‘லைகர்’ தோல்வி விவகாரம்: விநியோகஸ்தர்கள் மிரட்டுவதாக பூரி ஜெகந்நாத் புகார்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே நடிப்பில் இயக்குனர் பூரி ஜெகந்நாத்தின் ‘லைகர்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் தோல்வியை தழுவியது. இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் படத்தின் விநியோகஸ்தர்கள், பூரி ஜெகந்நாத்தை சந்தித்ததில் அவர் நஷ்டத்தை ஈடுசெய்ய ஒரு தொகையை திருப்பித் தருவதாக உறுதியளித்திருக்கிறார்.

மேலும், இது தொடர்பாக படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான பூரி ஜெகந்நாத் பேசும் ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியது. அதில் அவர், நான் பணத்தை நிச்சயம் திருப்பி தருவேன். ஆனால், தனது மரியாதையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டால் தன்னிடமிருந்து ஒரு பைசா கூட வாங்க முடியாது என்று கூறியிருந்தார்.

"என்னை பிளாக்மெயில் செய்கிறாயா? பணத்தை நான் திருப்பித் தர வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் விநியோகஸ்தர்கள் கடும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளதால் தர ஒப்புக்கொண்டேன். ஒரு கூட்டத்தை கூட்டி தொகையை முடிவு செய்திருந்தோம். ஒரு மாதத்துக்குள் பணம் செலுத்திவிடுவேன் என்று தெரிவித்திருந்தேன். நிபந்தனைகளை ஒப்புக்கொண்டாலும், இப்போது மிகைப்படுத்துகிறார்கள். இது படத்தை திருப்பி தர வேண்டுமா என்ற எண்ணைத்தை எனக்குள் உருவாக்கியுள்ளது.

படத்தை நிச்சயம் மரியாதை நிமித்தமாக திருப்பி தருகிறேன். ஆனால், அந்த மரியாதையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டால் ஒரு பைசா கூட தரமாட்டேன். நாம் அனைவரும் ஒருவகையில் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். சில படங்கள் வெற்றி பெறும், சில படங்கள் தோல்வியைத் தழுவும். மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் ஈடுபடுங்கள். அவர்களின் பெயர்களை மட்டும் குறிப்பெடுத்துக்கொண்டு, போராடாத மற்றவர்களுக்கு நான் பணத்தை தந்துவிடுகிறேன்” என விநியோகஸ்தர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், விநியோகஸ்தர்கள் வாராங்கல் ஸ்ரீனு மற்றும் ஷோபன் பாபு ஆகியோர் தன்னை மிரட்டுவதாக பூரி ஜெகந்நாத் புகார் ஒன்றை போலீஸிடம் அளித்திருக்கிறார். மேலும், பிற விநியோகஸ்தரர்களை தன் வீட்டுக்கு முன் போராட்டம் நடத்துமாறு இருவரும் தூண்டி விடுவதாகவும், தன் குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் பூரி ஜெகந்நாத் தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE