தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் டப் செய்யப்படும் கந்தாரா

By செய்திப்பிரிவு

சமீபத்தில் பெரிய திரையில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள கன்னட திரைப்படம் 'கந்தாரா' (Kantara). பண்ணையாருக்கும் பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்சினையை பண்பாட்டுக் கூறுகளுடன் பதிவு செய்யும் படமாக கந்தாரா வெளியாகியுள்ளது. ரிஷப் ஷெட்டி என்பவர் இப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த கிஷோர், நாயகியாக சப்தமி கவுடா என பலர் நடித்துள்ளனர். நில அரசியலை அரசு நிர்வாகம், நிலச்சுவான்தார்கள், பழங்குடியின மக்கள் என முக்கோணத்தில் இணைத்து எழுதியிருக்கும் திரைக்கதை உடன் படத்துக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.

இதை உணர்ந்த படக்குழு தற்போது படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிட போவதாக அறிவித்துள்ளது. படத்தை தயாரித்துள்ள ஹோம்பலே பிலிம்ஸ், படத்தின் டப்பிங் பதிப்புகள் அனைத்தும் அக்டோபர் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

கர்நாடகாவைத் தாண்டி வெளிமாநிலத்திலும் படத்துக்கான வரவேற்பு அதிகமாக இருப்பதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மலையாள சூப்பர் ஸ்டார் பிருத்விராஜ் இதன் மலையாள பதிப்பை கேரளாவில் வாங்கி வெளியிடப் போவதாக அறிவித்ததுடன் "தலைசிறந்த படைப்பு" என்றும் படத்தை வெகுவாக பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE