ அவள். கண்களில் பரிமாறப்பட்ட சங்கேத கோடுகளை புரிந்துகொண்டு அவளுக்கு மிகஅருகில் அமர்ந்து கொண்ட காதல், குளிரில் தீ காய்கிறது. ராஜாவின் காதல் தீ நாளையும் பரவும்....

பூமாலையே தோள் சேரவா பாடல் இணைப்பு இங்கே

முந்தைய அத்தியாயம்: இளையராஜாவுடன் இசையிரவு 16 | ‘அந்திமழைப் பொழிகிறது...’ - இளமையை சுமையாக்கும் இமைகள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE