லைகர்: தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு கொடுக்க விஜய் தேவரகொண்டா முடிவு

By செய்திப்பிரிவு

'லைகர்' திரைப்படம் நஷ்டமடைந்ததையடுத்து தயாரிப்பாளர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க நடிகர் விஜய் தேவரகொண்டா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் 'லைகர்'. அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பான் இந்தியா முறையில் ரூ.125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான 'லைகர்' வெளியான முதல் நாளே எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. இருப்பினும் முதல்நாள் வசூலாக உலகம் முழுவதும் படம் ரூ.33.12 கோடி ரூபாயை வசூலித்ததாக படத்தை தயாரித்த தர்மா புரொடக்‌ஷன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் வசூல் எண்ணிக்கை கடுமையாக சரிந்தது. அந்த வகையில் தற்போதுவரை வெறும் ரூ.55 கோடியை மட்டுமே படம் வசூலித்துள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா தனது சம்பளத்தில் ஒருபகுதியை சார்மி கவுர் மற்றும் பிற இணைய தயாரிப்பாளர்களுக்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.6 கோடி வரை அவர் நஷ்ட ஈடாக தரலாம் என கூறப்படுகிறது. அதேபோல, படத்தால் நஷ்டத்தை சந்தித்த விநியோகஸ்தர்களுக்கு இழப்பீடு வழங்க இயக்குநர் பூரி ஜெகந்நாத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக படத்தின் தெலுங்கு விநியோகிஸ்தர் வராங்கல் ஸ்ரீனு, லைகர் படத்தால் தன்னுடையை 65% பணம் நஷ்டமடைந்துள்ளதாகவும், அதாவது ஏறக்குறைய ரூ.35 கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE