``ஷட்டரை மூடி என்னை அழவைத்தார்கள் - ஷோரூம் ஊழியர்கள் தகராறு குறித்து நடிகை அன்னா ரேஷ்மா

By செய்திப்பிரிவு

அங்கமாலி டைரீஸ் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் அன்னா ரேஷ்மா எனப்படும் லிச்சி. ரெண்டு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனிடையே, நேற்று தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் ஒன்றை அன்னா வெளிப்படுத்தியுள்ளார். ஆலுவா நகர ஷோரூம் ஒன்றில் சிம் கார்டு வாங்கச் சென்றபோது நடந்த தகராறு குறித்துதான் அந்தப் பதிவு.

அதில், நடிகை அன்னா, ``என் அம்மாவுக்கு சிம் கார்டு வாங்குவதற்காக ஆலுவாவிலுள்ள ஷோரூமுக்குச் சென்றேன். வெளியில் செல்லும்போது யாரும் என்னை அடையாளம் காணக்கூடாது என்பதற்காக முகத்தை மூடிக்கொள்வது எனது வழக்கம். அப்படித்தான் அந்த ஷோரூமுக்கும் சென்றேன். இதனால் ஊழியர்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.

அந்த ஷோரூமின் பெண் ஊழியர், 25 வயதுக்கும் குறைவான வயதுள்ள அந்த ஊழியர், என்னிடம் நடந்துகொண்ட விதம் எனக்கு பிடிக்காததால் அவரைப் பற்றி புகார் கொடுக்க அவரை புகைப்படம் எடுத்தேன். அவர் அடையாள அட்டை எதுவும் அணியாததாலே புகைப்படம் எடுத்தேன். அவர்தான் அந்த ஷோரூமின் மேலாளர் என்பது பின்னரே தெரிந்தது. சிறிதுநேரத்தில் பெண் ஊழியர் மற்ற ஊழியர்களை அழைத்து ஷட்டரை மூடும்படி சொல்லி, என் கையைப் பிடித்து அங்கே உட்கார வைத்தார். இதில், அவரின் நகம் என் கையில் பட்டு காயம் உண்டானது.

நான் அவசர உதவி எண் 100-க்கு போன் செய்தேன். ஆனால், போலீஸைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதால், என் தந்தையின் அரசியல் நண்பர்களை அங்கு அழைத்தேன். அவர்கள் போலீஸை அழைத்துவந்தார்கள். அதற்கு முன்னதாகவே, ஷட்டரை திறந்துவிடும்படியும், போலீஸ் வரும்வரை போக மாட்டேன் என்றும் கூறிப்பார்த்தேன். அவர்கள் அதை காதில் வாங்காததால் வருத்தத்தில் அங்கேயே அழுதுவிட்டேன்.

நான் எடுத்த புகைப்படத்தை நீக்க சொல்ல, அதேபோல் நீக்கவும் செய்தேன். பின்னர் போலீஸ் வந்து ஷட்டரை திறக்க, நடந்த சம்பவத்தைக் கூறி புகார் அளித்தேன். காவல்நிலையத்தில் வைத்து ஷோ ரூம் ஊழியர்கள் மன்னிப்பு கேட்டனர். ஒருவருக்கு வேலை கிடைப்பது கடினம் என்பதால் அந்தப் பெண் மேலாளரை மன்னித்துவிட்டேன். இங்கே ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். வாடிக்கையாளர்கள் யாராக இருந்தாலும் ஊழியர்கள் அவர்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். இதனை ஊழியர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE