“வந்தியத்தேவனுக்கு என்னை ‘டிக்’ செய்த ஜெயலலிதா” - ரஜினி பகிர்ந்த நினைவலைகள்

By செய்திப்பிரிவு

சென்னை: வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்டபோது, தன் பெயரை அவர் குறிப்பிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் பூரிப்புடன் பகிர்ந்துகொண்டார்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹசன் இணைந்து படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர். இந்த விழாவில் ரஜினி பேசியது: “இந்தப் படத்திற்கு 3 கதாநாயகர்கள் கல்கி, சுபாஸ்கரன், மணிரத்னம்.

பொன்னியின் செல்வன் கதையை அப்போது வாங்க பெரிய கூட்டம் இருந்தது. அன்று இந்தக் கதையை எடுக்க முடியவில்லை. பார்ட் 1, பார்ட் 2 என்று அப்போது கிடையாது. சுபாஸ்கரன் இந்த மாதிரி படத்தை எடுத்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். லண்டனில் வசிக்கும் சுபாஸ்கரன், ஒரு கால் செய்து பிரிட்டன் பிரதமரை சந்திக்க முடியும். அந்த மாதிரி செல்வாக்கில் உள்ள அவர், இந்தப் படத்தை இங்கே எடுக்க காரணம், மணிரத்னம் என்னும் அசுரத்தனமான இயக்குநர் என்ற நம்பிக்கைதான்.

நான் புத்தகம் நிறைய படிப்பேன். ஆனா, 300 பக்கங்களுக்கு மேல் இருந்தால் படிக்கவே மாட்டேன். எல்லாரும் ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தை படித்தீர்களா என்று கேட்டார்கள். நிறைய பக்கம் இருந்தால் படிக்க மாட்டேன். ‘பொன்னியின் செல்வன் கதையில் உள்ள வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தை யார் நடித்தால் நல்லா இருக்கும்?’ என பத்திரிகை வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு, 'ரஜினிகாந்த்' என ஒரு வரியில் பதில் சொல்லியிருந்தார் ஜெயலலிதா அவர்கள். ‘அடடா’ன்னு எனக்கு ஒரே குஷியாக ஆனது. அன்றுதான் படிக்க ஆரம்பித்தேன். கல்கி இன்று இருந்திருந்தால் அவர் வீடு தேடி போய் காலில் விழுந்து வணங்கி இருப்பேன்.

இந்தக் கதையில், நந்தினிதான் எல்லாமே. ‘பொன்னியின் செல்வி’ என இதற்குப் பெயர் வைத்து இருக்க வேண்டும். இதை வைத்துதான் ‘படையப்பா’ படத்தில் உள்ள நீலாம்பரி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டது. இந்தப் படத்தை முன்பே மணி பிளான் பண்ணும்போது, நான் இந்த பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என கேட்டேன். அவர் ஒப்புக் கொள்ளவே இல்லை. “இதில் நீங்க நடிச்சீங்ன்னா... உங்க ரசிகர்களிடம் நான் திட்டு வாங்கவா? உங்களை இந்த மாதிரி யூஸ் பண்ண நான் விரும்பவில்லை” என்றார்.

வேறு யாராக இருந்தாலும் நான் கேட்டதற்கு வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால், மணி வேண்டாம் என சொன்னார். அதுதான் மணிரத்னம். பழுவேட்டரையராக நான், பொன்னியின் செல்வனாக கமல், ஆதித்யா கரிகாலனாக விஜயகாந்த், குந்தவையாக ஶ்ரீதேவி, நந்தினியாக இந்தி ரேகா, சிறிய பழுவேட்டரையராக சத்யராஜ் என்று இந்த மாதிரி கதாபாத்திரங்கள் அப்போது நான் பிளான் பண்ணும்போது எனக்கு தோன்றியது.

பொன்னியின் செல்வனில் 40-வது அத்தியாயத்தில்தான் அருண்மொழிவர்மன் தோன்றுவார். இந்தப் படத்தில் அவரின் அறிமுகக் காட்சியை மணிரத்னம் எப்படி வைத்திருப்பார் என்று பார்க்க நான் ஆவலாக உள்ளேன்” என்று ரஜினிகாந்த் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE