“விஜய் சேதுபதியின் நடிப்பை என்னால் தொட முடியாது” - ‘விக்ரம் வேதா’ குறித்து ஹிர்த்திக் ரோஷன்

By செய்திப்பிரிவு

''படத்தில் விஜய் சேதுபதி அவரது கதாபாத்திரத்தில் எவ்வளவு அற்புதமாக நடித்திருந்தார் என்பது எனக்குத் தெரியும். அந்த நிலையை எட்டுவது குறித்து என்னால் கனவில் கூட நினைக்க முடியாது'' என ஹிர்த்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. இந்தப் படம் இந்தியில் அதே பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு வரும் 30-ம் தேதி வெளியாகிறது. அந்த நாளில் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் 1' படமும் வெளியாகிறது.

இந்த நிலையில், படத்தின் ப்ரமோஷனில் 'விக்ரம் வேதா' படக்குழு இறங்கியுள்ளது. படம் குறித்து ஹிர்த்திக் ரோஷன் அளித்த பேட்டி ஒன்றில் 'விக்ரம் வேதா' படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்து பேசியிருந்தார். அதில், “படத்தில் விஜய் சேதுபதி அவரது கதாபாத்திரத்தில் எவ்வளவு அற்புதமாக நடித்திருந்தார் என்பது எனக்குத் தெரியும். அந்த நிலையை எட்டுவது குறித்து என்னால் கனவில் நினைக்க முடியாது. ஆனாலும், என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன், நான் செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நீங்கள் ஒரு கதாபாத்திரத்தை அணுகும்போது, அந்தக் கதாபாத்திரம் ​​செய்ததை மீண்டும் நீங்கள் செய்ய முடியாது. ‘அவர் அப்படிச் செய்தார், நானும் அதைச் செய்வேன்’ என்று நீங்கள் நினைத்தால், அது மிகவும் புத்திசாலித்தனமான வழி அல்ல. ஒவ்வொரு நபரும் வித்தியாசமானவர் என்பதை அறிந்துகொள்வதே அதற்கான எளிய வழி. எனவே, நான் பார்க்கும் விதத்தில் இதை அணுகினேன். அது தானாகவே வித்தியாசமாகவும், புதியதாகவும், நேர்மையாகவும் வந்திருக்கிறது'' என்றார்.

முன்னதாக மற்றொரு ப்ரமோஷன் நிகழ்வில் படக்குழுவிடம், பொன்னியின் செல்வனுடன் ‘விக்ரம் வேதா’ மோதுவது குறித்து கேட்டபோது, படத்தின் இயக்குநர் புஷ்கர், ''பொன்னியின் செல்வன் ஒரு க்ளாஸிக் நாவல். அது சோழர்கள் குறித்து பேசுகிறது. அதனை உங்களால் பீட் செய்ய முடியாது. அந்த நாவல் சென்னையிலிருந்து வந்த ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன். ஆக, நாங்கள் எங்களின் படத்தை இயக்கியிருக்கிறோம். அவர்கள் அவர்கள் படத்தை இயக்கியிருக்கிறார்கள். பார்ப்போம். பார்வையாளர்கள் இரண்டு படங்களையும் பார்ப்பார்கள் என நம்புகிறேன். நான் பொன்னியின் செல்வன் படத்தை விரைவில் பார்ப்பேன்'' என்றார். தொடர்ந்து ஹிர்த்திக் ரோஷன், 'நான் 'விக்ரம் வேதா' படத்தை பார்ப்பேன்' என விளையாட்டாக கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE