6 பூகம்பங்களை கடந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில் - சோழர்கள் பெருமை பேசிய விக்ரம்

By செய்திப்பிரிவு

'தஞ்சை பெரிய கோயில் 6 பூகம்பங்களை கடந்தும் நிற்கிறது' என சோழர்களின் பெருமையை நடிகர் விக்ரம் விளக்கி பேசிய காணொலி வைரலாகி வருகிறது.

கல்கியின் நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குநர் மணிரத்னம் உருவாக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி படக்ககுழுவினர் படம் தொடர்பான ப்ரமோஷனில் பிஸியாகியுள்ளனர். அந்த வகையில் மும்பையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினர். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர், "வரலாற்றை தெரிந்து கொள்வது எந்த அளவு முக்கியமானது?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த போது நடிகர் விக்ரம், "நாம் எகிப்தில் உள்ள பிரமீடுகள் பற்றி பேசுகிறோம். அதை எப்படி கட்டி இருப்பார்கள் என்றெல்லாம் யோசிக்கிறோம். ஆனால் நம் இந்தியாவில் நிறைய கோயில்கள் இருக்கின்றன. அதில் உயரமான கோபுரத்தை கொண்ட கோயில் என்றால் அது தஞ்சை பெரிய கோயில் தான். சோழ மன்னர் ராஜராஜ சோழன் அந்த கோயிலைக் கட்டினார். உலகத்திலேயே உயரமான கோபுரத்தை கொண்ட கோயில் அதுதான். அந்த கோயில் கோபுரத்தின் உச்சியில் உள்ள கல் மட்டும் 80 டன் எடை கொண்டது. ஒரு டன்னோ, இரண்டு டன்னோ அல்ல; 80 டன் எடையை சுமந்திருக்கிறது.

பைசா சாய்ந்த கோபுரத்தை நாம் பாராட்டுகிறோம். ஆனால் தஞ்சை பெரிய கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக 6 பூகம்பங்களை தாங்கி இன்று வரை நிற்கிறது. அதிலும் எந்த வகையான பூச்சுமில்லாமல் அந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. அது எப்படி சாத்தியமானது என்றால், முதலில் சுற்றுச்சுவர், பின்னர் 6 அடி நீளத்துக்கு தாழ்வாரம் அமைத்து அதன்பின்னர் மையப்பகுதியில் கோவிலை கட்டி உள்ளனர். அதனால் தான் அது இத்தனை பூகம்பங்களையும் தாண்டி இன்றளவும் நிலைத்து நிற்கிறது. அந்த காலத்தில் எந்திரங்கள் இல்லை. வெறும் யானைகள், குதிரைகள், மனிதர்கள் கொண்டு அந்த கட்டுமானம் கட்டப்பட்டுள்ளது. எந்திரங்கள் எதுவும் இல்லாமல், யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களைக் கொண்டு அவ்வளவு பெரிய கட்டுமானத்தைக் கட்டியுள்ளனர்.

ராஜராஜசோழன் தனது காலத்தில் 5 ஆயிரம் அணைகளை கட்டியுள்ளார். நீர் மேலாண்மைக்கு தனி துறையை அமைத்துள்ளார். அந்த காலத்திலேயே தேர்தல்கள் நடத்தியுள்ளனர். ஆறுகளுக்கு பெண்களின் பெயர்களை சூட்டியுள்ளனர். இலவச மருத்துவமனைகள் கட்டியுள்ளனர். கடன் உதவிகளையும் வழங்கி கண்ணியமாக வாழ்ந்துள்ளனர். இவையெல்லாம் 9-ம் நூற்றாண்டில் நடந்தவை என்றால் ஆச்சரியமாக உள்ளது. இதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். வட இந்தியா, தென் இந்தியா என பிரிக்க வேண்டாம் நாமெல்லாம் இந்தியர்கள். எனவே இதை கொண்டாட வேண்டும்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE