ஆதார்: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

கட்டிடத் தொழிலாளியான பச்சைமுத்து (கருணாஸ்)வின் மனைவி துளசிக்கு (ரித்விகா) மருத்துவமனையில் குழந்தைப் பிறக்கிறது. அவரும் அவருக்குத் துணையாக இருந்த சரோஜா(இனியா)வும் திடீரென காணாமல் போகிறார்கள். இதில் சரோஜாவின் சடலம் மருத்துவமனைக்கு வெளியில் கிடைக்கிறது. தனது மனைவியை காணாமல் தவிக்கும் பச்சை முத்து, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். விசாரிக்கும் அவர்கள், ஒரு பகீர் தகவலைச் சொல்கிறார்கள். நம்ப மறுக்கிறார் பச்சைமுத்து. அவர் மனைவி எங்கு சென்றார், என்ன ஆனார் என்பதுதான் படம்.

பணத்துக்கும் அதிகாரத்துக்கும் இடையில் சாதாரண மனிதனின் நீதி எப்படி தள்ளாடுகிறது என்பதையும் கார்ப்பரேட்களின் சூழ்ச்சியில், எளிய மனிதர்களின் உயிர்கள் எப்போதும் விளையாட்டுக் கருவிதான் என்பதையும் எந்த மிகையுமின்றி யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார், இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார். ஒரு க்ரைம் திரில்லர் கதையை, வணிக மசாலா இல்லாமல் சமரசமின்றி படமாக்கி இருப்பதற்காகப் பாராட்டலாம் அவரை.

இயக்குநரின் அழுத்தமான முயற்சிக்கு, கதையை மீறாத, மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும் ஸ்ரீகாந்த் தேவாவின் உறுத்தலில்லாத பின்னணி இசையும் ஆர்.ராமரின் எடிட்டிங்கும் பிரம்மாதமாக உதவி இருக்கிறது.

கட்டிடத் தொழிலாளியாக வரும் கருணாஸுக்கு இது முக்கியமான படம். கிழிந்த பனியனும் அழுக்கு லுங்கியுமான அவருடைய பரிதாப தோற்றம் வழக்கமான வறுமை தொழிலாளியை, அப்படியே காட்டுகிறது. மனைவியை காணாமல் கதறும்போதும், குழந்தையை கையில் வைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் தவிக்கும்போதும், அதிகாரத்தின் மிரட்டலில் ஏதும்செய்ய இயலாதவராகப் பரிதவித்து நிற்கும்போதும் ஒரு படி உயர்ந்திருக்கிறார் நடிப்பில்.

கர்ப்பிணியான ரித்விகாவுக்கு அதிக வேலை இல்லை என்றாலும் அவரைச் சுற்றிதான் கதை என்பதால் கிடைத்த கேப்-பில் ஸ்கோர் செய்கிறார். முதலில் கருணாஸுடன் மோதலில் ஈடுபட்டு, பிறகு பரிதாபத்தால் உதவும் இனியா பாத்திரம், முதல் பாதி சஸ்பென்ஸுக்கு கை கொடுக்கிறது. திருட்டுத் தொழில் செய்தாலும் அவருக்குள் இருக்கும் ஈரத்தை காட்டும் நேர்மையில் அவர் கேரக்டர் நிமிர்ந்து நிற்கிறது.

தங்கள் அதிகாரத்தை எப்படியும் வளைக்கும் உதவி காவல் ஆணையர் உமா ரியாஸ், கொடூரமான ஆய்வாளர், ‘பாகுபலி’ பிரபாகர் ஆகியோர் அந்தந்த பாத்திரத்தில் ஒன்றி இருக்கிறார்கள். சோகமான நடை, மெதுவான பேச்சு என வயதான காவலரை கண்முன் நிறுத்துகிறார், அருண் பாண்டியன். தவறுக்கு உடந்தையாக இருந்துவிட்டதற்காக அவர் எடுக்கும் முடிவு அதிர்ச்சிதான்.

பணிவான மேஸ்திரி பி.எல்.தேனப்பன், குடிகார ஆட்டோ ஓட்டுநர் திலீபன் ஆகியோரும் தங்கள் பாத்திரங்களைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

இரண்டு மணி நேரப் படம் என்றாலும் மெதுவாகத்தான் நகர்த்திச் செல்கிறது திரைக்கதை. படத்துக்குப் பலமான சஸ்பென்சை இன்னும் கொஞ்சம் புரியும்படி சொல்லி இருக்கலாம் என்பது போன்ற சிற்சில குறைகள் இருந்தாலும் அது ‘ஆதாரு’க்கான திருஷ்டிப் பொட்டாகவே இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE