“மீண்டும் ஹீரோவாகவே திரும்பி வந்துள்ளேன்...” - நடிகர் ராமராஜன் உருக்கம்

By செய்திப்பிரிவு

1990-களில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் ராமராஜன், நீண்ட இடைவெளிக்குப்பின் கடந்த 2012-ம் ஆண்டு 'மேதை' படத்தில் நடித்தார். அதையடுத்து 10 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் நாயகனாக வருகிறார். அவரது இந்த படத்துக்கு ‘சாமானியன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இப்படத்தை ராஹேஷ் இயக்குகிறார். ராமராஜனுடன், எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அச்சு ராஜாமணி இசை அமைக்கும் இந்த படத்திற்கு அருள்செல்வன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்துள்ளது.
.
இந்த விழாவில் படத்தின் நாயகன் நடிகர் ராமராஜன் பேசும்போது, “என்னுடைய கரகாட்டக்காரன் படம் இதே கிருஷ்ணவேணி தியேட்டரில் அன்று 300 நாட்கள் ஓடியது. இன்று அதே தியேட்டரில் என்னுடைய படத்தின் விழா நடப்பது சந்தோஷமாக இருக்கிறது. அதுமட்டுமா என்னுடைய பட விழா ஒன்றில் இத்தனை மைக், இத்தனை கேமராக்களை நான் பார்ப்பது இதுதான் முதல்முறை. நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தேன். ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லும் என்பது போல இப்போது மீண்டும் ஹீரோவாகவே திரும்பி வந்துள்ளேன். இந்த படத்தில் நான் ஹீரோ என்பதைவிட கதையும் திரைக்கதையும் தான் ஹீரோ என்று சொல்லலாம். இந்த படத்தின் டீசரை பார்த்துவிட்டு ராமராஜன் துப்பாக்கி புடிச்சு என்ன பண்ணப்போறார் என்றுதான் பலரும் கேட்பார்கள் அதற்கான விடை இந்த படத்தில் இருக்கிறது.

இத்தனை வருடங்களில் எத்தனையோ கதைகள் கேட்டேன். சரியாக அமையவில்லை. ஆனால் எவ்வளவு கோடி கொடுத்தாலும் தரம் கெட்டுப்போய் மோசமான படங்களில் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன். ஏனென்றால் நான் பின்தொடர்வது புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பாதையை. அதனால்தான் தம் அடிக்கவும் தண்ணி அடிக்கவும் எனக்கு பிடிக்காது. முதல்முறையாக எனது படம் 5 மொழிகளில் வெளியாகிறது என்பதை இப்போது நினைத்தாலும் இது கனவா இல்லை நனவா என்று தான் நினைக்க தோன்றுகிறது” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE