இளையராஜாவுடன் இசையிரவு 16 | ‘அந்திமழைப் பொழிகிறது...’ - இளமையை சுமையாக்கும் இமைகள்!

By குமார் துரைக்கண்ணு

41 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல இந்த உலகம் நிச்சயம் இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவுதான். ஒரு சிறிய அளவிலான மாற்றமாவது நிச்சயம் நடந்தேறியிருக்கும். ஆனால், இசைஞானி இளையராஜாவின் இசையும், பாடல்களும் மட்டும் அது உருவானபோது, ரசிகர்களுக்கு எத்தகைய அவதானிப்புகளை தந்ததோ, கொஞ்சமும் மாறாமல் இன்று வரை அதே இளமையுடன் இருப்பது அதிசயிக்கத்தக்க ஆச்சரியங்களில் ஒன்று. ஞானம் பொதிந்த அவரது இசை குறிப்புகளும், அதை வார்த்து வடித்த பெரும் இசைக் கலைஞர்களின் கூட்டணியும், அவரது இசை கோர்ப்புகளை எப்போது கேட்டாலும் ஈர்க்க செய்கிறது. அந்த வகையில், இந்தப் பாடலும் பலரது ரிபீட் மோட் பாடல்தான்.

கடந்த 1981-ம் ஆண்டு இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘ராஜபார்வை’ படத்தில் இடம்பெற்ற 'அந்தி மழை பொழிகிறது" பாடல்தான். இந்தப் பாடலும் இசைஞானி இளையராஜா கவிப்பேரரசு வைரமுத்து காம்போவில் வந்த ஆல்டைம் பேஃவரைட் வகை பாடல்தான். பாடலை எஸ்.பி.பியுடன் இணைந்து ஜானகி அம்மா பாடியிருப்பார்.

மிருதங்கத்தைத் தொட்டெழும் கோரஸின் துணையோடு தொடங்குகிறது இந்தப் பாடலின் தொடக்க இசை. பின் தாளத்துடன் சேர்ந்து வரும், கீபோர்ட், கிடார், வயலின்கள் உள்ளிட்ட ஸ்டிரிங் செக்சன் இசைக்கருவிகள் பாடலை கேட்பவர்களின் உயிர் வழி ஊடுருவும் தன்மை கொண்டவை.

அவன் கைப்பிடித்துக் கொண்டு நடக்கும்போதெல்லாம் புவியீர்ப்பு விசையை மீறி வளர்ந்த பெரு மரங்களின் கிளை போல் வான் நோக்கி படர்கிறது அவள் மனது. அவர்களது நான்கு கால்களின் காதல் தேடலுக்கு பூமி போதுமானதாக இருக்கவில்லை. சாலையோரத் திட்டுகள் மேலமர்ந்து பேசி தீர்த்தும், முடிவுறாததால், நீண்டு சரிந்த படிக்கட்டிகளிலும், இரும்பு பாலங்கள் மீதேறியும், பேருந்துகள் கடக்கும் மாநகரச் சாலைகளிலும் அவர்களது கைப்பிடிக்குள் சிக்கிக்கொண்டு சேர்ந்தே பயணிக்கிறது காதல். அலை வீசும் கடற்கரையின் மணற்பரப்பில் மோதி விளையாடி, யாருமற்ற மாடங்களில் அமர்ந்திருந்த நாட்களின் இரவு பகல் பொழுதுகள் கீபோர்டின் கருப்பு வெள்ளைக் கட்டைகளை மீட்டுவது போல சுகமாய் சுருங்குகிறது. ஹெட்செட் மாட்டிக் கொண்டு கேட்கும் நூறு வயலின்களின் வசீகரத்தில் வசமாக சிக்கியிருக்கிறது அவர்கள் காதல். இந்த இடத்தில் தொடங்கும் பாடலின் பல்லவியை,

"அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே" என்று எழுதியிருப்பார்.

அவை, அந்த அறைக்குள் உலக அதிசயமே நிகழ்த்தப்பட்டு கொண்டிருந்தாலும், யாருமற்ற தொடர் இருக்கைகளின் ஓரத்து இருக்கையில் அவனுக்காக காத்திருக்கும் அவளுடன் இறுக்கமாக அமர்ந்திருக்கிறது காதல். அவளது கண் முழுவதும் பரவியிருந்தும் ஹைலைட் செய்யப்பட்ட புருவ வளைவுகளுக்குள் சிக்கி கொண்டிருந்தது அவனுக்கான தேடல் என்பது போல காட்சிகளாக விரிந்திருக்கும்.

அதைத்தொடர்ந்து வரும் பாடலின் முதல் சரணத்துக்கு முன்வரும் இடையிசையில் சாரல் மழை போல் வயலின்களை சாமரம் வீச செய்து, மெல்லியதாக இசைக்கப்படும் புல்லாங்குழலில் பன்னீர் தூவியிருப்பார் இசைஞானி. இவைகளுக்குப் பின், தீர்மானத்துடன் தபேலா இசையுடன் சேர்ந்து வரும் ஆலாபானை ராகதேவனின் தேவகானம்.

வருங்கால இரவுகளின் கதைகளைப் பேசி சிரித்து மகிழ்ந்து அவனை முன்னமர்த்தி மிதக்க எத்தனிக்கும் அவளது ஆசைக்கு தடை போடுகிறது காற்று. அவள் விடவில்லை, இம்முறை அவனும் அவளும் அருகருகே அமர்ந்து அசைந்தாடியபடி கதைகள் தொடர அத்தனையும் கேட்டுவிட ஆவலாய் அவர்களை துரத்துகிறது காற்று. அந்தி சாயும் நேரத்தில், நீல வானம் முழுவதையும் குடித்து சிவப்பை கொப்பளித்திருந்தது கீழ் வானம். தொட்டு விடும் தூரம்தான் அவளும் கரையும் என்பதறிந்த அவனது அடி வயிற்றிலிருந்து பிறந்த ஆலாபனையின் தீர்க்கத்தின் வேகமறிந்து தீப்பிடித்த சூரியன் வெளிச்சம் மங்கி மறைந்து கொள்கிறது. பின் யாருமற்ற நீரோடைகளின் பக்கத்தில் பரவிக் கிடக்கும் பச்சையாய் அவளின் கைகோர்த்து ஆசுவாசமாக காதல் கொள்கிறது. இந்த இடத்தில் வருகிறது பாடலின் முதல் சரணம். அதனை

"தேனில் வண்டு மூழ்கும்போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து
மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கி கொண்டே
தாகம் என்பாய்

தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் .. சுட்டன கனவுகள்
ஆஆ.
இமைகளும் சுமையடி இளமையிலே" என்று எழுதியிருப்பார் கவிஞர் வைரமுத்து.

அவளுக்கான காத்திருப்புகளில் மரத்தடிகளின் கீழமர்ந்து தியானித்திருக்கும் அவனது மனமுழுக்க புகை போல் பரவி பரவசமடைகிறது அவளது நறுமனத்தின் வாடை. ஓடிவந்த வேகத்தில் பின்கழுத்தில் அவள் தந்த அன்பு முத்தத்தின் போதாமை, மறைவிடங்களில் பசுங்கொடி போல் படர்ந்து மலர்கிறது. மணற்பரப்புகளில் சாய்ந்துபடுத்து சலனம் கொள்ளும் அவனைப் பார்த்து சிரிக்கிறது தூரத்து வானம். ரசாயன கிடங்கில் பற்றியெரியும் தீ போன்ற அவளது நினைவில் சுட்டுப் பொசுக்கும் கட்டிலில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து திக்கிட்டு எழுந்த அவனையும், மெத்தென்ற பஞ்சுப்படுக்கை முழுவதுமே முள்ளாகி வலிக்க, துடிதுடித்தெழுந்த அவளையும் மோகம் கொள்கிறது காதல். அவளுக்கு வெகு அருகில் அவனும், அவனுக்கு வெகு அருகில் அவளும் இருக்கும்போது பார்வை தெரிந்தால் என்ன? தெரியாவிட்டால் என்ன? இருந்தும் பார்வை பரிசோதனை செய்யும் அவர்களின் முயற்சி தடங்களை இடறி, இடையூறு செய்கிறது காதல். இங்குதான் தொடங்கும் இரண்டாவது சரணத்துக்கு பின்வரும் இடையிசை. கீபோர்ட், கிடார், கோரஸ், வயலின், பெல்ஸ் பயன்படுத்தியிருப்பார். மழை குறித்த பாடல் இது என்பதை அங்கே இசைஞானி நினைவுபடுத்தியிருப்பார். சிறுத்துளியாய் தொடங்கி, பெருமழை போல் விரிவதை தனக்கே உரிய இசை மொழியால், இரண்டாவது சரணம் தொடங்குவதற்குள் வரும் சின்ன இடைவெளியில் நிகழ்த்தியிருப்பார் இளையராஜா.

அவன் மன சுவர் முழுக்க வரைந்து மாட்டப்பட்டிருக்கும் அவளது சித்திரம் இருக்கும் இடம் நோக்கி வணங்கும் அவனது தவிப்பில் ரசித்து நிற்கிறாள் அவள் . வெள்ளை காகிதத்தில் கருப்பால் தீட்டப்பட்ட அத்தனை சித்திரங்களும் அவளுக்கு அவனாகவே தெரிகிறது. மை தீட்டப்பட்ட அவளின் கண்களைப் ஒரே ஒருமுறை பார்த்துவிட்டு பார்வையே பறிபோனாலும் பரவாயில்லை என்ற அவனது எண்ண ஓட்டத்தின் வேகத்தில் மெழுகில் உருகும் திரியாகிறது. பூங்காக்களின் மேல் இணையாக உரசியபடியே சிரித்துக் கொண்டும், சவுக்கு காடுகளில் வேர் விரித்த மரங்களின் இடைவெளிகளையும் இருவரும் இணைந்து புதுப்பிக்கின்றனர். அவளது தூரிகையின் ஸ்பரிசத்தில் தூரத்தில் குடையுடன் நிற்கும் அவன்மேல் காதல் மழை ஓவியமாய் ஊற்றப்படுகிறது என்பதுபோல், இரண்டாவது இடையிசை காட்சிப் படிமங்களாக நமக்குள் பதிந்திருக்கும்.
தொடர்ந்துவரும் இரண்டாவது சரணத்தை,

"தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து
யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே
வேர்க்கின்றது

நெஞ்சு பொறு கொஞ்சம் இரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்" என்று வைரமுத்து எழுதி முடித்திருப்பார்.

காதலுக்கும், காதலர்களுக்கும் ஆடைகள் எப்போதும் அந்நியமானவை. அவள் சொல்லும் போதெல்லாம் கேட்காமல் இருந்துவிட்டால், மீண்டுமொருமுறை அவள் சொல்லிக் கொடுப்பாள் என்று அவனுக்கு தெரிந்திருந்தது. அதற்காக நீச்சல் குளத்திலா? என்ற கூச்சம் அவனோடு சம்மனமிட்டு அமர்ந்துகொள்கிறது. ஏற்கெனவே குளத்தில் குதித்து, தேங்கிக் கிடந்த நீர் முழுவதையும் சூடாக்கி தீமூட்டிய அவள் அவனை தண்ணீருக்குள் இழுத்து குளம் முழுவதையும் தீக்கிரையாக்கி, அவனை ஆரத்தழுவி குளிர்விக்கிறாள். பின் பேசி சிரித்து சேர்ந்து நடக்கும் அவர்கள் கையில் பிடித்திருக்கும் குடைக்குள் சிக்கியிருக்கும் மழை என்பது போன்ற உணர்வை தவறாமல் தரும் இரண்டாவது சரணத்தின் வரிகளும், இசைக்கோர்ப்பும். ராஜாவின் அமுதமழை நாளையும் கொட்டும்....

அந்திமழை பொழிகிறது பாடல் இணைப்பு இங்கே

முந்தைய அத்தியாயம்: இளையராஜாவுடன் இசையிரவு 15 | ‘ஆசைய காத்துல தூதுவிட்டு...’- ஏக்கம் தீரல ஆசையில் பார்க்கும்போது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்