“அதைக் கடந்து வந்துவிட்டேன்” - ஆஸ்கர் பரிந்துரை குறித்து ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநர்

By செய்திப்பிரிவு

'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படாத நிலையில், 'அதைக் கடந்து வந்துவிட்டேன்' என படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான பிரிவில் ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் திரைப்படங்கள் அனுப்பப்படும். அந்த வகையில் இந்தியா சார்பில் 'செலோ சோ' (chhelloshow) என்ற குஜராத்தி படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் சிறுவனின் சினிமா மீதான காதல் குறித்த திரைப்படமான இதை பான் நளின் இயக்கியுள்ளார். இந்தியா சார்பில் ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்', விவேக் அக்னிஹோத்ரியின் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' உள்ளிட்ட திரைப்படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும் என ரசிகர்களில் ஒரு தரப்பினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவை தேர்வாகவில்லை.

இதனிடையே, 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்தியாவின் அதிகாரபூர்வ நுழைவாக தேர்ந்தெடுக்கப்பட்ட படக் குழுவிற்கும் வாழ்த்துகள். ஆஸ்கர் விழாவில் அவர்களுக்கு சிறந்த திரைப்பட விருது கிடைக்க வாழ்த்துகிறேன்'' எனப் பதிவிட்டிருந்தார்.

மேலும், தனது படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படாமல் விடுபட்டது தொடர்பாக கருத்து தெரிவிக்காத அவர், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், ''ஆஸ்காருக்கு தேர்வாகியுள்ள படக்குழுவிற்கு வாழ்த்து சொல்வதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை. அதிலிருந்து நான் கடந்து வந்துவிட்டேன். தற்போது மற்றொரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE