நான் ‘காந்தியவாதி’ அல்ல... ‘நேத்தாவாதி’ - கங்கனா ரனாவத் கருத்து

By செய்திப்பிரிவு

புது டெல்லி: தான் காந்தியவாதி அல்ல என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். வியாழன் அன்று டெல்லியில் நடைபெற்ற ‘கடமைப் பாதை’ விழாவில் அவர் பங்கேற்றிருந்தார். அப்போது இதனை அவர் தெரிவித்துள்ளார்.

“நான் எப்போதுமே இதைத்தான் சொல்லி வருகிறேன். நான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வழியில் நடக்கும் ‘நேத்தாவாதி’. நான் காந்தி வழியை பின்பற்றும் ‘காந்தியவாதி’ அல்ல. நான் இப்படி பேசுவது பலருக்கு இம்சை கொடுக்கலாம். நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையில் யோசிப்போம். எனது பார்வையில் நேதாஜியின் போராட்டம் மறுக்கப்பட்டுள்ளது. அவர் மட்டுமல்லாது பல புரட்சியாளர்களின் போராட்டமும் இங்கு மறுக்கப்பட்டும், மறக்கடிக்கப்பட்டும் உள்ளது. அதில் ஒருவர் வீர சாவர்க்கர்.

நமக்கு சுதந்திர போராட்டத்தின் ஒரு பக்கம் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு’ என காந்தி சொன்னதில் ஒருபக்கம் மட்டும் தான் நாம் பார்த்துள்ளோம். அது தண்டி யாத்திரை, உண்ணாவிரதப் போராட்டம் மட்டும்தான்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ராணுவத்தை கட்டமைத்தவர் நேதாஜி. சுதந்திர வேட்கை கண்டு உலகம் முழுவதும் பயணித்தவர் அவர். அதிகாரத்தை விரும்பியவர்களுக்கு அதை வழங்கியவர். ஒருபோதும் அவருக்கு அதிகாரப் பசி இருந்தது இல்லை. நாட்டின் விடுதலை மட்டுமே அவர் கொண்டிருந்த பசி” என்று கங்கனா தெரிவித்துள்ளார்.

கங்கனா பேசிய வீடியோ லிங்க்...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE