“மொபைலில் காட்சி அனுபவம் கிட்டாது” - கலாய்ப்புகளுக்கு ‘ஆதிபுருஷ்’ இயக்குநர் விளக்கம்

By செய்திப்பிரிவு

'மொபைல் போனில் உங்களால் கிராஃபிக்ஸ் காட்சிகளின் தரத்தை கொண்டுவர முடியாது'' என ‘ஆதிபுருஷ்’ படத்தின் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியில் வெளியான ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' என்கிற படத்தை இயக்கி, தேசிய விருது பெற்றவர் ஓம் ராவத். இவரது இயக்கத்தில், ராமாயணக் கதையைத் தழுவி உருவாகிவரும் படம் ‘ஆதிபுருஷ்'. இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் கதையின் நாயகனாக ‘பாகுபலி’ புகழ் பிரபாஸும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோனும் நடித்திருக்கிறார்கள். டி-சீரிஸ்,ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஐமேக்ஸ், 3டி முறையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதையடுத்து, படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. டீசர் வலைதளங்களில் ட்ரோல்களை எதிர்கொண்டு வருகிறது . ‘ஆதிபுருஷ்’ டீசர் வீடியோகேமில் வரும் கேரக்டர்களைப் போல காட்சிபடுத்தப்பட்டுள்ளதும், மோசமான அனிமேஷன் காட்சிகளும்தான் ட்ரோல்களுக்கு காரணம். பல ரசிகர்கள் படத்தின் காட்சிகளை மீம்களாக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர்.

இந்நிலையில், மோசமான கிராஃபிக்ஸ் காட்சிகள் குறித்து இயக்குநர் ஓம் ராவத், "நெட்டிசன்களின் கேலியான பதிவுகளைப் பார்த்து நான் மனமுடைந்தேன். ஆனால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. காரணம், இப்படம் ஐமேக்ஸ் மற்றும் 3D என பெரிய திரைக்காக எடுக்கப்பட்டது. அதில் பார்க்கும்போது கிராபிக்ஸ் (VFX) காட்சிகளின் தரத்தை உணர முடியும். நீங்கள் அந்த தரத்தை மொபைலில் கொண்டு வர முடியாது. என்னைக் கேட்டால் படத்தின் காட்சிகள் மற்றும் டீசரை யூடியூப் ('youtube) பதிவிட வேண்டாம் என்றுதான் நான் சொல்வேன். ஆனால், இன்றைய காலகட்டத்தில் படம் மக்களிடம் போய் சேர வேண்டும் என்பதால் இதை நாங்கள் செய்யவேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE