நட்சத்திரம் நகர்கிறது: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

சினிமாவில் ஹீரோவாகும் கனவுடன் புதுச்சேரி வரும் கலையரசன், அங்கு நாடகக் குழுஒன்றில் இணைகிறார், பயிற்சிக்காக.பல்வேறு பகுதிகளில் இருந்து சிலர் அங்கு கூடுகிறார்கள். அவர்கள் காதல்பற்றி நாடகம் போட நினைக்கிறார்கள். துஷாரா, காளிதாஸ் ஜெயராம், ஹரிகிருஷ்ணன், வினோத், ஞானபிரசாத், சுபத்ரா, சபீர் கல்லாரக்கல் உட்பட அங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் காதல் குறித்து வெவ்வேறு பார்வை இருக்கிறது. அவர்களிடையே, தன்பால் ஈர்ப்பாளர்கள், திருநங்கை உள்ளிட்டோரும் இருக்கிறார்கள். முரண்டுபாடுகளைக் கொண்ட அவர்கள், அந்த நாடகக் காதலை அல்லது காதல் நாடகத்தை நடத்த முடிந்ததா? காதல் குறித்து அவர்கள் எண்ணம் என்னவானது என்பதுதான் படம்.

சாதிய அடுக்குகளுக்குள் அகப்பட்டு, காதல் அந்தரத்தில் எப்படி அனாதையாகத் தொங்குகிறது என்பதையும் காதல் பற்றி பொதுபுத்தி வரையறுத்திருக்கும் பழமை வரையறைகளின் அபத்தங்களையும் அப்பட்டமாகப் பேசியிருக்கிறார், பா.ரஞ்சித். காட்டுப் பூனையாகவும் நாட்டுப்பூனையாகவும் சித்தரிக்கப்படுகிற சாதிய அரசியலை வெளிப்படையாகவே பேசி ’காதல் கிளாஸ்’ எடுக்கிறது, இந்த ’நட்சத்திரம் நகர்கிறது’. தன்பால் ஈர்ப்பாளர்கள், திருநங்கையின் காதலை நாகரிகமாக பேசியிருக்கும் இந்தப் படத்தில், இளையராஜாவின் பாடல்கள் படம் முழுவதும் வருவது ரசிக்க வைக்கிறது.

’சார்பட்டா பரம்பரை’யில் மாரியம்மாவாக வாழ்ந்த துஷாரா இதில், தன் சொந்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட சுதந்திரமானப் பெண். ’சில்லு சில்லாக உடைக்கப்பட்ட கண்ணாடி நான்’ என்று சிறுவயது அவமானங்களையும் தன்னை எப்போதும் துரத்தும் சாதியால் பட்ட துன்பத்தையும் அவர் விளக்கும்போதும் தான் ஒரு ‘அம்பேத்கரைட்’ என்று சொல்லும்போதும் தனது கேரக்டரை வலிமையாக்கி இருக்கிறார்.

இனியனாக காளிதாஸ். துஷாராவைக் காதலித்து பிரேக் அப் ஆகி பிறகு அவரை நினைத்து உருகும் கேரக்டரில் நேர்த்தி. நடிக்க வந்த இடத்துக்குள் நடக்கும் காதல் அரசியல், அரசியல் காதல், தன்பால் ஈர்ப்பாளர்கள், திருநங்கை ஆகியோரைக் கண்டு முழிப்பதும், வீட்டில் தன் காதலைச் சொல்லி மாட்டிக்கொண்டு தவிக்கும்போதும் ரசிக்க வைக்கிறார் கலையரசன்.

டென்மாவின் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு மேலும் உயிரூட்டி இருக்கிறது. கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு கதைக்குள் ரசிகர்களை இழுத்து வைக்கும் பொறுப்பை இனிமையாகச் செய்கிறது. நாடக அரங்கு, சுவரோவியங்கள் என ஜெயரகுவின் கலை இயக்கம் படத்துக்கு நவீனத் தோற்றத்தைத் தருகிறது.

நாடகக் காதல்தான் கதை என்றான பிறகு அதை நோக்கிச் செல்லும் திரைக்கதை, ஒரு கட்டத்தில் நாடகம் பார்க்கும் உணர்வையே தருகிறது. படத்தின் நீளமும் அதற்குக் காரணமாகிவிடுவது சோகம். காதலுக்கு விளக்கம் சொல்கிறேன் என்று பேசும் வசனங்கள் ‘பாடம்’ நடத்துவதாகவே இருப்பதால், பல காட்சிகளில் ஒன்ற முடியாதது படத்தின் பெருங்குறை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE