ஹாலிவுட் டேலன்ட் ஏஜென்சியுடன் இயக்குநர் ராஜமௌலி ஒப்பந்தம் 

By செய்திப்பிரிவு

ஹாலிவுட்டில் திறமைசாலிகள் மற்றும் விளையாட்டு வீரர்களின் திறனை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் ‘க்ரியேட்டிவ் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஏஜென்ஸி’ ராஜமௌலியை ஒப்பந்தம் செய்திருக்கிறது.

ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் மார்ச் 24-ல் வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் உலகமெங்கும் 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. அதன்பிறகு நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி தொடர்ந்து 10 வாரங்கள் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது.

பல்வேறு சாதனைகளை புரிந்த 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் தேர்வாகாதது அந்தப் படத்தின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இது ஒருபுறமிருக்க, ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட அமெரிக்க நிறுவனமான க்ரியேட்டிவ் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஏஜென்ஸி நிறுவனம், அவருடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது.

கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை மையமாகக் கொண்டு இயங்கிவரும் க்ரியேட்டிவ் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஏஜென்ஸி, அமெரிக்காவின் திறமைசாலிகள் மற்றும் விளையாட்டு வீரர்களின் திறனை அடையாளம் கண்டு ஊக்குவிக்கிறது. அந்த வகையில் ராஜமெளலியுடன் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. ஆனால், அது என்ன ஒப்பந்தம் என்பது குறித்த பின்னணி தகவல்கள் எதுவும் தற்போது வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE