பொங்கலுக்கு துணிவு Vs வாரிசு... இதற்கு முன் நிகழ்ந்த அஜித், விஜய் பட க்ளாஷ்கள் - ஒரு பார்வை

By கலிலுல்லா

2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் 'துணிவு' படமும், விஜய்யின் 'வாரிசு' படமும் வெளியாவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், இதற்கு முன் ஒரேநாளில் வெளியான அஜித் - விஜய் படங்களின் பட்டியலைப் பார்ப்போம்.

பண்டிகைகளை பொறுத்தவரை, அந்ந நாளுக்கான கொண்டாட்டங்களை குஷிபடுத்துவதே திரைப்படங்கள்தான். குறிப்பாக, ரசிகர்களின் விருப்பமான நட்சத்திர நாயகர்களின் படங்கள் வரும்போது அவை இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துவிடுகிறது. அதிலும் குறிப்பாக இரட்டைத் தரப்பு ரசிகர்களின் படங்கள் ஒன்றாக வெளியாகும்போது இதோ இன்றைக்கு வெளியான அறிவிப்பைப் போலத்தான் ட்விட்டரை தெறிக்கவிடுகின்றனர் ரசிகர்கள்.

'பீஸ்ட்' படத்திற்கு பிறகு விஜய், இயக்குநர் வம்சியுடன் கைகோத்திருக்கிறார். தமிழ் - தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகும் 'வாரிசு' படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிக்கிறார். இரண்டு தரப்பு ஆடியன்ஸைகளை திருப்திபடுத்தும் வகையில் படம் உருவாகியுள்ளதாக படத்தின் இயக்குநர் வம்சி தெரிவித்துள்ளார். விஜயை பொறுத்தவரை அவருக்கான பலமே அவரது ரசிகர்கள். அதைத்தாண்டி ஃபேமிலி ஆடியன்ஸ். ஆரம்ப காலக்கட்டத்தில் விஜய்க்கு துணையாக நின்றதும் அவர்கள்தான். அப்படிப்பார்க்கும்போது நீண்ட காலமாக ஃபேமிலி ஆடியன்ஸை மையப்படுத்திய படம் விஜய்யிடமிருந்து மிஸ்ஸிங்! அந்த ஏக்கத்தை பூர்த்தி செய்து ‘குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி’ என்ற வாசகத்துக்கு பொருத்தமாக படமாக 'வாரிசு' படத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். படம் பொங்கலுக்கு வெளியாவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'வலிமை' படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் கைகோத்திருக்கிறார் நடிகர் அஜித். வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது 'துணிவு' படம். ஆரம்பத்தில் படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், படப்பிடிப்பின் தாமதத்தால் பொங்கலுக்கு ரெடியாகியுள்ளது 'துணிவு'. முன்னதாக வெளியான 'வலிமை' படத்தில், 'நான் பார்த்த முதல் முகம் நீ' பாடல் ஹிட்டான அளவிற்கு படத்தில் அம்மா சென்டிமென்ட் பெரிய அளவில் அஜித்துக்கு கைகொடுக்கவில்லை. இந்தச் சூழலில் 'துணிவு' சென்டிமென்ட் இல்லாத ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

9 ஆண்டுகளுக்குப்பிறகு அஜித் - விஜய் படங்கள் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ள நிலையில், இன்றிலிருந்து ட்விட்டரில் பொங்கல் பண்டிகை கலைக்கட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில், இதற்கு முன்பு எப்போதெல்லாம் அஜித் - விஜய் படங்கள் மோதின என்பது குறித்து பார்ப்போம்.

பண்டிகை ரிலீஸ்: கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி விஜய் நடித்த 'ஃபிரண்ட்ஸ்' படமும், அஜித்தின் 'தீனா' படமும் ஒரேநாளில் வெளியாகின. பொங்கலுக்கு வெளியான இந்த இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன.

2003-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் அஜித்தின் 'ஆஞ்நேயா', விஜய்யின் 'திருமலை' படங்கள் ஒரே நாளில் வெளியாகின. இதில் 'திருமலை' வரவேற்பை பெற்றது.

4 வருடங்களுக்குப்பிறகு அதாவது 2007-ம் ஆண்டு விஜய்யின் 'போக்கிரி' மற்றும் அஜித்தின் 'ஆழ்வார்' படங்கள் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி ஒரே நாளில் வெளியாகின. ‘போக்கிரி’ ஹிட்.

2007-லிருந்து 7 ஆண்டுகள் கழித்து 2014-ம் ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் 'வீரம்' படமும் விஜய்யின் 'ஜில்லா' படமும் வெளியானது. இதில் அஜித்தின் 'வீரம்' விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படங்களை தவிர்த்து, 2000-க்கு முன்பு...

1996-ம் ஆண்டு விஜய் நடித்த 'கோயம்புத்தூர் மாப்பிள்ளை' மற்றும் அஜித்தின் 'வான்மதி' இரண்டு படங்களும் 3 நாட்கள் வித்தியாசத்தில் வெளியாகின. 'கோயம்புத்தூர் மாப்பிள்ளை' ஜனவரி 15 (1996) அன்றும், அஜித்தின் 'வான்மதி' ஜனவரி 12-ம் தேதி அன்றும் வெளியானது. அதே ஆண்டு அதாவது 1996-ம் ஆண்டே பிப்ரவரி மாதம் 18-ம் தேதி விஜய்யின் 'பூவே உனக்காக' படமும், அஜித்தின் ‘கல்லூரி வாசல்’ படமும் ஒரே நாளில் வெளியானது.

1997-ம் ஆண்டு விஜய்யின் 'காதலுக்கு மரியாதை' டிசம்பர் 19 அன்று வெளியாக, அஜித்தின் 'ரெட்டை ஜடை வயசு' டிசம்பர் 12-ம் தேதி வெளியானது.

1998-ம் ஆண்டு விஜய் நடித்த 'நிலவே வா' ஆகஸ்ட் 14 அன்றும், அஜித்தின் 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' ஆகஸ்ட் 15 அன்றும் வெளியானது.

2000-ம் ஆண்டு மேமாதம் 19-ம் தேதி விஜய்யின் 'குஷி', அஜித்தின் 'உன்னைக் கொடு என்னைத் தருவேன்' இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE