லவ் டுடே Review: 2கே கிட்ஸை குறிவைக்கும் ‘பழமைவாத’ புது காதல் சினிமா!

By கலிலுல்லா

காதலில் நம்பிக்கைதான் முக்கியம் என்பதை ஸ்மார்ட்போன் பரிமாற்றத்தின் வழியே சொல்லும் படம்தான் 'லவ் டுடே'.

உத்தமன் பிரதீப் (பிரதீப் ரங்கநாதன்) நிகிதா (இவானா) இருவரும் காதலர்கள். ஒருவரையொருவர் நன்கு அறிந்து வைத்திருப்பதாக நினைத்துக் காதலித்துக் கொண்டிருக்கும் சூழலில் நிகிதா அவரது தந்தை வேணு சாஸ்திரி (சத்யராஜ்) வசம் சிக்கிக்கொள்கிறார். இருவரையும் அழைத்துப் பேசும் வேணு சாஸ்திரி, இருவரும் அவரவர் ஸ்மார்ட்போன்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற விநோத நிபந்தனை ஒன்றை விதிக்கிறார். அதன்படி ஒருவர் மற்றொருவர் செல்போனை பயன்படுத்தத் தொடங்க, அதுவரை வெளியில் தெரியாத பூதம் கிளம்பி, அவர்கள் காதலுக்கு ஆடு-புலி ஆட்டம் ஆடுகிறது. இறுதியில் இருவரும் இணைந்தார்களா, இல்லையா? காதலில் நம்பிக்கை எந்த அளவுக்கு முக்கியம் என்பதுதான் படத்தின் திரைக்கதை.

'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்தை இயக்கி, நடித்திருக்கிறார். புதுமுக நடிகராக அவரது நடிப்பு எந்த துருத்தலையும் ஏற்படுத்தவில்லை என்றபோதும் சில இடங்களில் ஓவர் ஆக்டிங் எட்டிப் பார்க்கிறது. நாயகி இவானா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை பிசிறின்றி நடித்துக் கொடுத்திருக்கிறார்.

வேணு சாஸ்திரி கதாபாத்திரத்தில் சத்யராஜ் பக்காவாக பொருந்திப் போகிறார். வீணை வாசித்தபடியே பேசுவது, கறாரான தந்தையாகவும், அதேசமயம் எதிலும் பர்ஃபெக்‌ஷன் பார்க்கும் நபராகவும் குறைந்த நேரம் திரையில் தோன்றினாலும் ரசிக்க வைக்கிறார். யோகிபாபு, ராதிகா சரத்குமார், ரவீனா உள்ளிட்டோர் கதாபாத்திரம் கேட்கும் நடிப்பை அள்ளிக் கொடுத்துள்ளனர்.

காதலில் நம்பிக்கைதான் ஆதாரம் என்பதை ஒன்லைனாக கொண்டு, அதனை இக்கால இளைஞர்களுக்கு சொல்ல முனைந்திருக்கிறார் இயக்குநர். அதற்காக அவர் தனது கடந்த பட ஆயுதமான ஸ்மார்ட்போனையே இந்தப் படத்திலும் மையப்பொருளாக கையிலெடுத்துள்ளார். படத்தின் முதல் பாதி க்ளிஷேவான காதல் காட்சிகள், காதல் பாடல்கள் என தொடங்குகிறது. க்ளிஷே காட்சிகள் கடந்து ஸ்மார்ட்போன்கள் கைமாறுகையில் திரைக்கதை வேகமெடுக்கிறது.

சில காமெடிகள் கதையோட்டத்திற்கு கைகொடுக்கின்றன. பலவும் ஆபாச வார்த்தைகளாகவும், முகம் சுளிக்க வைக்கும் வகையிலும் இருப்பதை ரசிக்க முடியவில்லை. இன்ஸ்டாகிராம், டின்டர் போன்ற நவீன யுவ, யுவதிகள் புலங்கும் தளங்களில் நிகழும் அத்துமீறல்கள் சில இடங்களில் காமெடியாகவும், சில இடங்களில் அயற்சி தரும் விதத்திலும் விவரிக்கப்பட்டுள்ளன. பிரதீப் - நிகிதா காதலை மட்டும் விவரிக்காமல், அதனையொட்டி பயணிக்கும் ரவீனா - யோகிபாபு கதை திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்த உதவுகிறது.

இரண்டாம் பாதியில் திரைக்கதையில் தடுமாற்றம் இருப்பதை உணர முடிகிறது. நகைச்சுவை என்ற பெயரில் ஆபாசத்தையும், பழங்குடி மக்களின் உடைகளையும் வைத்து கிண்டலடித்திருப்பது உண்மையில் விமர்சனத்துக்குரியது. ஆரம்பத்தில் பிரியாணி சாப்பிடும் காட்சி, சிறுவன் சிறுநீர் கழிக்கும் காட்சி, நாயகன் ஸ்மார்ட்போனை மழையில் நனையாமல் சுமந்து செல்லும் காட்சிகள் எழுதப்பட்ட விதம் முகம் சுளிக்க வைக்கின்றன. படத்தின் இறுதியில் வரும் லாக்அவுட் ஐடியா நவீன யுக காதலை சொல்கிறோம் என்ற ஸ்மார்போன் யுவ-யவுதிகளுக்கு தோன்றாமலிருப்பது ஏன் என்ற லாஜிக் கேள்வி எழாமலில்லை.

காட்சிகளுக்கான உணர்வுகளை கட்டியெழுப்பியதில் யுவன் சங்கர் ராஜாவுக்கான பங்கு அளப்பரியது. 90'ஸ் மட்டுமல்ல 2கே கிட்ஸ்களுக்குமான இசையமைப்பாளர் தான், என்பதை உணர்த்தும் வகையில் பின்னணி இசையில் பலம் சேர்த்திருக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் கேமரா கோணங்களில் புதுமை காட்டவில்லை என்றாலும், ஒளிப்பதிவில் நேர்த்தியை பதிவு செய்துள்ளார்.

மொத்ததில் வெறும் 2கே கிட்ஸை மையப்படுத்தி, காதலுக்குள் நம்பிக்கை அவசியம் என்பதை வலியுறுத்தும் ‘லவ் டுடே’ நவீன காலக்கட்டத்தை காட்சிப்படுத்துவதாக சொல்லிவிட்டு நிறைய பழமைவாத, ஆணாதிக்க கருத்துகளை புகுத்தியிருப்பது நிச்சயம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியல்ல!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE