தெறிப்புத் திரை 7 | Maja Ma - தன்பால் ஈர்ப்பு உறவும், ஒரு தாயின் மனப்போராட்டமும்!

By கலிலுல்லா

புற உலகின் அழுத்தங்களால் சிதைக்கப்படும் ஒரு பெண்ணின் உணர்வு சார்ந்த விருப்பங்களை குடும்பத்துக்குள் பொருத்திப் பேசும் படம்தான் ‘மஜா மா’ (Maja Ma).

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘ராம் - சேது’, ‘தாகத்’, ‘பிருத்விராஜ் சாம்ராட்’ என சில நேரங்களில் பாலிவுட்டை ஒரே குடைக்குள் அடைத்துவிட முடியாது. அந்தக் குடையிலிருந்து வெளியே கன்டென்ட் மழைக்குள் நனையும் படங்களும் அவ்வப்போது வரும். அப்படியான ஒரு படம்தான் மாதுரி தீட்சித்தின் ‘மஜா மா’. பெண்களுக்கு சமூகம் வழங்கியுள்ள கணவனுக்கு மனைவி, மகன்களுக்காக எதையும் செய்யும் தாய் என்ற டெம்ப்ளேட்டுகளுக்குள் அடங்கியிருப்பவர் பல்லவி படேல் (மாதுரி திக்சீட்). இதைத் தாண்டி நல்ல ஒரு டேன்சரும் கூட.

அவரது மகன் தேஜஸ் (ரித்விக்) அமெரிக்காவில் ஈஷா என்ற என்ஆர்ஐ பெண்ணை காதலிக்கிறார். பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஈஷாவின் பெற்றோர் ஒப்புக்கொள்கின்றனர். இறுதியில் இந்தியா திரும்பும் அவர்கள் தேஜஸின் குடும்பத்தை சந்திக்க, இடையில் பூகம்பம் ஒன்று வெடிக்க, இறுதியில் தேஜஸ் - ஈஷா காதல் என்னவானது, சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் திரைக்கதை.

கதையின் மேலோட்ட வடிவம் ஒரு குடும்ப - காதல் கதைக்கான அடிப்படைத் தளத்தை கொண்டிருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், படம் பார்க்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் மேற்கண்ட எண்ணங்களை தூளாக்கி வேறொரு கன்டென்ட்டை கட்டி எழுப்புகிறார் இயக்குநர் ஆனந்த் திவாரி. ஒருவரின் ‘பாலியல் சார்பு நிலை’யை குடும்பக் கதைக்கு நடுவே நுழைத்து, அதைச்சுற்றியும் உள்ள கதாபாத்திரங்களின் ரியாக்‌ஷன்களை அழுத்தமாக பதியவைத்திருக்கும் ஒன்லைன் அட்டகாசம்.

மொத்த குடும்பத்தின் கௌரவத்தையும், மானத்தையும் ‘மனைவி - தாய்’ ரோல்களை ப்ளே செய்யும் பெண் ஒருவர் மீது இச்சமூகம் தொடர்ந்து சுமத்தி வரும் சூழலில், அந்தப் பெண்ணின் பாலியல் உறவுத் தேர்வு மாறுப்பட்ட ஒன்றாக இருந்தால்..? அவரை சுற்றி இயங்கும் கணவன், மகள், மகன், மகனின் மாமனார் - மாமியார் என பொதுச் சமூகம் அதை எப்படி எடுத்துக்கொள்ளும் என்ற அழுத்தமான லைன் தான் படத்தின் அடர்த்தி.

மாதுரி தீக்‌ஷித்தைச் சுற்றியிருக்கும் அத்தனை பேரும் நம்மைப் போன்ற ஒரு பொதுச் சமூகம்தான். அந்தச் சமூகம் கொடுக்கும் புற அழுத்தம், மாதுரியின் உள் மனப்போராட்டம், குடும்ப கௌரவ டெம்ப்ளேட்டை காப்பாற்ற வேண்டிய தேவை என தன்பால் ஈர்ப்பாளர் ஒருவர் பெண்ணாக இருந்து எதிர்கொள்ளும் சவால்கள் நம்மையும் தொந்தரவு செய்கிறது. சீனியர் நடிகையாக அவரது சஸ்பென்ஸ் முக பாவனைகள், உணர்ச்சிகள், கோபம், வருத்தம், அழுகை என நடிப்பில் அத்தனை யதார்த்தம். உண்மையில் தன்பால் ஈர்ப்பாளர்களின் மனப்போராட்டத்தை திரையில் தீட்டியிருந்தார்.

வறட்சியற்ற, ஓவர் ட்ராமா இல்லாத ‘நச்’ வசனங்கள் படத்திற்கு பெரிய பலம். காலம் காலமாக தொடரும் பெரிய சிக்கல் தாயை தெய்வமாக்கி புனிதப்படுத்ததுதல். அதை படம் அசால்ட்டாக உடைக்கிறது. ஓரிடத்தில் தன் மகனிடம் மாதுரி, ‘நீ என்னை மனிதத்தன்மையுடன் பார்க்காமல் கடவுளாக்கியிருக்கிறாய்’ என்பார். அதனால் தான், தாயின் மாறுப்பட்ட உறவுத் தேர்வு மகனுக்கு அவமானமாக இருக்கிறது. இதே மாதிரியான பிரச்சினையைத் தான் ‘பதாய் ஹோ’ படமும் பேசியது. தாயானவர்களுக்கு தனிப்பட்ட விருப்பம் கூடாதா என்ற அழுத்தமான கேள்வியை வசனம் எழுப்பும் இடம் முக்கியமானது.

அடுத்து மாதுரியிடம் அவரது கணவர், ‘நான் உனக்கு நல்ல கணவரா இருந்தேன். நீ என்னைய குறை சொல்றியா?’ என கூறும்போது, ‘என்றைக்காவது ஒரு நாள் இருவரும் உறவு கொள்ளும்போது என்னுடைய விருப்பதை கேட்டிருக்கிறீர்களா? பின் எப்படி நல்ல கணவராக இருக்க முடியும்?’, ‘எப்பயுமே என்னுடைய விருப்பத்தை கேட்டதில்லை. இன்று மட்டும் என் பாலின விருப்பத்தை ஏன் கேக்குறீங்க’ என பேசும் வசனங்கள் மிரட்டுகின்றன. அதேபோல், என்ஆர்ஐ பெற்றோர் மூலம் ‘இந்தியப் புனிதத்தன்மை’கள் என்ற பெயரிலான போலியான வாழ்வியலை பகடி செய்த விதமும் கவனத்துக்குரியது.

எல்லாவற்றையும் தாண்டி, தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்து சமூகம் புரிந்து வைத்திருக்கும் புழுதியடைந்த கருத்தை ஒரு வசனத்தில் உடைக்கிறது படம். மாதுரியிடம் ‘நீங்க லெஸ்பியனா?’ என கேட்கும்போது அதை அவர் எதிர்கொள்ளும் விதமும் அதற்கு மறுமொழி உதிர்க்கும் விதமும் மெச்சத்தக்கவை. இறுதியில் ‘தன்பால் ஈர்ப்பு என்பது ஒருவர் மீதான அன்பின் நிமித்தமே தவிர, காண்பவர்களுடன் உறவு கொள்வதல்ல’ என உடைத்து பேசும் வசனம் ஒட்டுமொத்த படத்தின் முத்தாய்ப்பு.

இப்படியாக வசனங்களாகவும், காட்சிகளாகவும் படம் சொல்ல வரும் கருத்துகள் பிரசார நெடியற்று, சுவாரஸ்யமான திரைக்கதையுடன் பின்னப்பட்டிருப்பது ஈர்ப்புக்குரியது. உண்மையில் ‘மஜா மா’ சொல்லிப்புரியும் படமல்ல; மாறாக பார்த்துணரும் காட்சியனுபவம்.

முந்தைய அத்தியாயம் > தெறிப்புத் திரை 6 | கற்றது தமிழ் - சுடுதண்ணீர், கோகுல் சாண்டல், நெஜமாத்தான் சொல்றியா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE