திரை ஆளுமை ஆஷா பரேக்-கிற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பழம்பெறும் நடிகை ஆஷா பரேக், 2020-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதைப் பெறுகிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.

ஆஷா பரேக் இந்திய திரைப்படத் துறையில் அதிகம் கொண்டாடப்படும் திரைக் கலைஞர்களில் ஒருவராக அறியப்படுகிறார். ஆஷா பரேக் நடிப்பை, அவரது முக்கியமான படங்களான ஜாப் ப்யார் கிஸி சே ஹோட்டா ஹாய (1961), பிர் ஊஹி லயா ஹூன் (1963), டீஸ்ரீ மன்சில் (1966), பஹ்ரான் கே சாப்னே (1967), ப்யார் கா மவ்சம் (1969), மற்றும் காரவன் (1971) உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் திரைப்படங்களில் இந்தித் திரையுலகம் கண்டு மகிழ்ந்தது. முக்கியமாக 60கள், 70களில் பாலிவுட் ஹீரோவாக வலம்வந்த ஷமி கபூர் ஜோடியாக ஆஷா பரேக் தோன்றி நடித்த படங்களை ரசிகர்கள் மட்டுமல்ல, விமர்சகர்ளும் வெகுவாக ரசித்து வரவேற்றனர்.

சோசலிச யதார்த்தவாத இயக்குநரான பீமல் ராய் தனது மா (1952) திரைப்படத்தில்தான் முதன்முதலாக ஆஷா பரேக்கை ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். உண்மையில், அந்த முதல் படத்திலேயே ஆஷா பரேக் தனது அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார். அதனாலேயே இந்திய திரையுலகில் அழுத்தமான தடம் பதித்து அக்காலத்திலேயே பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கிய நடிகையாக அவர் வலம்வந்தார்.

ஆஷா பரேக் தனது வாழ்க்கை நினைவுகளை ‘தி ஹிட் கேர்ள்’ என்று 2017-ல் புத்தகமாகவும் எழுதியுள்ளார். திரைத்துறையில் மிக உயரிய தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர்களான நாகேஸ்வரராவ், சிவாஜி கணேசன், கே.பாலச்சந்தர், ரஜினிகாந்த், ராஜ் கபூர், யாஷ் சோப்ரா, லதா மங்கேஷ்கர், மிருணாள் சென், அமிதாப் பச்சன், வினோத் கன்னா உள்ளிட்டோர் அடங்கிய பட்டியலில் இப்போது ஆஷா பரேக் இணைந்துள்ளார்.

இந்த அறிவிப்பு தொடர்பான மத்திய அரசின் செய்திக் குறிப்பு: 2020-ம் ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது, பிரபல திரைப்பட நடிகை ஆஷா பரேக் பெறுகிறார். புதுடெல்லியில் நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்படும்.

இந்த முடிவு குறித்து அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “இந்திய சினிமாவிற்கு ஆஷா பரேக் வாழ்நாள் முழுவதும் மிகச்சிறந்த பங்களிப்பு செய்ததை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு தாதா சாஹேப் விருதுக்கான அறிவிப்பை வெளியிடுவதில் நான் பெருமை அடைகிறேன்” என்றார். 2022 செப்டம்பர் 30 அன்று 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் என்பதை அறிவித்த அமைச்சர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இந்த விழாவிற்கு தலைமை தாங்குவார் என்றும் கூறினார்.

ஆஷா பரேக் புகழ்பெற்ற திரைப்பட நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர், இவற்றுடன் இந்திய செவ்வியல் நடனக் கலைஞருமாவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், தில் தேக்கே தேக்கோ என்ற திரைப்படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியாக விளங்கினார். 95-க்கும் அதிகமான திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

1992-ல் பரேக் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். 1998 முதல் 2001 வரை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் தலைவராக அவர் பணியாற்றியுள்ளார். ஐந்து உறுப்பினர் நடுவர் குழு, ஆஷாவுக்கு இந்த விருதினை வழங்கும் முடிவை மேற்கொண்டதாக அனுராக் தாக்கூர் கூறினார். நடுவர் குழு விவரம்: 1) ஆஷா போஸ்லே 2) ஹேமமாலினி, 3) பூனம் தில்லான், 4) டி எஸ் நாகாபரணா, 5) உதித் நாராயண்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE