‘வெந்து தணிந்தது காடு’ முதல் ‘சினம்’ வரை: இந்த வார தியேட்டர் ரிலீஸ் படங்கள் - ஒரு பார்வை

By செய்திப்பிரிவு

இந்த வாரம் திரையரங்குகளில் என்னென்ன படங்கள் வெளியாக உள்ளன என்பது குறித்து பார்ப்போம்.

வெந்து தணிந்தது காடு: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. படத்தில் நாயகியாக சித்தி இதானி நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் நாளை (செப்டம்பர் 15) திரையரங்குகளில் வெளியாகிறது. ஜெயமோகன் எழுதிய கதையின் அடிப்படையில் படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சினம்: ஜி.என்.குமாரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'சினம்'. பலக் லால்வானி நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார். அருண் விஜய் போலீஸாக நடித்துள்ள இப்படத்தை செப்டம்பர் 16-ம் தேதி திரையரங்குளில் காணலாம்.

இனி உதாரம் (Ini Utharam): அபர்ணா பாலமுரளி, ஹரிஷ் உத்தமன் நடித்துள்ள மலையாள படம் 'இனி உதாரம்'. சுதீஷ் ராமசந்திரன் இயக்கியுள்ள இப்படம் ஒரு கொலையை மையமாக கொண்டு நடைபெறும் விசாரணையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படம் செப்டம்பர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

சாகினி டாகினி (Saakini Daakini): நிவேதா தாமஸ், ரெஜினா நடிக்க சுதீர் வர்மா இயக்கியுள்ள தெலுங்கு திரைப்படம் 'சாகினி டாகினி'. கடத்தலை அடிப்படையாக கொண்டு க்ரைம் - த்ரில்லர் படமான இது செப்டம்பர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கொத்து (Kotthu): சிபி மலையில் இயக்கத்தில் நிகிலா விமல், ரோஷன் மேத்யூ, ஆசீஃப் அலி, நடித்துள்ள மலையாள படம் 'கொத்து'. வட கேரளாவில் வாழும் ஒரு இளைஞனின் வாழ்க்கை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் செப்டம்பர் 16-ல் வெளியாகிறது.

ரெண்டகம் (Rendagam): ஃபெலினி இயக்கத்தில் அரவிந்த்சாமி, குஞ்சாகா போபன், ஜாக்கி ஷெராப், அணிஷ் கோபால், நடித்துள்ள படம் 'ரெண்டகம்'. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் ஆர்யா, ஷாஜி நடேசன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தின் மூலம் குஞ்சாகா போபன் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார். மலையாளத்தில் 'ஒட்டு' என்ற பெயரில் வெளியான படம் தமிழில் செப்டம்பர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE