இளையராஜாவுடன் இசையிரவு 2 | 'ஆறும் அது ஆழமில்ல' - அழிக்க முடியாத காதல் நினைவலைகள்!

By குமார் துரைக்கண்ணு

அடித்து பெய்த மழை சற்றே ஓய்ந்திருந்தாலும், மேற்கூரையின் வழியே சொட்டும் மழைத்துளியும், மரத்தின் இலைகள் உதிர்க்கும் தூறலும், கொசுறு போல் கொட்டிக் கொண்டிருந்த சாரல்களின் தூத்தலும் நின்றபாடில்லை. இத்தருணத்தில் இதமான ஒரு கதகதப்பை நம்மைப் போலவே நமது மனங்களும் தேடுகிறது. அக்கதகதப்பை பலருக்கு ஒரு கோப்பைத் தேநீரோ, ஒரு புத்தகமோ அல்லது ஒரு ரெட்ரோ பாடலோ உடனே தந்துவிடலாம்.

அந்த ரெட்ரோ காலத்து பாடல்களில் முந்தி வருபவை இளையராஜாவின் இசையாக இருப்பதற்கே சாத்தியங்கள் அதிகம். குளங்களின் மேல் பச்சைப்பட்டாடைப் போர்த்தியது போலவும், ஆளரவமற்ற இடங்களில் தொன்மையின் சுவடுகளாய் எஞ்சி நிற்கும் ஆளுயர மதில்களை இறுகப்பற்றி படர்ந்திருக்கும் பாசிகளைப் போலவும் அவரது இசையும்,பாடல்களும் பலரது மூளையின் மேற்புறத்தில் படர்ந்திருக்கின்றன.

சர்வைவல் பிரச்சினைகளின் விடாத துரத்தலின் காரணமாக கண்டங்களைக் கடந்தும், கடல் தாண்டியும், வாழ்வதற்கு அரிய நகர்ப்புறங்களிலும், அடைபட்டுக் கொண்டிருந்தாலும் ஒவ்வொருவருக்கும் அவர் பிறந்த, வாழ்ந்த ஊர்களும், அங்குள்ள மனிதர்களும், கோயில்களும், விழாக்களும், பழக்கவழக்கங்களும், விடலைப்பருவ காதல் அனுபவங்களும் நீக்கமற நிறைந்திருப்பவை.

இப்போது நினைத்துப் பார்க்கும்போது, பலருக்கு ரகசிய புன்னைகையை வரச்செய்யும், விவரமறியப் பருவத்தில் வந்த காதல் தோல்வியில் முடிந்திருந்தாலும், அந்நினைவுகள் வெட்ட வெட்ட முளைத்துக் கொண்டே இருந்திருக்கும். அந்த வகையில், இந்தப்படம் வெளிவந்த 1986-ம் ஆண்டு முதல் இப்போது வரை காதல் தோல்வியென்றால் நினைவுக்கு வரும் முதல் பாடல் இதுவாகத்தான் இருந்திருக்கும்.

இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த ‘முதல் வசந்தம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்தான் அது. பாடலை இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கும் விதமும், கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகளும், இளையராஜாவின் இசையும், அவரது குரலிலேயே இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் துருத்தும் காதல் நினைவுகள் எப்போதும் அழிக்கவே முடியாதவை.

கம்பி வேலி ஒன்றுக்கு டைட் குளோஸாக செல்லும் கேமிரா, அவுட் ஆஃப் போக்ஸாகி, தூரத்தில் மறையும் சூரியனுக்கு போக்ஸாகும். அப்போது துவங்கும் அந்த ம்ஹ்ம்ம்ம் ம்ஹ்ம்ம் என்ற கோரஸ் நம்மை அந்த பாடலின் சூழலுக்கே கைப்பிடித்துக் கூட்டிச் சென்றுவிடுவார் இசைஞானி. கோரஸூக்குப் பின், "டடக்கு டக்கு தும்.. டடக்கு டக்கு தும்மென".. தவிலும், உரிமியும் ஒருசேர இணையும்போது, நம் ஆழ்மனங்களின் அடித்தூறு வரை ஆட்சி செய்யத் தொடங்கிவிடுவார். இதிலிருந்து மீள்வதற்குள் நம்மை புல்லரித்துப் போகச் செய்யும் ஷெனாயின் இடையிசை. இதில் மூழ்கித் திளைத்த நம்மை,

" ஏம்மா நின்னுட்டே, மனசுக்கு புடிச்ச புருஷன் வேணும்னு ஆண்டவனை வேண்டிக்கிட்டு, ஆத்துல தீபத்தைவிடுமா" என்ற வசனம் சமநிலைக்கு கொண்டுவரும்.
அப்போது கையில் வைத்திருந்த தீபத்தை நாயகி ஆற்றில்விட்டு அது சில அடி நகர்ந்திருக்கும்..... அத்தருணத்தில் " ஆறும் அது ஆழமில்ல.. அது சேருங்கடலும் ஆழமில்ல" என்று இசைஞானி பாடத் தொடங்கும்போது சில்லு சில்லாக உடைந்துப்போன மனங்களை ஒட்டி வைத்துக் கொண்டவர்கள் ஏராளம்.

பெற்றோரின் நிபந்தனைக்காக காதலை கைவிட்ட நாயகியிடம், கண்ணியமாக, அவனை இப்படி ஏமாற்றிவிட்டாயே? என்று அவளின் காதல் கதை தெரிந்த மூன்றாவது நபர் பாடும் வகையில் இந்தப் பாடல் அமைந்திருக்கும். ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற சூழலுக்கு அமைக்கப்பட்ட பாடல் நம் எல்லோருக்கும் பொருந்திப்போகும் வித்தையைக் கற்றுத்தேர்ந்தவர்தான் இளையராஜா.

அதுவும் இப்பாடலில் வரும் வரிகள் அத்தனை எளிமையாகவும், பாடலைக் கேட்கும் அனைவரது மனங்களுக்கு அவ்வளவு நெருக்கமாகவும் பார்த்து பார்த்து வார்த்தைகளைக் கோர்த்திருப்பார் மூத்த கவிஞர் ஐயா முத்துலிங்கம்.

"மாடி வீடு கன்னி பொண்ணு
மனசுகுள்ள ரெண்டு கண்ணு
ஏழை கண்ண ஏங்க விட்டு
இன்னும் ஒண்ணு தேடுதம்மா

கண்ணுக்குள்ள மின்னும் மைய்யி
உள்ளுக்குள்ள எல்லாம் பொய்
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
சொந்தமெல்லாம் எங்கே போச்சு

நேசம் அந்த பாசம்
அது எல்லாம் வெளிவேஷம்
திரை போட்டு செஞ்ச மோசமே"

என வரும் இந்தப் பாடல் வரிகளை பாடாத 80-ஸ் 90-ஸ் கிட்ஸ்களே இருந்திருக்க மாட்டார்கள் என்னும் அளவுக்கு இந்தப் பாடல் அவ்வளவு பேருக்கு மிக நெருக்கமான பாடல். பாடலை பாடித் திரிந்த பலரும் காதல் செய்தார்களோ இல்லையோ, ஆனால் இந்தப் பாட்டு அவர்களுக்கு அத்தனைப் பரிச்சயமாக இருந்திருக்கும்.

அதேபோல், இரண்டாவது சரணத்தில் வரும் வரிகள் கேட்கவே வேண்டாம், ஆண்டவனைக்கூட விட்டுவைக்காமல் வம்புக்கு இழுத்திருப்பார்கள் கவிஞரும், ஞானியும்.

"தண்ணியில கோலம் போடு
ஆடி காத்தில் தீபம் ஏத்து
ஆகாயத்தில் கோட்ட கட்டு
அந்தரத்தில் தோட்டம் போடு

ஆண்டவன கூட்டி வந்து
அவனை அங்கே காவல் போடு
அத்தனையும் நடக்கும் அய்யா
ஆச வச்ச கிடைக்கும் அய்யா

ஆனா கிடைக்காது
நீ ஆச வைக்கும் மாது
அவள் நெஞ்சம் யாவும் வஞ்சமே"

அதுவும், ஆனா கிடைக்காது - இந்த இரு சொற்களின் இடைவெளிக்குள் வரும் அந்த ஒரு சின்ன புல்லாங்குழலிசை மீண்டும் மீண்டும் நம்மைக் கேட்கத் தூண்டும். இப்படி பாடல் முழுக்கவே, தனக்கு கிடைத்த இடங்களில் எல்லாம் தனது இசை மந்திரங்களை தூவி நிரப்பியிருப்பார் இளையராஜா.

இந்தப் பாடலுக்கு தவில் வாசித்தவர் இசைஞானி இளையராஜாவிடம் மிருதங்கம், டேப் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்கும் சுந்தர் என்பவர்தான். இவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பார், தவிலை "கிளிக் ட்ராக்" என்ற முறையில் சினிமாவில் பயன்படுத்தியவர் இளையராஜா தான். இந்த கிளிக் ட்ராக் முறையை தேர்ந்த தவில் கலைஞர்கள்கூட வாசிப்பது சுலபமல்ல, சரியான நேரத்தில் அந்த தாளம் உட்கார வேண்டும். குறிப்பாக ஆறும் அது ஆழமல்ல பாடல் எல்லாம் காலை 7 மணிக்கு பதிவு செய்யத் தொடங்கி, காலை 9 மணிக்கெல்லாம் முடிவுற்றப் பாடல் என்று கூறியிருப்பார்.

இரண்டு மணி நேரத்தில், பதிவு செய்யப்பட்ட இந்தப் பாடல்தான் கிட்டத்தட்ட 36 ஆண்டுகளாக நம் மனதில் உருத்திக்கொண்டிருக்கிறது என்ற ராஜாவின் இசை நாளையும் துருத்தும்...

'ஆறும் அது ஆழமில்ல'பாடல் இணைப்பு இங்கே

முந்தைய அத்தியாயம்: இளையராஜாவுடன் இசையிரவு 1 | ‘அழகிய கண்ணே’ - நம் மனதுக்கு ஓர் ஆறுதல்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

40 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்