மாட்டிறைச்சி சர்ச்சை | ரன்பீர், ஆலியாவை உஜ்ஜெய்ன் கோயிலில் தடுத்த இந்து அமைப்பினர்

By செய்திப்பிரிவு

உஜ்ஜெய்ன்: பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், அவரது மனைவியும் நடிகையுமான ஆலியா பட் ஆகிய இருவரையும் உஜ்ஜெய்ன் மகாகாளி கோயிலுக்குள் நுழையவிடாமல் பஜ்ரங் தல அமைப்பினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜெய்னில் உள்ளது மகாகாளி கோயில். இது உலகப் பிரசித்தி பெற்ற தலமாக அறியப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு நேற்று தனது கர்ப்பிணி மனைவி ஆலியா பட்டுடன் வருகை தந்தார் நடிகர் ரன்பீர் கபூர். அப்போது பஜ்ரங் தல அமைப்பினர் ஆலியா, ரன்பீரை மகாகாளி கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. அவர்கள் இந்து விரோதிகள் என்று கோஷமிட்டு கருப்புக் கொடி காட்டினர். இதனையடுத்து அங்கு போலீஸாருடன் சிலர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அப்போது லேசான தடியடி நடத்தப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இது குறித்து பஜ்ரங் தல அமைச்சர் ஒருவர், ''நாங்கள் அமைதியான முறையில் ரன்பீருக்கும், ஆலியாவுக்கும் கருப்புக் கொடி காட்டினோம். ஆனால் போலீஸார் தேவையில்லாமல் எங்கள் மீது தடியடி நடத்தினர். ரன்பீர் கோமாதாவுக்கு எதிராக அவதூறாக பேசினார். அவர் மாட்டிறைச்சி உண்பதை ஆதரித்துப் பேசியுள்ளார். மாட்டிறைச்சி நல்லது என்று கூறியுள்ளார். அவரை மகாகாளி கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம்'' என்றார். ஆனால், ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் போலீஸ் பாதுகாப்புடன் கோயிலில் தரிசனம் மேற்கொண்டு சென்றனர். அவர்கள் நடித்த பிரம்மாஸ்திரா திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு அவர்கள் அங்கு தரிசனம் மேற்கொண்டதாகத் தெரிகிறது.

ரன்பீர் சொன்னது என்ன? கடந்த 2011 ஆம் ஆண்டு ரன்பீர் கபூர் தனது ராக்ஸ்டார் பட புரோமோஷன் விழாவின் போது எனக்கு மாட்டிறைச்சி பிடிக்கும். என் குடும்பம் பெஷாவரில் இருந்து வந்தது. அங்கிருந்து எங்கள் உணவுப் பழக்கமும் சேர்ந்தே வந்தது. எனக்கு மட்டன் பாயாவும், மாட்டிறைச்சியும் பிடிக்கும் என்றார். அவர் 2011ல் பேசிய இந்த வீடியோ தற்போது அவரது பிரம்மாஸ்திரா பட வெளியீட்டுக்கு முன் திடீரென வெளியாகி வைரலாகியுள்ளது. இந்நிலையில் அண்மையில் பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் பாய்காட் ட்ரெண்டை பிரம்மாஸ்திரா படத்திற்கும் சிலர் தொடங்கியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE