'ஏழு கடல், ஏழு மலை' - ராம் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் புதிய படத்திற்கு 'ஏழு கடல், ஏழு மலை' என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.

'தங்க மீன்கள்', 'பேரன்பு' உள்ளிட்ட படங்களை இயக்கிய ராமுடன், 'பிரேமம்' படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடம் பிடித்த நடிகர் நிவின் பாலி இணையும் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'மாநாடு' படத்தின் மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்

கதாநாயகியாக அஞ்சலி நடிக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கலை இயக்கத்தை உமேஷ் ஜே குமார் கவனிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தனுஷ்கோடியில் துவங்கி அதன்பிறகு கேரளாவில் வண்டிப்பெரியார், வாகமன் ஆகிய இடங்களிலும் நடைபெற்றது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்றது.

சென்னையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் கலை இயக்குநர் உமேஷ் ஜே.குமார் கைவண்ணத்தில் மிகப் பெரிய ரயில் செட் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் நிவின்பாலி, சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பெயர் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. 'ஏழு கடல், ஏழு மலை' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவில், ''காதல்னு வந்துட்டா மனசு மட்டுமல்ல; உடம்பு, உசுரு எல்லாம் பறக்கும்'' என்ற வசனம் இறுதியாக ஒலிக்கிறது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிகிறது.

டைட்டில் அறிவிப்பு வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE