நித்தம் ஒரு வானம்: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

சக மனிதர்களுடன் சகஜமாக பழகத் தெரியாத, ஒழுங்கு, சுத்தம் ஆகியவற்றில் அளவுக்கதிகமான கவனம் கொண்ட இளைஞன் அர்ஜுன் (அசோக் செல்வன்), தனக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றதும் மனஅழுத்தத்தில் சிக்கிக்கொள்கிறான். அதிலிருந்து மீள, மருத்துவர் கிருஷ்ணவேணி (அபிராமி), தான் எழுதிய 2 கதைகளைப் படிக்கக் கொடுக்கிறார். அதன் இறுதிப் பக்கங்கள் கிழிக்கப்பட்டிருப்பதால் முடிவைத் தெரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறான். மருத்துவர், அந்தக் கதைகளின் கதாபாத்திரங்கள் கொல்கத்தாவிலும் இமாச்சலப் பிரதேசத்திலும் வாழ்ந்துவருவதாகச் சொல்கிறார். தேடிச் செல்கிறான். ரயில் நிலையத்தில் அர்ஜுனை யதேச்சையாகச் சந்திக்கும் சுபத்ரா (ரிது வர்மா) அவனுடன் இணைந்துகொள்கிறாள். இந்தப் பயணத்திலிருந்து அர்ஜுனுக்கும் சுபத்ராவுக்கும் கிடைப்பது என்ன? அர்ஜுன் மன அழுத்தத்தில் இருந்து மீண்டானா? என்பது படம்.

பயணங்களின் மூலம் நாயகன் வாழ்க்கையில் மாற்றம் அடைவது என்பது பார்த்த களம்தான் என்றாலும் அறிமுக இயக்குநர் ரா.கார்த்திக்கின் திரைக்கதையும் மேக்கிங்கும் புத்துணர்ச்சியைத் தருகின்றன. பல இடங்களில் ரசனைக்கு விருந்தளிக்கும் காட்சிகளால் ‘ஃபீல் குட்’ படம் பார்த்த திருப்திக் கிடைக்கிறது.

படத்தின் கதைக்குள் கதையாக வரும் 2 கதைகளில் மதி-பிரபா (அபர்ணா பாலமுரளி - அசோக் செல்வன்) கதையில் சுவாரசியம் அதிகம். வீரா-மீனாட்சி(அசோக் செல்வன் - ஷிவாத்மிகா) கதையில் நாயகி கூடைப்பந்து வீராங்கனை என்பதைத் தாண்டி புதிதாக எதுவும் இல்லை. மொத்த படமும் ரசிக்க வைத்தாலும் கதையில் போதிய அழுத்தம் இல்லாததால் தேவைக்கு அதிகமாகக் காட்சிகளை நீட்டிப்பது போன்ற உணர்வு பல இடங்களில் ஏற்படுகிறது. பெண் கதாபாத்திரங்களைப் புதுமையாகவும் ரசிக்கத்தக்கவர்களாகவும் படைத்திருப்பது பாராட்டுக்குரியது.

படிக்கும் கதைகளின் நாயகனாகத் தன்னையே கற்பனை செய்துகொள்ளும் தன்மை உடையவனாக ஹீரோவை சித்தரித்திருப்பதன் மூலம், அசோக் செல்வனை 3 வெவ்வேறு வகையான கதாபாத்திரங்களில் பார்க்க முடிகிறது. அர்ஜுனாகவும் வீராவாகவும் வழக்கமான நடிப்பைத் தந்திருக்கும் அவர், பிரபாவாக பெரிதும் ஈர்க்கிறார்.

நேர்மறைச் சிந்தனையுடன் வாழ்வை அதன்போக்கில் வாழ்ந்து சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவிக்கத் தயங்காத சக பயணியாக ரிது வர்மா கதைக்குப் புத்துணர்வூட்டப் பயன்பட்டிருக்கிறார்.

அப்பாவை நேசித்தாலும் அவரை எப்போதும் எதிர்த்துக்கொண்டே இருக்கும் கிராமத்துப் பெண்ணாக அபர்ணா பாலமுரளியின் அடாவடிகள், பேரழகு. அவர் தந்தையாக அழகம்பெருமாளும் வழக்கம்போல் ஸ்கோர் செய்கிறார். கவுரவத் தோற்றத்தில் நடித்திருக்கும் ஷிவதாவும் ஜீவாவும் சிறப்பாகப் பங்களித்திருக்கிறார்கள்.

கோபி சுந்தரின் பாடல்களும் தரண் குமாரின் பின்னணி இசையும் ஃபீல் குட்தன்மையை அழகாகப் பிரதிபலித்து படத்துக்கு வலு சேர்க்கின்றன. 3 கதைகளுக்கும் வெவ்வேறு ஒளிகளையும் நிறங்களையும் பயன்படுத்தி அசர வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா.

கதையில் புதுமை இல்லை என்றாலும் திரைக்கதையின் புத்துணர்வால் ‘நிந்தம் ஒரு வான’த்தை ரசிக்க முடிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE