யசோதா Review: சமந்தா ரசிகர்களுக்கு கவனத்துக்குரிய திரை விருந்து

By செய்திப்பிரிவு

யசோதா (சமந்தா) தன்னுடைய தங்கையின் மருத்துவச் செலவுக்காக வேறு வழியில்லாமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு வாடகைத் தாயாக ஏஜெண்ட் ஒருவரின் மூலமாக தனியார் நிறுவனத்தின் பராமரிப்பில் இருக்கிறார். மற்றொருபுறம் ஹாலிவுட் நடிகை ஒலிவியாவும், மாடல் ஒருவரும், தொழிலதிபரும் இறந்துகிடக்கிறார்கள். காவல் துறை இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க, யசோதா இருக்கும் தனியார் நிறுவனத்தில் பல முறைகேடான விஷயங்கள் நடக்கின்றன. இதை யசோதா எப்படி கண்டறிகிறார்? காவல் துறை விசாரிக்கும் வழக்குக்கும் யசோதாவுக்கும் என்ன தொடர்பு என்பதை சஸ்பென்ஸ் - த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கும் படம் தான் 'யசோதா'.

பெண் மைய உள்ளடக்கத்தை ஏற்று, தனது மொத்த நடிப்பையும் முதலீடாக்கி கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார் சமந்தா. வழக்கமான நடிப்பைத் தாண்டி கூடுதலாக ஆக்‌ஷன் காட்சி பொறுப்புகளையும் ஏற்று அதிலும் பாஸ் மார்க் வாங்குகிறார். சமந்தாவின் ரசிகர்களுக்கு நல்லதொரு திரைவிருந்து.

வரலட்சுமி கதாபாத்திரம் சில இடங்களில் ‘சர்கார்’ படத்தின் சாயலைக் கொடுத்தாலும் கதாபாத்திரத்திற்கான நடிப்பை வெளிப்படுத்த அவர் தவறவில்லை. தொடக்கத்தில் ‘ரக்குடு கேர்ள்’ (Rugged Girl) போல ஒரு பிம்பத்தை உருவாக்கிட்டு இறுதியில் டம்மியாக காட்சிப்படுத்திய விதம் சுத்தமாக ஒட்டவில்லை. அந்தக் கதாபாத்திரத்தை இன்னும் கூட ஆழமாக எழுதியிருக்கலாம் என தோன்றுகிறது.

டாக்டர் முகுந்தன் கதாபாத்திரத்தில் உன்னி முகுந்தன் நடித்துள்ளார். விஜய தேவரகொண்டா படங்களில் அவருக்கு டப்பிங் பேசியவர்தான் இந்தப் படத்தில் உன்னி முகுந்தனுக்கு டப்பிங் பேசியுள்ளார். அதனாலோ என்னவோ அவர் வரும் காட்சிகளில் விஜய தேவரகொண்டா நினைவு துருத்திக் கொள்வது தவிர்க்க முடியவில்லை. தவிர சம்பத், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்டோரின் நடிப்பும் கவனம் பெறுகிறது.

‘அம்புலி’, ‘ஆ’ போன்ற படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் ஹரி ஷங்கர் - ஹரிஷ் நாராயண் இருவரும் இணைந்து ‘யசோதா’வை இயக்கியிருக்கிறார்கள். வாடக்கைத்தாய் விவகாரத்தை கதைக்கருவாக எடுத்துக்கொண்டு அதையொட்டி திரைக்கதை உருவாக்கி இறுதியில் வேறொரு விஷயத்தை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கதாபாத்திரங்களை பார்வையாளர்களுக்குள் நுழைப்பதற்காக அவர்கள் எடுத்துக்கொண்ட நேரம், கதைக்களத்தை அறிமுகப்படுத்துவது என முதல் பாதி பெரிய சுவாரஸ்யங்களற்று பொறுமையாகவே நகர்கிறது. இடைவேளைக்கு முன்புதான் திரைக்கதை படத்தின் மையத்திற்குள் நுழைகிறது. படத்தின் இரண்டாம் பாதி முழுவீச்சில் விறுவிறுப்பாக நகர்கிறது. இரண்டு வெவ்வேறு கதைகளும் ஒன்றிணையும் இடம், இறுதிக்காட்சியில் வரும் திருப்பம் ரசிக்கும்படியாக இருந்தது. பின்னணி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு, தொழில்நுட்ப ரீதியாக படம் அதன் பலத்திலிருந்து குன்றவில்லை.

சமந்தாவின் கதாபாத்திர வாயிலாக பெண்களுக்கான தைரியத்தை கட்டமைத்திருக்கிறார்கள். வாடகைத்தாய் விவகாரத்தில் நடக்கும் விஷயங்கள் நமக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் காட்டியிருக்கும் விதத்தில் முக்கியமான படம். மருத்துவமனைக்கு வருகிற பெண்களை ஆசை வார்த்தை கூறி வாடகைத்தாயாக மாற்றுவது, அதற்குள் நடக்கும் கமிஷன் விவகாரங்கள், முறைகேடான வாடகைத்தாய், குடும்பச் சூழலால் வாடகைத்தாயாக ஒப்புக்கொள்ளும் பெண்களை தவறாக பயன்படுத்துவது,
உள்ளிட்டவை ‘யசோதா’ மூலம் வெளிச்சம் பெற்றுள்ளன.

ஒருபுறம் எங்கேஜிங் செய்வதாக படம் இருந்தபோதிலும் தர்க்க ரீதியான கேள்விகள் எழாமலில்லை. கர்ப்பமாக இருக்கும் சமந்தா எகிறி அடிப்பது, கண்ணாடியை உடைத்து கீழே விழுவது, இப்படியாக சில சின்ன சின்ன பிரச்சினைகள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக முக்கியமான கதைக்களத்தை போர் அடிக்காத விதத்திலும், விறுவிறுப்பாக கொண்டு சென்ற வகையில் கவனிக்க வைக்கிறது இந்த ‘யசோதா’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE