‘அவள் அப்படித்தான்’ மஞ்சு Vs ‘நட்சத்திரம் நகர்கிறது’ ரெனே - ஓர் ஒப்பீட்டுப் பார்வை

By கலிலுல்லா

திரையரங்குகளில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் 'ரெனே' கதாபாத்திரத்தைக் கண்டபோது, ருத்ரைய்யாவின் 'அவள் அப்படித்தான்' படத்தில் ஸ்ரீப்ரியா நடித்த 'மஞ்சு' கதாபாத்திரம் நினைவுக்கு வந்தது. ஏன்?

தமிழ் சினிமாவின் இரண்டு முக்கியமான பெண் கதாபாத்திரங்களாக 'ரெனே' மற்றும் 'மஞ்சு' கதாபாத்திரங்களை குறிப்பிட முடியும். ருத்ரைய்யாவின் 'அவள் அப்படித்தான்' 'மஞ்சு' கதாபாத்திரத்தின் நவீனமாக காட்சியளிக்கிறார் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் துஷாரா விஜயன் நடித்திருக்கும் 'ரெனே' கதாபாத்திரம். அடிப்படையில் இரண்டு பேரும் ஏதோ ஒரு பாதிப்பிலிருந்து மீண்டு தங்களை வலிமைபடுத்திக்கொண்டவர்கள். தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த உடைந்த கண்ணாடி சில்லுகளை தாங்களை ஒட்டி மறு ஆக்கம் செய்தவர்கள். ஒதுங்கி நின்று அழுது புலம்பத் தெரியாதவர்கள். இரண்டு பேரின் உடல் மொழியிலும் ஒரு கெத்து எப்போதும் தொற்றிக்கொண்டேயிருக்கும்.

'அவள் அப்படித்தான்' மஞ்சு கதாபாத்திரம் காதலனால் பயன்படுத்தப்பட்டு ஏமாந்து நிற்கும்போது கூட, 'அதுக்காக மூக்குறிஞ்சிக்கிட்டு, மூலையில நிற்க கூடாது; எதிர்த்துப் போராடணும்' என தனக்கே உண்டான உடல்மொழியுடன் வெடித்து சிதறுவாள். ரெனே-விடம் அவரது காதலன் அவளது சாதி குறித்து பேசும்போது, யோசிக்காமல் தன் கையிலிருந்த தட்டை எடுத்து இனியன் தலையில் அடிப்பாள். அதற்காகத்தான் சொன்னேன் மஞ்சுவின் நவீன வடிவம்தான் ரெனே. அன்று மஞ்சுக்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்; இன்று ரெனேக்கள் செயல்படுகிறார்கள்.

சொல்லப்போனால் இருவருக்கும் தேங்கி நிற்கத் தெரியாது. நதி போல அடுத்தகட்ட பாதையை தீர்மானித்து பயணிக்கத் தெரிந்தவர்கள். மஞ்சுவை கைவிட்டு மற்றொரு பெண்ணை கமல் கரம்பிடித்தபோதும் கூட அவள் அழுது புலம்பிக் கொண்டிருக்கமாட்டாள். காரிலிருந்து இறங்கி கம்பீரமாக நின்றுகொண்டிருப்பாள். ரெனேவின் பிறப்பு சார்ந்து இனியன் கேள்வி எழுப்பும்போதும் சுயமரியாதைக்காரியான அவள், அந்த உறவிலிருந்து நகர எத்தனிப்பாள். தன் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும்போது அவளால் அந்த உறவில் நீடிக்க முடியாது.

மஞ்சு, ரெனே கதாபாத்திரங்கள் எப்படி ஒரே மாதிரியானவையோ அப்படித்தான் கமலும், காளிதாஸ் ஜெயராமன் கதாபாத்திரங்களும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியானவை. கமல் போலி முற்போக்கு முகமூடியை அணிந்திருப்பார். இனியனின் பேச்சில் பலவீனமான முற்போக்கு அம்சங்கள் நிறையவே இருக்கும். குறிப்பாக ஆணவக்கொலை குறித்து பேசும்போது 'இளவரசன் தற்கொலை செஞ்சிருக்கமாட்டான்' என்பார். உடனே ரெனே, 'அது தற்கொலை இல்ல கொலை' என சீறுவாள். அதேபோல, 'அவள் அப்படித்தான்' படத்தில் ரஜினி பொதுசமூகத்தின் பிரதிநிதியாக படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பார். 'நட்சத்திரம் நகர்கிறது' படத்திலும் கலையரசன் கதாபாத்திரம் கிட்டத்தட்ட அதற்கு நெருக்கமானதுதான்.

அதேபோல, ஓரிடத்தில் கலையரசன், 'நீங்க எந்த ட்ரெஸ் வேணாலும் போடுங்க நான் எதுவும் சொல்ல மாட்டேன்' என கூறும்போது, உடனே மாட்டுக்கறி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ரெனே, 'அது உங்க பிரச்னை அத பத்தி எனக்கென்ன' என அசால்ட்டாக மொக்கை செய்வார். ''கண்ட கண்ட ஆம்பளைங்க கூட சுத்துறா. செக்ஸ பத்தி பேசுறா'' என்று தன் முதுக்குக்குப் புறம்பேசும் சக அலுவலக பெண்ணின் முகத்துக்கு நேரடியாக 'தேவைப்பட்டா உங்க புருஷன்கூட சுத்துவேன்' என்று திக்குமுக்காட வைப்பாள் மஞ்சு. இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இருவரும் பொது சமூகத்தின் அவதூறு, கேலி, கிண்டல்கள் குறித்து ஒருபோதும் கவலைப்படாதவர்கள்.

மஞ்சுவிடமும் சரி, ரெனேவிடமும் சரி பதற்றத்தையோ, பயத்தையோ பார்க்கவே முடியாது. பெரிய அளவில் முகத்தில் உணர்ச்சிகளை வெளிகாட்டமாட்டார்கள். இருவரும் மகிழ்ச்சியின்போது கொண்டாடுவார்கள். துக்கத்தின்போது வீழ்ந்து விடாமல் மாறாக, 'இதுக்கு மேல என்ன நடந்திடபோகுது' என அதை அசால்ட்டாக கையாளும் விதத்தில் இருவரும் இன்ஸ்பிரேஷன்! இரண்டு பேரும் நினைத்ததை செய்பவர்கள்; தோன்றுவதை பேசுபவர்கள்.

மஞ்சுவும் ரெனேவும் தன்னை தாங்களே மீட்டெடுத்துக்கொண்டவர்கள். சமூகம் வரையறைத்துள்ள பெண்களுக்கான கற்பிதங்களை உடைத்து நொறுக்கி வெளியேறுபவர்கள். சுயமரியாதையை உருவாக கொண்ட தமிழ் சினிமாவின் அழுத்தமான கதாபாத்திரங்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE