“என் இயக்குநரை பார்த்ததில் மகிழ்ச்சி” - பாரதிராஜாவிடம் நலம் விசாரித்த ராதிகா

By செய்திப்பிரிவு

'என் இயக்குநரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. அவர் குணமடைந்து வருகிறார்' என நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

1978-ம் ஆண்டு வெளியான பாரதிராஜாவின் இரண்டாவது படமான 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ராதிகா. இந்தப் படம் பின்னாட்களில் ராதிகாவுக்கு குறிப்பிடத்தகுந்த படமாக அமைந்தது. தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிவைத்த குருநாதர் பாரதிராஜா மீது மிகுந்த மதிப்பு கொண்டவர் ராதிகா. தன் திரைப் பயணத்தின் 42-வது ஆண்டில், ‘நான் நானாக இருப்பதற்குக் காரணம் நீங்கள் மட்டுமே. உங்களுடைய ஆசிகள்தான் என்னைத் தொடர்ந்து இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது’ என பாரதிராஜாவுக்கு நன்றி கூறியிருந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அமைந்த கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் இயக்குநர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் ராதிகா. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பிரார்த்தனைக்கு சக்தி உண்டு, வைப்ரேஷங்களும் உள்ளன. இன்று எனது இயக்குநரைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. அவர் குணமடையும் பாதையில் இருக்கிறார். எப்போதும் நான் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு நபர் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை பார்க்க சகிக்கவில்லை. பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் எம்ஜிஎம் மருத்துவமனையின் கவனிப்புக்கும் நன்றி’ என உருக்கமாகத் தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE