மகிழ்திருமேனி படத்தை செதுக்கியிருக்கிறார் - ‘கலகத் தலைவன்’ படம் குறித்து உதயநிதி ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

‘இயக்குநர் மகிழ்திருமேனி ‘கலகத்தலைவன்’ படத்தை செதுக்கியிருக்கிறார்’ என உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன். இத்திரைப்படம் நவம்பர் 18 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் மிஷ்கின், "இயக்குநர் மகிழ்திருமனி படங்களை நான் பார்த்ததில்லை. ஆனால் அவருடன் பழகியிருக்கிறேன். பழகுவதற்கு இனிமையான மனிதர் அவர். உதய் உடன் பயணித்தது மிகச்சிறந்த அனுபவமாக எனக்கு இருந்தது. உதயநிதி ஸ்டாலின் திரையில் அறிமுகப்படுத்த வேண்டியது நான் தான். ஆனால் அது நடக்கவில்லை. அவருடன் சைக்கோவில் பணிபுரிந்தேன், அவர் பணிவில் மிகச்சிறந்த நபர். அவருடன் வேலை பார்ப்பது அலாதியான அனுபவமாக இருக்கும். அவர் அர்ப்பணிப்பான நபர். அவர் தொடர்ந்து படங்கள் செய்ய வேண்டும். படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது, இந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று தோன்றுகிறது” என்றார்.

இயக்குநர் மகிழ் திருமேனி பேசியதாவது, “மிஷ்கின் படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவர் படத்தில் பின்னணி இசையில்லாமலிருந்தாலும் காட்சிகளில் ஒருவித இசைத்தன்மையிருக்கும். உதயநிதி எப்பொழுதும் பணிவாக இருக்க கூடிய நபர், அதனால் தான் அவர் இந்த உயரத்தில் இருக்கிறார். இந்த 10 வருடத்தில் அவர் தொடர்ந்து பல படங்களில் வித்தியாசமான பல கதாபத்திரங்களை ஏற்று அதை நம்பும் படி உருவாக்கியுள்ளார். இந்த படமும் அப்படி தான் இருக்கும், இந்த படம் உங்களை ஏமாற்றாது" என்றார்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "கலகத் தலைவன் பாடல் வெளியீட்டு விழாவிற்கு வந்த அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த படத்தில் பங்காற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் எனது நன்றிகள். மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை செதுக்கி இருக்கிறார். அவர் நிறைய நேரம் செலவழித்து, சிறப்பான காட்சிகளை தொகுத்து உருவாக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு பெரிய உழைப்பும், அர்பணிப்பும் கொடுத்துள்ளோம். இயக்குநர் மகிழ் திருமேனி சிறப்பான படத்தை உருவாக்கி கொடுத்துள்ளார். இந்த படம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE