இளையராஜாவுடன் இசையிரவு 6 | ‘அடி ஆத்தாடி...’ - நம் மனம் முழுக்க வீசும் அலை!

By குமார் துரைக்கண்ணு

வியப்பை மிகைப்படுத்தும் அபாரமான ஆற்றலைப் பெற்றது கடல். அதனால்தான் கடலை, முதல்முறை பார்க்கும்போது இருந்த அதேயளவு பேராவலும், பெருமகிழ்ச்சியும் எப்போதுமே நிலை கொள்கிறது. அந்த அடர்த்தி மிகுந்த உப்புக்காற்று உடல் வழிபுகுந்து மனங்களை லேசாக்கி நனைக்கிறது. ஈரமணலில் புதைந்த கால் தடங்கள் நம் நினைவுகளிலிருந்து நீங்காமல் மன முழுக்க அலை பரப்புகின்றன. விட்டுப்பிரிய மனமின்றி வெகுதூரம் கடந்த பின்னும், காதில் கேட்கும் அலையின் ஓசை ஓயாமல் கேட்டுக்கொண்டேயிருக்கிறது.

இந்தப் பாடலும் அப்படித்தான் ஒவ்வொரு முறை கேட்கும்போதும், ஆழக்கடலின் நீள அகலங்களுக்கு ஏற்ப நம் மனங்களை அலையாடச் செய்திருக்கும். இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் 1986-ம் ஆண்டு வெளிவந்த ‘கடலோர கவிதைகள்’ படத்தில் இடம்பெற்ற 'அடி ஆத்தாடி இளமனசு ஒண்ணு' பாடல்தான் அது. இளையராஜா - வைரமுத்து காம்போவின் தவிர்க்க முடியாத ரிபீட் மோடு பாடல்களில் இதுவும் ஒன்று.

"அடி ஆத்தாடி" என்று ஜானகி அம்மா பாடத் தொடங்கும்போது... ஃப்ரேமில் இருந்து வெளியேவரும் கேமரா வீட்டின் மேல் பறக்கும் புறாக்களோடு சேர்ந்து சிறகடிக்கும்படி காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அடுத்தகணத்தில் ஆரம்பிக்கும் பாடலின் தொடக்கயிசை, கண்ணில்படும் தூரம் வரை பரந்து கிடக்கும் நீலக் கடலின் மேல் தாழப்பறக்கும் வெள்ளை நாரைக் கூட்டத்தோடு புல்லாங்குழலையும், வயலினையும் இணைத்து குழைத்ததுப் போலவரும் அந்த இசையால் வலைவீசி, ஆழ்மனங்களை வாரிச்சுருட்டுகிறார் இளையராஜா. எடையிழந்த இறகைப் போல, உணரும் மனது அந்தரத்தில் மிதந்துகொண்டிருக்கும் போது "உயிரோடு உறவாடும்" என்று அவரது குரல் வரும்போது கூஸ்பம்ப்ஸ் என்ற கூச்செரியும் பூச்சொரிதலை உணராதவர் இருப்பது அரிது. அதேபோல பாடலின் முதல் மற்றும் இரண்டாவது சரணங்களின் வரிகள்,

"மேலே போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ..
உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்
மெட்டுக்கட்டிப் பாடாதோ..

இப்படி நான் ஆனதில்லை
புத்திமாறிப் போனதில்லை..
முன்னே பின்னே நேர்ந்ததில்லை
மூக்கு நுனி வேர்த்ததில்லை..

கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள
கத்திச்சண்டை கண்டாயோ..
படபடக்கும் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பார்த்தாயோ..
இசை கேட்டாயோ…

தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள
ஏகப்பட்ட சந்தோசம்..
உண்மை சொல்லு பெண்ணே என்னை
என்ன செய்ய உத்தேசம்..

வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்
வந்து வந்து போவதென்ன..
கட்டுமரம் பூப்பூக்க
ஆசைப்பட்டு ஆவதென்ன..

கட்டுத்தறி காளை நானே
கன்னுக்குட்டி ஆனேனே..
தொட்டுத் தொட்டு தென்றல் பேச
தூக்கம் கெட்டுப் போனேனே..
சொல் பொன்மானே…"

இந்த பாடல் முழுக்க மனசு முழுக்க விரவிக் கிடக்கும் காதல் உணர்வை வெளிப்படுத்தும் மகிழ்ச்சியின் உன்னதங்களைப் பேசக்கூடியவை. அந்த உணர்வூப்பூர்வமான உள்ளுணர்வை இசையின் மூலம் இப்பாடல் கடத்தியிருக்கும். பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஒருவேளை கடல் அலைகளுக்கு இசைக்கும் தன்மை இருந்திருந்தால், அவை இப்படித்தான் ஒலித்திருக்குமோ என்றே எண்ணத் தோன்றும் அளவுக்கு ஒவ்வொரு முறையும் வரும் அலைகளுக்கு இசையை இழைக்கப்பட்டிருக்கும்.

காலத்துக்கு ஏற்ப மாறிகொண்டே வருகிறது திரையிசைப் பாடல்கள். பாடல் வெளிவந்த காலக்கட்டமும், அப்போதிருந்த ரசனையும் மட்டும் அந்த பாடல்கள் வெற்றி பெறுவதற்கு போதுமானது அல்ல. அவை காலம் கடந்து நிற்பதற்கும், பாடலைக் கேட்கும்போதெல்லாம் அந்த பாடலை தங்களுக்கானது என்று கேட்பவர்களை உணர வைப்பதற்கு ஒரு ஆத்மார்த்தமான நெருக்கம் தேவை. அப்படியொரு மாயத்தை தன்னகத்தே கொண்டதுதான் இந்தப் பாடல்.

திரைப்பட இசையமைப்பாளர்கள் எத்தனையோ முறை வயலின், கிடார், புல்லாங்குழல், சைலம்ஃபோன், சாரங்கி, சிதார், தபேலா, மிருதங்கம், செனாய் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகளை பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் இளையராஜாவின் இசையில் வரும்போது மட்டும் அந்த கருவிகளில் இருந்து வரும் சத்தம், கேட்பவர்களை ஏதோ ஒன்று செய்கிறது.

இனம்புரியாத ஒரு அன்பை, இரக்கத்தை, நட்பை, காதலை, பாசத்தை, பரிவை, நேசத்தை, பரிதவிப்பை, ஏக்கத்தை, ஆச்சரியத்தை, சோகத்தை, துக்கத்தை பரிமாறிக் கொள்கிறது அந்த இசை . இதனால்தான் 36 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த பாடலைக் கேட்கும் தருணங்களில் எல்லாம் நம் மனம் முழுக்க அலை வீச தொடங்கிவிடுகிறது. உள்ளுணர்வுகளை தீண்டிச் செல்லும் அலைகள் நாளையும் தொடரும்..

அடி ஆத்தாடி பாடல் இணைப்பு இங்கே

முந்தைய அத்தியாயம்: இளையராஜாவுடன் இசையிரவு 5 | ‘துள்ளி எழுந்தது பாட்டு’ - வதைக்கும் காமன் கணை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE