‘ஒரு கைதி டைரி’ க்ளைமாக்ஸை இந்தி ரீமேக்கில் மாற்றிய கதை: பாக்யராஜ் பகிர்வு

By செய்திப்பிரிவு

அமிதாப் பச்சனை வைத்து 'ஒரு கைதியின் டைரி' படத்தின் ரீமேக்காக பாலிவுட்டில் 'ஆகீரி ராஸ்தா' என்ற படத்தை இயக்குநர் பாக்யராஜ் இயக்கினார். அது குறித்து சுவாரஸ்ய தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் சிவ மாதவ் இயக்கத்தில் நீண்ட நாட்களுக்குப்பிறகு இயக்குநர் பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் படம் '3.6.9’. இந்தப் படத்தில், வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடித்துள்ளார். சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்டே பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ், “நான் கொஞ்சம் பிடிவாதக்காரன் என்று இங்கே சொன்னார்கள். அது உண்மைதான். நல்ல விஷயத்திற்காக எப்போதும் பிடிவாதமாக தான் இருப்பேன்.

நான் கதை எழுதிய ‘ஒரு கைதியின் டைரி’ படத்திற்காக நான் எழுதிய க்ளைமாக்ஸ் வேறு. ஆனால் பட்ஜெட் உள்ளிட்ட சில காரணங்களாலும் எனது குருநாதர் பாரதிராஜாவுக்கு அது பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்பதாலும், வேறு மாதிரியான க்ளைமாக்ஸ் வைத்து படமாக்கி படமும் ஹிட்டானது. அந்த க்ளைமாக்ஸும் பேசப்பட்டது. ஆனால் அதே படத்தை இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து நான் இயக்க முடிவு செய்தபோது படத்தின் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பலரும் என்னிடம் வந்து தமிழில் எடுக்கப்பட்ட க்ளைமாக்ஸ் காட்சியையே இந்தியிலும் எடுங்கள். அமிதாப் பச்சனுக்கு அதுபோன்ற ஒரு க்ளைமாக்ஸ் ரொம்பவே கம்பீரமாக இருக்கும் என்று கூறினார்கள். ஆனால், நான் எழுதி வைத்த க்ளைமாக்ஸை படமாக்கியே தீர்வது என்று உறுதியாக இருந்தேன்.

இதுகுறித்து படத்தின் ஹீரோவான அமிதாப் பச்சனிடமே நேரடியாக பேசியபோது, அவர் என் எண்ணங்களை புரிந்துகொண்டு ஏற்கெனவே எடுக்கப்பட்ட ஒரு காட்சியுடன் நீங்கள் மனதில் நினைத்து வைத்திருக்கும் ஒரு காட்சியை எப்படி ஒப்பிட முடியும். அதனால் நீங்கள் நினைத்தபடி விரும்பிய க்ளைமாக்ஸ் காட்சியை எடுங்கள் என ஒப்புக்கொண்டார்.

அந்தக் காட்சியை படமாக்கி முடித்த பின்புதான் அனைவரும் அதைப் பார்த்து வியந்து பாராட்டினார்கள். அந்தப் படத்தின் க்ளைமாக்ஸை பார்த்து விட்டு என்னுடைய குருநாதர் பாரதிராஜா வியந்து போய் என்னைப் பாராட்டினார். அப்படி ஒரு நல்ல விஷயம் வரவேண்டும் என்பதற்காக பிடிவாதமாக இருப்பது தவறில்லை.

அதேபோல யாருமே முழுதாக சினிமாவை கற்றுக்கொண்டு உள்ளே நுழைவதில்லை. பல விஷயங்களை இங்கேதான் தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும். இந்தி படப்பிடிப்பின் போதும் எனக்கு பல விஷயங்கள் புரியாமலேயே அந்த சமயத்தில் அங்கேதான் கற்றுக்கொண்டு அந்தப் படத்தை முடித்தேன். அதுபோல இந்தப் படத்தின் இயக்குனர் சிவ மாதவும் இந்தப் படத்தை தான் நினைத்தபடி மிக நேர்த்தியாக பிடிவாதமாக இருந்து செதுக்கி உள்ளார். அந்த வகையில் நிச்சயம் இந்தப் படம் அனைவராலும் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE