பனாரஸ்: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

வாழ்க்கையைக் கொண்டாட்டமாக அணுகும் சித்தார்த் (ஜையீத்), செல்வந்தரின் மகன். பெற்றோரை இழந்த தனி (சோனால்) எதையும் எளிதில் நம்பிவிடும் மனம் கொண்டவள். சவாலில் ஜெயிப்பதற்காக சித்தார்த் செய்யும் தவறு, ஊரை விட்டு செல்லும் அளவுக்குத் தனியைப்பாதிக்கிறது. தவறை உணரும் சித்தார்த்,அதற்குப் பிராயச்சித்தம் செய்ய தனியைத் தேடி, பனாரஸ் செல்கிறான். அவளைச் சந்தித்தானா? அவள், அவனை மன்னித்தாளா? அங்கே சித்தார்த் உணர்ந்துகொண்டது என்ன என்பது கதை.

‘நானொரு காலப் பயணி. எதிர்காலத்தில் இருந்து உன்னைச் சந்திக்க வந்திருக்கிறேன்’ என்று கூறி சித்தார்த், தனியை நம்ப வைக்கும் காட்சியுடன் சுவாரசியமாகவே தொடங்குகிறது படம். பனாரஸ் நகரத்துக்குக் கதை நகர்ந்ததும், அங்கே சாம்பு (சுஜய்) என்கிற ‘மரண’ ஒளிப்படக் கலைஞன் உதவியுடன் சித்தார்த், தனியைக் கண்டுபிடிக்கும் காட்சிகளும், அவளுடனான சந்திப்புகளும், பனாரஸின் ஆன்மிக அழகும் கவிதைபோல் ஈர்க்கின்றன.

ஆனால், இரண்டாம் பாதியில் ‘டைம் லூப்’ என்கிற கால வளையத்துள் சிக்கும் நாயகன், அதில், எதிர்பாராமல் நடக்கும் நிகழ்வுகளை எப்படிக் கையாள்கிறான் என்பதைச் சித்தரித்ததில் புதுமையோ, புத்திசாலித்தனமோ துளியும் இல்லை. அதைவிடப் பரிதாபம், கால வளையத்துள் நாயகன் எப்படி சிக்குகிறான் என்பதைச் சொல்ல, இயக்குநர் எழுதியிருக்கும் துணைக் கதாபாத்திரங்களும் பின்னணியும் சுத்தமாக எடுபடவில்லை.

முதன்மைக் கதாபாத்திரங்களையும் அவற்றுக்கு இடையிலான மோதல், புரிந்துணர்வு ஆகியவற்றை இளமை துள்ளும் காதலின் பின்னணியில் சுவாரசியமாக எழுதியிருக்கிறார் இயக்குநர் ஜெயதீர்த்தா. அதேபோல், நாயகனின் அப்பா,சாம்பு ஆகிய துணைக் கதாபாத்திரங்களைத் திரைக்கதையின் பலவீனத்தைத் தாங்கும் தூண்கள்போல் படைத்திருக்கிறார். கங்கைக் கரையில் சாம்புவாழ்க்கை குறித்து பேசும் வசனங்கள் கவர்கின்றன. பாடகி என்கிற குணாதிசயம், ஒரேயொரு காட்சியைத் தவிர கதாநாயகிக்கு வேறு எந்த வகையிலும் உதவவில்லை.

சித்தார்த்தாக நடித்துள்ள ஜையீத் கான், காதல், ஆக்‌ஷன் காட்சிகளில் அறிமுக நடிகர் என நம்ப முடியாத அளவுக்கு நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ஆனால், அழுது நடிக்கும் காட்சியில் தோற்றுப் போகிறார். நாயகியாக நடித்துள்ள சோனால் மோண்டோரியா , பாடல் காட்சிகளில் கூடுதல் ஈர்ப்புடன் தோன்றுகிறார்.

கங்கை நதியின் புகழ்பெற்றப் படித்துறைகள், அந்நகரின் மூலை முடுக்குகள் என எந்தப் பகுதியை கேமரா கடந்து சென்றாலும் அவற்றைப் பேரழகுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அத்வைதா குருமூர்த்தி. காதலில் உருகி, கால வளையத்துள் சிக்கும் கதைக்குச் சிறந்த பாடல்களையும் பொருத்தமான பின்னணி இசையையும் கொடுத்திருக்கிறார் அஜனீஷ் லோக்நாத். பழனிபாரதியின் கவித்துவமான வரிகளில் ‘மாய கங்கா’, ‘இலக்கணக் கவிதை’ ஆகிய பாடல்கள், மொழிமாற்றுப் படம் என்பதை மீறி ஈர்க்கின்றன.

காலப் பயணம் என சுவாரசியமாகத் தொடங்கி, கால வளையம் என நொண்டியடிக்கும் 2-ம் பாதியின் திரைக்கதையில் வலுவான காரணங்களை அமைக்காததால் பாதி அவியலாகக் காட்சியளிக்கிறது, இந்த ‘பனாரஸ்’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE