“விஜயகாந்த் போல அதர்வாவின் ஆக்‌ஷன் வியக்கத்தக்கது” - நடிகர் சின்னி ஜெயந்த் 

By செய்திப்பிரிவு

''ஆக்‌ஷனில் தமிழில் சிலர் மட்டுமே ஜொலிப்பார்கள். விஜயகாந்த் போல் அதர்வாவின் ஆக்‌ஷன் நடிப்பில் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்'' என நடிகர் சின்னி ஜெயந்த் தெரிவித்துள்ளார்.

'குருதி ஆட்டம்' படத்தைத் தொடர்ந்து 'டார்லிங்', 'கூர்கா' படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் 'ட்ரிக்கர்'. பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பாவின் பிரமோத் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அதர்வாவுடன் தான்யா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன், முனிஷ் காந்த உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு 'இரும்புத்திரை', 'ஹீரோ' படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் வசனம் எழுதியுள்ளார். படம் வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் அருண் பாண்டியன், சின்னி ஜெய்ந்த், நடிகர் அதர்வா, இயக்குநர் சாம் ஆண்டன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நடிகர் சின்னி ஜெயந்த் பேசுகையில், “இந்தப் படத்தில் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தை இயக்குநர் வடிவமைத்துள்ளார். ஒரு ஆக்‌ஷன் நிறைந்த ஆங்கில படத்தில் நடித்த அனுபவம் போல் இந்தப் படம் இருந்தது. அதர்வா உடன் எனக்கு இது முதல் படம். ஆக்‌ஷனில் தமிழில் சிலர் மட்டுமே ஜொலிப்பார்கள் விஜயகாந்த் போல் அதர்வாவின் ஆக்‌ஷன் நடிப்பில் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இந்தப் படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றியடையும்” என்றார்.

நடிகர் அதர்வா பேசுகையில், “நானும் இயக்குநரும் இணையும் இரண்டாவது படம். நல்ல கதைக்கரு உடைய திரைப்படம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். ஆக்‌ஷனை தாண்டி படம் உணர்வுபூர்வமான பல விஷயங்களை கொண்டுள்ளது. தயாரிப்பாளர் ஷ்ருதி ஒரு தயாரிப்பாளரை தாண்டி கிரியேட்டிவ்வாக படத்தில் பணிபுரிந்தார். சாம் ஆண்டன் பதற்றமில்லாமல், சாதாரணமாக படத்தை கையாள்வார், அவர் நிச்சயமாக பெரிய இடத்திற்கு செல்வார்.

அருண் பாண்டியன், சின்னி ஜெயந்த் இருவருடைய நடிப்பும் அபாரமாக இருந்தது. சின்னி ஜெயந்த் சாரை அப்பாவுடன் சூட்டிங் செல்லும் போது பார்த்துள்ளேன் இப்போதும் இளமையாக இருக்கிறார். என்னுடன் காலேஜ் படத்தில் நடிப்பார். படம் தொழில்நுட்ப ரீதியாக பலரது உழைப்பால் நன்றாக வந்துள்ளது. ஒரு நல்ல படத்தை உருவாக்கிய சந்தோசம் எங்களுக்கு இருக்கிறது'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE