கணம் Review: நாஸ்டால்ஜியாவுடன் ஒரு எமோஷனல் டைம் ட்ராவல்

By கலிலுல்லா

வாழ்க்கையில் செகண்ட் சான்ஸ் என்பது இப்போது நாம் வாழும் இந்த 'கணம்' தான் என்கிறது படம்.

இசைக்கலைஞராக இருக்கிறார் ஆதி (ஷர்வானந்த்). வீட்டு ப்ரோக்கராக இருக்கிறார் பாண்டி (ரமேஷ் திலக்). திருமணத்துக்கு தீவிரமாக பெண் தேடிக்கொண்டிருக்கிறார் கதிர் (சதீஷ்). பள்ளியிலிருந்தே இணைப்பிரியா தோழர்களான இவர்கள் மூவருக்கும், தனித்தனியே தேவைகளும் விருப்பங்களும் உண்டு. ஆனால், அதை அடைய அவர்களுக்கு காலம் வேலியிட்டு வைத்துள்ளது. இந்த சூழலில் காலம் கடக்கும் எந்திரத்துடன் வரும் ஒருவர், நீங்கள் கடந்த காலத்துக்கு சென்று உங்கள் தேவைகளை நிறைவேற்ற நான் உதவி செய்கிறேன் என்கிறார்.

அத்தோடு ஒரு சிறிய உதவியையும் முன்வைக்கிறார். அதனை ஒப்புக்கொள்ளும் இந்த மூவரும் கடந்த காலத்துக்குள் நுழைகின்றனர். அப்படி நுழைந்தவர்கள் தங்கள் தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றினார்களா? இல்லையா? மீண்டும் நிகழ்காலத்திற்கு அவர்களால் வர முடிந்ததா? வாழ்க்கையில் அவர்களுக்கு கிடைத்த இரண்டாது வாய்ப்பு கைகொடுத்ததா? என்பது தான் 'கணம்' படத்தின் திரைக்கதை.

கடந்த காலத்திற்கு சென்று நம் வாழ்வில் தற்போது நிகழ்ந்துள்ள பல அசாம்பாவிதங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்ற விருப்பம் நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. அப்படி கடந்த காலத்திற்குள் நுழைந்தால் எப்படி இருக்கும் என்ற நம் எண்ணத்துக்கு திரைவடிவம் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகார்த்திக். 98 காலக்கட்டத்தில் நடக்கும் நாஸ்டால்ஜி சம்பவங்கள் படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு, குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு நன்றாகவே கனெக்ட் ஆகிறது. வாஷிங் பவுடர் நிர்மா விளம்பரத்தை திரையிலிருப்பவர்கள் ரசித்து பார்ப்பது போல நாமும் ரசித்து மகிழ்கிறோம். அப்படியான அழகான காட்சிகளை தொகுத்து நம்மையும் டைம் ட்ராவல் செய்ய வைத்த விதம் ஈர்க்கிறது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை டைம் ட்ராவல் பாணி படங்கள் ஏற்கெனவே வந்துள்ளன. பொதுவாக ஒரு படம் அதன் பாணியிலான கடந்த கால படங்களை பிரதியேடுக்காமல், சுவாரஸ்யமான புதுமையான காட்சிகள் வைப்பதன் மூலம் தான் அது தனித்துவம் பெறுகிறது. அப்படி இந்தப்படத்தில் ரசிக்கவும், கவனிக்கவும், சிரிக்கவும் காட்சிகள் பல காட்சிகள் இருப்பதால் ஒரு ஃப்ரஷ்ஷான திரையனுபவத்துடன் தனித்து நிற்கிறது கணம்.

வளர்ந்த ஒருவர் சிறிய வயதான தன்னையே நேருக்கு நேர் பார்க்கும் காட்சிகள் புனைவுலகில் புதுமை சேர்த்தது. 3 பேருக்கும் தனித்தனியே ஒரு கதையமைப்பு, அதலிருக்கும் சிறிய சிறிய தருணங்கள் என ரசிக்க நிறைய காட்சிகள் உண்டு.

இது ஒருபுறமிருந்தாலும், படத்தின் கருவான தாய்க்கும் - மகனுக்கும் இடையிலான எமோஷனல் கனெக்ட், 'ஒருமுறை என்ன பாரம்மா' பாடல் உணர்ச்சிகளை உசுப்பிவிட கைகொடுத்தது. அம்மா கதாபாத்திரத்தின் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை அமலா. ஆனால் அவர் நடிப்பில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்! மிகைநடிப்பையும், சில இடங்களில் நடிப்பின் போதாமையையும் உணர முடிந்தது. ஷர்வானந்த் க்ளோசப் சீன்களில் அழும் காட்சிகள், தாயின் இழப்புடன் ஒருவித மென் சோகத்தை சுமந்திருக்கும் முகம் என கவனம் பெறுகிறார்.

ரமேஷ் திலக் படத்திற்கு படம் தன்னை மேம்படுத்திக்கொள்கிறார். இந்த படத்தில் அவருடையே மிரட்டல் டோன், உடல்மொழி, ஒன்லைனர்கள் என நினைவில் தேங்கும் நடிப்பை கொடுத்திருக்கிறார். சதிஷ் இம்முறை இரட்டை அர்த்த வசனங்கள், உருவகேலியில்லாமல், காட்சியையொட்டி வரும் வசனங்கள் மூலமாக சிரிக்க வைத்தது சிறப்பு. (இதையே மற்ற படங்களிலும் தொடரலாம்). தவிர, ரித்து வர்மா, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் தங்களுடைய நடிப்பில் கவனம் பெறுகின்றனர்.

ஒட்டுமொத்தமாக படம் பார்த்து முடித்ததும் நாம் வாழும் இந்த நிமிடத்தின் முக்கியத்துவத்தை நெற்றிப்பொட்டில் அறைந்தார் போல நன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது. உறவுகளின் இன்மையை காலம் கடந்து தேடி பயனில்லை. அந்தந்த நிமிடங்களிலேயே கொண்டாட வேண்டிய தேவையையும் படம் உணர்த்துகிறது. படம் முடியும் போது இயக்குநர் தன்னுடைய பெயருக்கு கீழ் 'சன் ஆஃப்' என்று அவருடைய தாயின் பெயரை சேர்த்து குறிப்பிட்டுள்ளது, தாய் பாசத்தையொட்டியே இந்த டைம் ட்ராவல் கதையை அவர் வடிவமைத்திருந்ததை புரிந்துகொள்ள முடிகிறது.

சில இடங்களில் பொறுமையாக நகரும் திரைக்கதை, ஓவர் டோஸான சென்டிமென்ட் காட்சிகள், விறுவிறுப்பின் போதாமையை உணர முடிந்தது. பாடலாசிரியர் உமா தேவியின் வரிகளில் 'ஒருமுறை என்ன பாரம்மா' பாடல் திரையரங்கிலிருந்து வெளியே வந்த பிறகும் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை காட்சிகளுக்கான உணர்வனுபவத்தையும், சுஷித் சாரங்கின் கேமிரா கால வெளியின் மாற்றங்களை அழகாக பதிவு செய்திருந்தது.

மொத்தத்தில் டைம் ட்ராவல் கதையை எமோஷனலாக கொண்டு சென்று, ரசிப்பதற்கான காட்சிகளை கொடுத்ததன் மூலம் கணம் இன்னும் கனம் பெறுகிறது. படத்தில் சொல்லவரும் மெசேஜூம் கவனிக்க வைக்கிறது.

விமர்சனத்தை வீடியோ வடிவில் காண :

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE