“இந்திய புராணங்கள் பற்றிய கதை இது” - ‘பிரம்மாஸ்திரா’ குறித்து ராஜமௌலி

By செய்திப்பிரிவு

“இந்திய புராணங்களை அடிப்படையாக கொண்ட திரைப்படம் தான் 'பிரம்மாஸ்திரா'”என இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிக்கும் திரைப்படம் 'பிரம்மாஸ்திரா'. இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மெளனி ராய், நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வி.மணிகண்டன், பங்கஜ் குமார் உள்ளிட்ட 5 ஒளிப்பதிவாளர்கள் பணிபுரியும் இந்தப் படத்தின் பாடல்களுக்கு பாலிவுட் இசையமைப்பாளர் ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில், இந்தப் படத்தின் சிறப்புகளை விளக்கி 'பாகுபலி' பட இயக்குநர் ராஜமௌலி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பேசியிருக்கும் காணொலிகளை யூடியூபில் வெளியாகியிருக்கிறது. அதில், “2016-ல் இயக்குநர் அயன் முகர்ஜியை முதன்முதலாகச் சந்தித்தபோது, ‘பிரம்மாஸ்திரா’ படத்தின் கதையை என்னிடம் சொன்னார். அதைக் கேட்டதும் நான் மிகவும் ஆர்வமடைந்தேன். ஏனென்றால், இந்தக் கதை இந்தியப் புராணங்களைப் பற்றியது. பிரம்மாண்டமான கதை என்பதால் விஷூவல் எஃபெக்ட்ஸுக்கு நிறைய வாய்ப்பு இருக்கும் எனத் தோன்றியது. நாம் இதுவரைக்கும் மல்ட்டிவெர்ஸ், மெட்டாவெர்ஸ் எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

இந்தப் படத்தில் நாம் பார்க்கப்போகும் அற்புதம், அஸ்திராவெர்ஸ். ஐம்பூதங்களையும் ஆட்சி செய்யும் பெரிய சக்தியான பிரம்ம சக்தியிலிருந்து வந்த ஆயுதங்கள் பற்றிய, அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி சண்டையிடும் வீரர்களைப் பற்றிய கதைதான் பிரம்மாஸ்திரா” என்றவர் , இந்தியாவில் தயாரான இந்தப் படத்தை டிஸ்னி நிறுவனம் உலகமெங்கும் வெளியிடுவதாகவும் தெரிவித்திருக்கிறார். பாலிவுட் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களைத் தென்னிந்தியாவில் பிரபலப்படுத்த ராஜமௌலியை பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE