ராதே ஷ்யாம் டு லைகர்: 2022-ல் படுதோல்வியடைந்த பான் இந்தியா படங்கள்

By கலிலுல்லா

2022-ம் ஆண்டில் வெளியாகி படுதோல்வியடைந்த பான் இந்தியா திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்.

பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’

ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்த திரைப்படம் 'ராதே ஷ்யாம்'. காதல் கதையை மையமாக கொண்ட இந்தப் படத்திற்கு ஒவ்வொரு பாடலுக்கும் தனிதனி இசையமைப்பாளர்கள் இசையமைத்திருந்தனர். பான் இந்தியா முறையில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளத்தில் வெளியான இப்படம் 300 கோடியில் உருவாக்கப்பட்டது. ஆனால், படம் அதில் பாதியை மட்டுமே ஈட்டி பெரும் நஷ்டமடைந்தது.

ரன்பீர் கபூரின் ‘ஷம்ஷேரா’

கரண் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் இரண்டு வேடங்களில் நடித்த திரைப்படம் ‘ஷம்ஷேரா’. ஆதித்யா சோப்ராவின் யாஷ் ராஜ் ஃபிலீம்ஸ் தயாரித்த இப்படத்தில் சஞ்சய் தத், வாணி கபூர் மற்றும் ரோனித் ராய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பான் இந்தியா முறையில் ரூ.150 கோடியில் வெளியான இப்படம் ரூ.60 கோடியை மட்டுமே ஈட்டி பெரும் தோல்வியைச் சந்தித்தது.

அக்‌ஷய் குமாரின் ‘சாம்ராட் பிருத்விராஜ்’

சந்திரபிரகாஷ் திவேதி இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்த திரைப்படம் ‘சாம்ராட் பிருத்விராஜ்’. வரலாற்றை அடிப்படையாக கொண்டு பான் இந்தியா முறையில் வெளியான இப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. ஆனால் மொத்த பட்ஜெட்டில் பாதியை மட்டுமே ஈட்டி பெரும் தோல்வியடைந்தது இப்படம்.

ஆமீர்கானின் ‘லால் சிங் சத்தா’

ஹாலிவுட் க்ளாஸிக் படமான 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் அதிகாரப்பூர்வ தழுவலாக ஆமீர்கான் நடிப்பில் உருவான படம் ‘லால் சிங் சத்தா’. படத்தின் மீதான நேர்மறையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், 'பாய்காட் லால் சிங் சத்தா' என்ற ஹேஷ்டேக்கின் காரணமாக படம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் படத்தில் நடித்ததற்கான ஊதியத்தைக்கூட ஆமீர்கான் வாங்கவில்லை என கூறப்படுகிறது. ரூ.180 கோடியில் உருவான இப்படம் ரூ.120 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’

பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான படம் 'லைகர்'. பான் இந்தியா முறையில் வெளியான இப்படத்தில் அனன்யா பாண்டே, மைக் டைசன், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் உருவாக்கப்பட்ட இப்படம் வெளியான முதல் நாளே எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. ரூ.150 கோடி பட்ஜெட் கொண்ட இப்படம் இதுவரை ரூ.60 கோடியை மட்டுமே வசூலித்து நஷ்டத்தை சந்தித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE