மிரள்: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

குடும்பத்துடன் சுற்றுலா செல்லும்போது, முகமுடி அணிந்த நபரால் கணவர் கொல்லப்படுவதாகக் கனவு காண்கிறார், கட்டிடப் பொறியாளர் ஹரியின் (பரத்) மனைவி ரமா (வாணி போஜன்). அக்கனவுக்குப் பின் நிம்மதி இழந்து தவிக்கும் மனைவியைத் தேற்ற, சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறார் ஹரி. அங்கு குலதெய்வக் கோயிலில் வழிபாடு முடித்து ஊருக்குக் கிளம்புகிறார்கள். ஆள் அரவமற்ற சாலையில் கார்வரும்போது, ரமா கனவில் கண்டகாட்சிகள் அரங்கேறத் தொடங்குகின்றன. மனைவியையும் மகனையும் காப்பாற்ற ஹரி நடத்தும் போராட்டமும் அவர்களைக் கொல்லத் துடிக்கும் முகமுடி மனிதனின் நோக்கமும் என்ன என்பதுதான் கதை.

ஹாலிவுட் திகில் பட வகையில் ‘ஸ்லாஷர் த்ரில்லர்’கள் (Slasher thriller) மினிமம் கியாரண்டி வசூலுக்குப் புகழ்பெற்றவை. காரணம், நிமிடத்துக்கு நிமிடம் பயமுறுத்தும் விதமாகக் காட்சிகளை அமைத்திருப்பார்கள். அதேபோல், அடையாளம் தெரியாத கொலைகாரன் அல்லது சைக்கோவால் துரத்தப்படும் முதன்மைக் கதாபாத்திரங்கள், உயிரைக் காத்துகொள்ள ஓடும் ஓட்டத்தில், தங்களைப்பொருத்திக்கொள்ளும் பார்வையாளர்களின் உளவியல் அட்டகாசமாக வேலை செய்யும். தமிழில் இப்படி சில படங்கள் வந்திருந்தாலும், நேர்த்தியான ‘ஸ்லாஷர் த்ரில்ல’ரைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் எம்.சக்திவேல்.

இதுவரையில் பரத் நடித்து வந்திருக்கும் படங்களை முற்றாக மறக்கடிக்கச் செய்து, இதில் மனைவிக்காக நிற்கும் காதல் கணவராக, ஒரு கதாபாத்திரமாக உணர வைத்து விடுகிறார். அவ்வகையில் பரத்துக்குச் சிறந்த ‘கம் பேக்’ படமாக அமைந்துவிட்டது. தனது வலிகளைப் புதைத்து வைத்துக்கொண்டு காத்திருக்கும் மனைவியாக, வாணி போஜனும் சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ராஜ்குமார் நல்ல நடிகர் என்றபோதும், பரத்தின் நண்பர் பாத்திரத்துக்கு சுத்தமாகப் பொருந்தவில்லை. கதையில் முக்கியத்துவம் கொண்ட அவரது பாலியல் இச்சை, அழுத்தம் திருத்தமாக நிறுவப்படவில்லை. இதனால் முக்கிய திருப்பங்கள், சிறந்த திகில் நாடகமாக அமைந்தபோதிலும் அவை உப்புச் சப்பில்லாமல் நீர்த்துப் போகின்றன. கே.எஸ்.ரவிகுமார் கதாபாத்திரம் கூறும் விளக்கங்கள் தர்க்கத்துக்கு வெளியே நிற்கும் அபத்தங்கள்.

இரண்டாம் பாதியில் மலிந்திருக்கும் சிக்கல்கள் அனைத்தையும் இருளும் பளீர் ஒளியும் இணையும் நேர்கோட்டில் துலங்கும் ஒளிப்பதிவைக் கொடுத்துள்ள சுரேஷ் பாலா,கதை நகரும் உள்ளரங்கு, வெளிப்புறம் ஆகிய 2 களங்களிலும் நம்பகமான கலை இயக்கத்தைச் சாத்தியமாக்கி இருக்கும் மணிகண்டன் சீனிவாசன், கதாபாத்திரங்களின் உணர்வு நிலைகளைக் கடத்தும் இசையை வழங்கியுள்ள பிரசாத் எஸ்.என்., சிக்கலானத் திருப்பங்களைக் கொண்ட திரைக்கதையை குழப்பமில்லாத படத்தொகுப்பு மூலம் உள்வாங்க செய்யும் கலைவாணன்.ஆர் ஆகியோரின் தொழில்நுட்பப் பங்களிப்பே படத்தைத் தாங்கிப்பிடிக்கிறது.

குறைகளை மீறித் துலங்கும் முதன்மைக் கதாபாத்திரங்கள், தொழில்நுட்ப பங்களிப்பு ஆகியவற்றுடன் மிரளவைக்கும் முயற்சியில் நேர்த்தியான திரை அனுபவம் தருகிறது ‘மிரள்’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE