“உருவக் கேலி செய்யாதீர்கள்” - நடிகர் சிம்பு வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

''உருவக் கேலி செய்யாதீர்கள். அது சம்பந்தப்பட்டவர்களுக்கு வலியைத் தரும்'' என்று நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'வெந்து தணிந்தது காடு' படத்தின் வெற்றி மற்றும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். அப்போது பேசிய நடிகர் சிம்பு, “என்னுடைய இந்தப் படம் தான் முதன்முறையாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வெளியாகியிருக்கிறது. இது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. படம் இவ்வளவு வசூல் குவிக்கும் என நான் நினைக்கவில்லை.

படத்தின் வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சி தந்துள்ளது. என்னை மாற்றிக்கொண்டு நடிக்க வேண்டும் என நினைத்தேன். முதலில் காதல் கதைதான் செய்வதாக இருந்தது. இந்தக் கதை கேட்டவுடன் இதை செய்யலாம் என்றேன். இப்படம் தந்த கௌதம் மேனனுக்கு நன்றி. இவ்வளவு பெரிய படமாக மாற்றிய ஐசரி கணேசனுக்கு நன்றி. இந்தப் படத்தின் ஒல்லியாக மாறி நடித்துள்ளேன். அதனால் சிலரால் என் உடம்பை கேலி செய்ய முடியவில்லை.

தயவு செய்து ஒருவரின் உருவத்தை கேலி செய்யாதீர்கள். நான் பரவாயில்லை. மற்றவர்களுக்கு அது பெரும் வலியைத் தரும். உருவக் கேலிக்கு ஆளாக்கப்படும் பலருக்கு இது காயத்தை ஏற்படுத்தும். இனி அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிப்பேன். 'வெந்து தணிந்தது காடு பாகம் 2'-ஐ ரசிகர்கள் இன்னும் ரசிக்கும்படி நல்ல ஆக்‌ஷனோடு எழுதுங்கள். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE