“ஒவ்வொரு வீடுமே பெண்களுக்கு ‘பொள்ளாச்சி’தான்” - திருமாவளவன்

By செய்திப்பிரிவு

''ஒரு பெண் என்ன உடை உடுத்த வேண்டும் என்பதில் ஆரம்பித்து, அவள் படிப்பு, அவள் குழந்தை பெற்றுக்கொள்வது வரை அவளது குடும்பமே தீர்மானிக்கிறது'' என்று திருமாவளவன் பேசினார்.

புத்தா பிலிம்ஸ் சார்பில், நேசம் முரளி தயாரித்து, இயக்கியுள்ள படம் 'பொள்ளாச்சி'. புதுமுகங்களின் நடிப்பில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளை மையமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இதில் கலந்துகொண்டு இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், ''இந்தியாவில் சட்ட அமைப்பு எல்லாம் வெளிநாட்டைக் காட்டிலும் நன்றாகவே இருக்கிறது. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதிலும் கடைப்பிடிப்பதிலும்தான் இங்கு சிக்கல் இருக்கிறது. அந்த நிலை மாற வேண்டும். இந்தப் படம் மிக சிக்கலான பிரச்சினையைப் பேசுகிறது. இது எந்தப் பக்கத்தில் இருந்து பேசுகிறது என்பதே முக்கியம்.

இந்தியாவில் எந்தக் கதையை வேண்டுமானாலும் படமெடுக்கலாம். ஆபாசமாக படமெடுக்கலாம். ஆனால் உண்மையை மட்டும் எடுக்கக் கூடாது. என் படத்திற்கு அது நடந்தது. உண்மை பலரைச் சுடும். இந்தக் காலத்தில் சமூக வலைதளங்கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போனில் இருக்கும் அனைத்தும் வேறொருவரால் கண்காணிக்கப்படுகிறது. இதை இளைய தலைமுறைக்கு சொல்லித்தர வேண்டும். இந்தப் படம் அந்த விஷயத்தையும் பேசும் என நம்புகிறேன்'' என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், ''ஒரு திரைப்படம் என்ன பேசுகிறது என்பதைப் போல் அந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறுகிறதா என்பதும் இப்போது முக்கியமாகிறது. இந்தக் காலத்தில் சம உரிமை பற்றி, சாதி பற்றி பேசுவது அதிகரித்துள்ளது. ஆனால் பெண்கள் மீதான வன்முறை இன்றும் பேசப்படுவதில்லை. ஒரு பெண் என்ன உடை உடுத்த வேண்டும் என்பதில் ஆரம்பித்து, அவள் படிப்பு, அவள் குழந்தை பெற்றுக்கொள்வது வரை அவளது குடும்பமே தீர்மானிக்கிறது.

அந்த வகையில் இந்திய கலாசாரமே பெண்களை அடங்கி நடக்கவே பழக்குகிறது. ஒவ்வொரு வீடுமே பெண்களுக்கு பொள்ளாச்சிதான். ஆனால், பொள்ளாச்சி பாலியல் வன்முறை பொதுவெளியில் வந்ததால், அதன் மீது வெளிச்சம் விழுந்துள்ளது. இந்தக் கதைகள் மீண்டும் மீண்டும் திரையில் பேசப்பட வேண்டும். இந்தக் கதையினை எடுத்திருக்கும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள். படம் வெற்றி பெற வாழ்த்துகள்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE