Chhello Show: இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்படும் குஜராத்தி திரைப்படம்

By செய்திப்பிரிவு

சென்னை: சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு ‘Chhello Show’ என்ற குஜராத்தி மொழி திரைப்படத்தை இந்தியா பரிந்துரைத்துள்ளது.

ஆஸ்கர் விருதுகள் பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. 95-வது ஆஸ்கர் விருதுகள் விரைவில் வழங்கப்பட இருக்கின்றன. இதற்காக பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டின் சிறந்த திரைப்படங்களை பரிந்துரைத்து வருகின்றன. அந்த வகையில், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவுக்காக ‘Chhello Show’ என்ற திரைப்படத்தை இந்திய திரைப்பட கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது.

இந்த படம் குறித்த ஒரு விரைவுப் பார்வை.

ஆர்.ஆர்.ஆர், தி காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற திரைப்படங்களில் ஒன்றுதான் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. நெட்டிசன்கள் தங்கள் பதிவுகளின் மூலம் சமூக வலைத்தளங்களில் அதனை வெளிப்படுத்தியும் இருந்தனர். இந்த சூழலில் தேர்வுக்குழுவினரின் தேர்வு வேறு ரகமாக இருந்துள்ளது. அது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

‘Chhello Show’ திரைப்படம் பல்வேறு வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 14-ம் தேதி தான் இந்த படம் இந்தியாவில் வெளியாக உள்ளது. அதற்குள் ஆஸ்கர் பரிந்துரையை பெற்றுள்ளது. 110 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த திரைப்படத்தை மூன்று பேர் இணைந்து தயாரித்துள்ளனர். பான் நளின் இயக்கி உள்ளார்.

குஜராத் மாநிலம் சவுராஷ்ட்ராவில் உள்ள ஊரக பகுதியை கதைக்களமாக கொண்டு நகர்கிறது இந்த படம். 9 வயது சிறுவன்தான் படத்தின் ஆன்மா. அவனுக்குள் இருக்கும் தீராத திரைப்பட தாகத்தை இயக்குனர் திரைக்கதை மூலம் வெளிகாட்டி உள்ளார். சினிமா மீது கொண்ட காதலால் அவன் எடுக்கும் சில சுவாரஸ்ய முடிவுகள் கவனத்தை ஈர்க்கும் ரகமாக உள்ளன. அதிலும் திரைப்படத்தை அந்த சிறுவன் ஆப்பரேட்டர் அறையிலிருந்து பார்ப்பது சூப்பர். அவன் படம் பார்க்கும் தியேட்டர் ஏதோ ஒரு காரணத்தால் அதன் இயக்கத்தை நிறுத்திக் கொள்கிறது. அதன்பிறகு அவன் தனது திரை தாகத்தை எப்படி தீர்த்துக் கொண்டான் என்பதுதான் கதை.

எதிர்காலம் கதைசொல்லிகளுக்கானது என ஒரு காட்சியில் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் சமை என்ற கதாபாத்திரத்தில் பவின் ரபாரி நடித்துள்ளார். அவர் தான் அந்த 9 வயது சிறுவன். அவர்தான் கதையின் நாயகனும் கூட. இயக்குனர் தனது பால்ய கால நினைவுகளை திரட்டி, அழகான பூ மாலையாக கோர்த்து படம் எடுத்தது போல உள்ளது.

பவேஷ், ரிச்சா மீனா, திபென் ராவல், பரேஷ் மேத்தா, விகாஸ் பாடா, ராகுல் கோலி உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் ட்ரெய்லரை காண...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE