“வசதியின்மையால் நண்பர்கள் வீட்டுக்குச் சென்று பியானோ பயிற்சி எடுப்பேன்” - ஆண்ட்ரியா பகிர்ந்த நினைவலை

By செய்திப்பிரிவு

''நான் விரும்பியதை வீட்டில் வாங்கித் தந்தார்கள். ஆனால் பியானோ வாங்குவது என்பது ஆடம்பரமான விஷயமாக இருந்தது. என்னிடம் பியானோ இல்லாமலேயே பியானோ இசை பற்றி நான் படித்தேன்'' என நடிகை ஆன்ட்ரியா தெரிவித்துள்ளார்.

நடிகை ஆண்ட்ரியாவின் 'ஃபிளேவர்ஸ்' என்கிற பெயரில் தனது முதல் ஆங்கில இசை ஆல்பத்தை விரைவில் வெளியிட உள்ளார். இந்த ஆல்பம் குறித்து அவர் பேசுகையில், ''என்னுடைய தாத்தா ரயில்வே துறையில் பணியாற்றினார். என்னுடைய தந்தை தான் எங்களுடைய குடும்பத்தில் முதல்முதலாகப் பட்டப்படிப்பை முடித்தவர். வழக்கறிஞர். பைக், வாடகை வீடு என இருந்த நாங்கள் கார், சொந்தமாக அபார்ட்மென்ட் என மாறினோம். எங்களுடைய வளர்ச்சி மெதுவாக நிகழ்ந்தது. அதேசமயம் உறுதியாக, உண்மையாக இருந்தது.

நான் விரும்பியதை வீட்டில் வாங்கித் தந்தார்கள். ஆனால் பியானோ வாங்குவது என்பது ஆடம்பரமான விஷயமாக இருந்தது. என்னிடம் பியானோ இல்லாமலேயே பியானோ இசை பற்றி நான் படித்தேன். பியானோ தேர்வுகளுக்கு முன்பு நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று பியானோவில் பயிற்சி எடுப்பேன். எனக்கு 18 வயதான பிறகு தான் என் தந்தை எனக்கு பியானோ வாங்கித் தந்தார். ஆனால், முரண்பாடாக அப்போது நடிப்புக்கு முக்கியத்துவம் தந்ததால் பியானோ வகுப்புகள் பின்னுக்குச் சென்றன. என்னிடம் இப்போதும் பியானோ உள்ளது. என்னுடைய அறையில் பெருமையுடன் இடம்பிடித்துள்ளது'' என தெரிவித்துள்ளார்.

மேலும், ''என்னுடைய இந்த ஆல்பம் வெளியாக வேண்டும். காரணம் அது இசை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, ஏழைக் குழந்தைகள் கல்வி கற்பதற்காகவும் கூட. நாங்கள் சோபியா டிரஸ்ட் என்ற தொண்டு அறக்கட்டளையை அமைத்துள்ளோம். இதன்மூலம் நாங்கள் ஆதரவற்ற குழந்தைகள் படிக்க உதவி செய்கின்றோம். வறுமை மற்றும் பட்டினியில்லாத இந்தியாவை உருவாக்க கல்வி தான் சிறந்த வழி என்று நான் உறுதியாக நம்புகிறேன்'' என கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE