‘பாகுபலி’யுடன் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை ஒப்பிடுவோரை கண்டுகொள்ளாதீர்கள்: நாகர்ஜுனா

By செய்திப்பிரிவு

‘பாகுபலி’யுடன் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை ஒப்பிடுவோரை கண்டுகொள்ளாதீர்கள் என்று நடிகர் நாகர்ஜுனா கருத்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகர்ஜுனா நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம், ‘இரட்சன்: தி கோஸ்ட்’. இப்படத்தை பிரவீன் சட்டாரு இயக்கி உள்ளார். இப்படத்தில் நாகர்ஜுனாவுடன் சோனல் சவுகான், அனிகா சுரேந்திரன், மனிஷ் சவுத்ரி, ரவி வர்மா, ஸ்ரீகாந்த் ஐய்யனார் உட்பட பலர் நடித்துள்ளனர். அக்டோபர் 5-ந் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ள படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் நாகார்ஜுனா, ''நானும் இங்குதான் பிறந்து வளர்ந்தேன். பிறகு என் அப்பா என்னை ஹைதராபாத் அழைத்துச் சென்றார். ஒவ்வொரு முறையும் நான் சென்னை வரும்போது, சொந்த ஊருக்கு திரும்ப வரும் சந்தோஷம் கிடைக்கிறது. கிண்டி பொறியியல் கல்லூரியில்தான் படித்தேன்.

சென்னையில் எல்லா இடங்களும் எனக்கு பரிச்சயம் தான். மணிரத்னம் சாரை ‘மணி’ என்று தான் அழைப்பேன். ‘பொன்னியின் செல்வன் – 1’ படத்திற்காக மணிக்கு வாழ்த்துகள். ‘பொன்னியின் செல்வன்’ மிகப் பெரிய வெற்றியடைந்துள்ளது. அப்படத்தில் நடித்த விக்ரமுக்கு வாழ்த்துகள். என் தம்பி கார்த்திக்கு வாழ்த்துகள். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்துகள்.

நான் தமிழில் ‘ரட்சகன்’ படத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே மணிரத்னம் இயக்கிய ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் பிரபலமடைந்தேன். அவருடன் ‘கீதாஞ்சலி’ படத்தில் பணியாற்றிய அனுபவங்களை மறக்க முடியாது. ‘பொன்னியின் செல்வன் – 1’ படத்தில் ஐஸ்வர்யா, கார்த்தி, விக்ரம் அனைவரும் நன்றாக நடித்திருந்தார்கள்.

‘உதயம்’ படத்தில் மக்கள் என்னைப் பாராட்டினார்கள். பிறகு, ‘ரட்சகன்’ படமும் மாபெரும் வெற்றி பெற்றது. சில வருடங்களுக்கு முன்பு வெளியான ‘தோழா’ படமும் வெற்றியடைந்தது. ‘தோழா’ படத்தில் கார்த்தியுடன் நெருக்கம் ஏற்பட்டது. அப்படத்தை மக்கள் கொண்டாடினார்கள். விமர்சனங்களும் நன்றாக கொடுத்திருந்தார்கள். அதேபோல் பயணம் படமும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. இப்படத்திற்கு தமிழில் நான் தான் டப்பிங் பேசி இருக்கிறேன்'' என்றார்.

இதையடுத்து 'பொன்னியின் செல்வன்' படத்துடனான 'பாகுபலி' ஒப்பிட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ''நான் பொன்னியின் செல்வன் நாவலை வாசித்திருக்கிறேன். படம் சிறப்பாக வந்துள்ளது. இப்படியான ஒப்பிட்டு குறித்து பேசுபவர்களை கண்டுகொள்ளாதீர்கள்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE